/* */

பஞ்சு இறக்குமதி வரி குறைப்பு : 8 கோடி பேருக்கான மறுவாழ்வு (எக்ஸ்குளுசிவ்)

பஞ்சு இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் மூலம் மத்திய அரசு 8 கோடி பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.

HIGHLIGHTS

பஞ்சு இறக்குமதி வரி குறைப்பு :  8 கோடி பேருக்கான மறுவாழ்வு (எக்ஸ்குளுசிவ்)
X

உள்படம் : தேனி வியாபாரிகள் சங்க தலைவர் கேஎஸ்கே நடேசன்

பஞ்சு விலை உயர்வு ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி எடுத்து விட்டது. கடந்த ஆண்டு ஒரு கண்டி பஞ்சு (370 கிலோ) 47 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தற்போது 98 ஆயிரத்தை தொட்டு விட்டது. இதன் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது தான் மத்திய அரசு வலுவான 'செக்' வைத்தது. சரியான நேரத்தில் மிகச்சரியான நடவடிக்கை எடுத்ததன் மூலம் மத்திய அரசு 8 கோடி பேரின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளது. இது பற்றி மிகப்பெரும்பாலானோருக்கு சரியான புரிதல் இல்லை. இருந்திருந்தால் மத்திய அரசின் சாணக்கியத்தனத்தை கையெடுத்து கும்பிட்டு இருப்பார்கள்.

கார்ப்பரேட்டுகளின் கைங்கர்யம் :

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பருத்தி விளைச்சல் கடும் வீழ்ச்சி அடைந்தது. ஆனால், இந்தியாவில் மட்டும் பருத்தி விளைச்சல் சீராக இருந்தது. எனவே, விவசாயிகள் 4 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய் என விற்றுக்கொண்டிருந்த ஒரு குவிண்டால் பருத்தியின் விலை கடந்த ஆண்டு 9 ஆயிரம் ரூபாயினை எட்டியது. மத்திய அரசின் மினிமம் சப்போர்ட் பிரைஸ் (எம்.எஸ்.பி) ஒரு குவிண்டாலுக்கு 6 ஆயிரத்து 500 ஆக இருந்தது. இந்த விலைக்கு மத்திய அரசின் காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பருத்தி கொள்முதல் செய்தது.

இந்த இடத்தில் தான் கார்ப்பரேட்டுகள் உள்ளே புகுந்தனர். ஒரு குவிண்டால் பருத்தியின் விலையை 12 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி கொள்முதல் செய்தனர். எப்படியோ விவசாயிகளுக்கு விலை கிடைக்கிறதே என மத்திய அரசு மவுனம் சாதித்தது. இந்தியாவில் இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் 3 கோடியே 10 லட்சம் பேல்கள் ஆகும். வழக்கமான விளைச்சலில் இருந்து 40 லட்சம் பேல்கள் விளைச்சல் குறைந்தது. பருவநிலை மாற்றமே இதற்கு காரணம்.

செயற்கை விலையேற்றம் :

இருப்பினும் உள்நாட்டு தேவைக்கு இதுவே போதுமானதாக இருந்தது. ஆனால், கார்ப்பரேட்டுகள் அத்தனை பருத்தியினையும் கொள்முதல் செய்து இருப்பு வைத்து விட்டனர். இதனால் உள்நாட்டு தேவையிலும் பற்றாக்குறை ஏற்பட்டது. அதாவது கார்ப்பரேட்டுகள் பருத்தியினை கொள்முதல் செய்து கள்ள மார்க்கெட்டில் இருப்பு வைத்து செயற்கையான விலையேற்றம் உருவாக்கியதை மத்திய அரசு கவனித்துக் கொண்டே இருந்தது. காரணம் கார்ப்பரேட்டுகளின் பருத்தி கொள்முதல் காரணமாக பருத்தி விவசாயிகள் அத்தனை பேருக்கும் இதுவரை இல்லாத அளவு விலை கிடைத்தது. பருத்தி விவசாயிகள் அத்தனை பேரும் லட்சாதிபதியாகி விட்டனர். இதனால் தான் மத்திய அரசு மவுனம் காத்தது. மத்திய அரசு எதிர்பார்த்தது நடந்து விட்டது.

பருத்தி சீசன் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. முழு பருத்தியும் அறுவடை முடிந்து பருத்தியினை விவசாயிகள் விற்று காசாக்கி விட்டனர். கார்ப்பரேட்டுகள் அடுத்த கேம் விளையாட தயாராகினர். அதாவது விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் முடிந்ததும், அதனை பஞ்சாக மாற்றி இருப்பு வைக்க தொடங்கினர். இதனால் ஒரு கண்டி பஞ்சு (370 கிலோ) விலை 75 ஆயிரத்தை எட்டியது.

நஷ்டத்தில் நிறுவனங்கள் :

கார்ப்பரேட்டுகளோ நாங்கள் விவசாயிகளிடம் வாங்கிய விலை தான் ஒரு கண்டி 75 ஆயிரம் ரூபாய். எங்களது விற்பனை விலை ஒரு கண்டி 98 ஆயிரம் ரூபாய் என ஒரு குண்டை துாக்கி போட்டனர். இதனை கேட்ட அத்தனை ஸ்பின்னிங் மில் முதலாளிகளும் ஆடிப்போயினர். இவ்வளவு விலை கொடுத்து வாங்கி நுால் தயாரித்து துணி தயாரிப்பது இயலாத காரியம். இந்த ஸ்பின்னிங் மில் முதலாளிகள் ஏற்கனவே இருந்த விலையை கணக்கிட்டு, வெளிநாடுகளிடம் இருந்து ஆர்டர்கள் பெற்று விட்டனர். இனி இவர்கள் மூலப்பொருள் எவ்வளவு கொள்முதல் செய்தாலும், உற்பத்தி பொருளின் விலையை உயர்த்த முடியாது. மின்கட்டணம், தொழிலாளர் சம்பளம், போக்குவரத்து கட்டணம் என எதையும் குறைக்க முடியாது. எனவே, நஷ்டத்திற்கு தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஸ்பின்னிங், டெக்ஸ்டைல்ஸ் மில்கள் வந்து விட்டன.

இதற்கிடையி்ல பஞ்சு விலை ஒரு கண்டி ஒரு லட்சத்தி 10 ஆயிரமாக உயர்த்த கார்ப்பரேட்டுகள் முடிவு செய்தனர். இந்த முடிவு அமலானால் இந்தியாவில் 75 சதவீதம் ஸ்பின்னிங், டெக்ஸ்டைல்ஸ் மில்கள் மூடப்பட்டிருக்கும். இந்தியாவி்ல் 8 கோடிப்பேர் வேலைசெய்யும் மிகப்பெரிய ஜவுளித்துறை திவால் நிலைக்கு சென்று கொண்டிருந்தது.

மத்திய அரசின் சரியான முடிவு :

இந்த இடத்தில் தான் மத்திய அரசு துணிச்சலாக முடிவு எடுத்தது. அதாவது பஞ்சு இறக்குமதி வரி 11 சதவீதத்தை தள்ளுபடி செய்து விட்டது. ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு கண்டி பஞ்சு விலை 85 (இறக்குமதி வரியுடன் சேர்த்து) ஆயிரமாக உள்ளது. இது ஒரு உத்தேச மதிப்பீடு தான். தரத்திற்கு ஏற்ப விலையில் மாறுதல்கள் உண்டு. இந்த விலையில் 11 சதவீதம் இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டதால் ஒரு கண்டிக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் விலை மேலும் குறைகிறது.

இங்கு தான் கார்ப்பரேட்டுகளுக்கு மரண அடி விழுந்துள்ளது. இந்தியாவில் விளைச்சல் குறைவு எனக்கூறி விளைந்த பருத்தி முழுவதையும் கொள்முதல் செய்து, இருப்பு வைத்துக் கொண்டு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயர்த்த திட்டமிட்ட கார்ப்பரேட்டுகள் தற்போது விழிபிதுங்கி வருகின்றனர்.

35லட்சம் பேல் அம்'பேல்' :

அவர்கள் பதுக்கி வைத்துள்ளதாக கருதப்படும் 30 முதல் 35 லட்சம் பேல் (ஒரு பேல் 170 கிலோ) பருத்திகளை குறைந்த பட்சம் 45 நாட்களுக்குள் விற்றுத்தீர்க்க வேண்டும். காரணம் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, சீனா நாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி வரியில்லாமல் 45 நாளில் இந்திய மார்க்கெட்டுகளுக்குள் புகுந்து விடும். அப்படி வந்து விட்டால் இந்திய மில்கள் வெளிநாட்டு பருத்தியை தான் வாங்குவார்கள். காரணம் வெளிநாட்டு பருத்தியில் இந்திய பருத்தியை விட நுாற்புத்திறன் மிக அதிகம். அதாவது இந்திய பஞ்சு 100 கிலோவை நுாற்றால் 85 கிலோ நுால் கிடைக்கும். ஆனால் வெளிநாட்டு பஞ்சு 100 கிலோ நுாற்றால் 95 கிலோ நுால் கிடைக்கும். இதிலும் 10 சதவீதம் மில்களுக்கு லாபம். எனவே இந்தியாவில் பதுக்கப்பட்டிருக்கும் பருத்தியை யாரும் வாங்கமாட்டார்கள். அந்த பருத்தி வீணாகி விடும்.

8கோடி பேரின் வாழ்வாதாரம் :

எனவே, வெளிநாட்டு பஞ்சு வரும்முன் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பஞ்சுகளை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் கார்ப்பரேட்டுகளுக்கு உருவாகி விட்டது. அப்படி அவசரமாக விற்கும் போது, அவர்கள் விலையையும் குறைக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகி விட்டது. இதன் மூலம் இந்திய ஸ்பின்னிங் மில்களுக்கு குறைந்த விலைக்கு பருத்தி கிடைக்கும். அவர்களால் குறைந்த விலையில் நுால் நுாற்க முடியும். அந்த நுால் மூலம் குறைந்த விலையில் ஜவுளி தயாரித்து, வெளிநாடுகளில் ஆர்டர்கள் பெற்ற விலைக்கு தர முடியும். இப்படி மில் முதலாளிகள் தலைநிமிரும் போது, அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் 8 கோடிப்பேரின் வாழ்வாதாரமும் புதுப்பிக்கப்படும். இது மிக, மிக நுட்பமான விஷயம். மத்திய அரசு மிகவும் நிதானமாக கவனித்து செயல்பட்டு சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து 8 கோடிப்பேரின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளது. ஆனால் பொத்தாம் பொதுவாக மோடியை குறை சொல்லி, மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் அரசு என கண்மூடித்தனமாக பேசுபவர்களுக்கு இந்த வரிவிலக்கின் அருமை புரியப்போவதில்லை.

ஆனால், வியாபாரிகளும், மில் அதிபர்களும் இதனை நன்கு புரிந்துள்ளனர். இது குறித்து தேனி வியாபாரிகள் சங்க தலைவர் கேஎஸ்கே நடேசன் கூறியதாவது:

உலக அளவில் இந்தியாவி்ல் தான் ஜவுளித்தொழிலில் 8 கோடிப்பேர் பணிபுரிகின்றனர். அதாவது பருத்தி விதை தயாரிப்பில் இருந்து விவசாயம் செய்து, சேகரித்து, விற்பனை செய்து, ஜின்னிங், ஸ்பின்னிங், டெக்ஸ்டைல்ஸ் மில்கள் வழியாக ஜவுளியாக மாறி துணிகளாக மக்களுக்கு சென்று சேரும் வரையில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டும்.

அத்தனை பேரின் வாழ்வாதாரத்தையும் ஒரே வரி விலக்கில் மத்திய அரசு பாதுகாத்துள்ளது. இதற்காக விவசாயிகள், வியாபாரிகள், ஸ்பின்னிங் மில் அதிபர்கள், டெக்ஸ்டைல்ஸ் மில் அதிபர்கள், தொழிலாளர்கள் சார்பில் மோடி அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மோடி தலைமையிலான இந்திய அரசு கொண்டு வந்த விவசாயிகள் சீர்திருத்த சட்டம் மட்டும் அமலாகி இருந்தால் இந்தியாவில் இன்னும் பல கோடிப்பேரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டிருக்கும். எனவே, மீண்டும் மோடி அரசு விவசாயிகளை வாழ வைக்கும் அந்த சட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும். பலர் அந்த சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல், சுயநலத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். இதனால் நாட்டிற்கும் விவசாயிகளுக்கும் தான் இழப்பு. இவ்வாறு கூறினார்.

Updated On: 15 April 2022 11:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு