/* */

மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்; இடைத்தேர்தல் நேரத்தில் ஈரோட்டில் முகாம்

சுண்டக்கா கட்சியெல்லாம் வெண்டைக்கா ரேஞ்சுக்கு துள்ளுறாங்க! பெரிய கட்சிகளோ பண பலத்தையும், படை பலத்தையும் நம்புறாங்க.! ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் இனி தினமும் நடக்கும் அரசியல் கட்சிகளின் கூத்து.

HIGHLIGHTS

மக்கள் பிரச்னைகளை கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்; இடைத்தேர்தல் நேரத்தில் ஈரோட்டில் முகாம்
X

தேர்தல் வந்தால் தான், பல கட்சிகளின் தலைவர்களுக்கு ‘வாக்காளர்கள்’ என்ற பெயரில், மக்கள் இருப்பதே நினைவுக்கு வரும். ( கோப்பு படம்- தமிழக அரசியல் தலைவர்கள்)

கமலஹாசனுக்கு ஒரு கணக்கு! சரத்குமாருக்கு ஒரு சபலம்! தேமுதிக மீண்டும் துளிர்விடத் துடிக்கிறது! பரிதாப நிலையில் பன்னீரும், பாஜகவும்! திமுக ஆட்சியின் அதிருப்திகள் அதிமுகவுக்கு கை கொடுக்குமா என்பதை, ஈரோடு இடைத்தேர்தல் களம் பதில் சொல்லும்.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து காணாமல் போன அரசியல் கட்சிகள் எல்லாம், 'இதோ, நானும் இருக்கிறேன்' எனத் தொடையைத் தட்டிக் கொண்டு, தோளில் துண்டை போட்டுக் கொண்டு தங்கள் இருப்பை காட்டிக் கொள்கின்றன. சாதாரண நேரங்களில் மக்களே தேடிச் சென்றாலும், இவர்களை சந்திக்க முடியாது. மக்களின் முக்கிய பிரச்சினைக்கு ஆதரவாக நிற்கமாட்டார்கள். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பவும் மாட்டார்கள்.

வீட்டு வரி உயர்த்தப்பட்டது, மின்சாரக் கட்டணம் தாறுமாறாக ஏற்றப்பட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டது. அரசுத் துறையில் நிரந்தர வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு அமல்படுத்தி வருவது, காவல்துறை மக்களை காப்பாற்றும் என்ற நிலை மாறி, காவல்துறையிடம் இருந்து மக்களை காப்பாற்ற களம் காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊழல் தலை விரித்தாடுகிறது.

இதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லாமல் இருந்த அரசியல் கட்சிகள், இன்று தேர்தலுக்கு மட்டும் களத்திற்கு வந்து விடுகின்றன. கமிஷன், கரப்ஷன் இல்லாமல் எந்த காரியமும் நடப்பதில்லை என்ற நிலையில் ஓவ்வொரு துறையும் சீர்கெட்டு உள்ளது. இதை மாற்றி, இயல்பு நிலையில் நேர்மையான ஆட்சிக்கு போராட ஒரு துரும்பை கூட எடுத்து போடாத அரசியல் கட்சிகள், தேர்தல் நேரத்தில் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன.

இதில் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் தற்போது திடீர் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. சட்டமன்ற தேர்தல் முடிந்த மே, 2021 தொடங்கி கட்சியே வேண்டாம் எனத் தலை முழுகிவிட்டாரோ என நினைக்கும் வகையில், சினிமாவிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் மிக பிஸியாக இருந்தார் கமலஹாசன். 'விக்ரம் 2' அவருக்கு வசூலில் மிகப் பெரிய ஜாக்பாட் ஆனதில் அடுத்தடுத்த தயாரிப்பு, நடிப்பு என களம் கண்டு கொண்டுள்ளார். கிட்டதட்ட அவருடைய கூடாரத்தில் இருந்த மகேந்திரன் தொடங்கி சரத்பாபு, சி.கே.குமாரவேல், பத்மபிரியா, சந்தோஷ் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் விலகினர். ஏராளமான மாவட்ட செயலாளர்கள் விலகினர். அவரும் விலகிச் செல்பவர்களை 'துரோகிகள்' என வசைபாடினார்.

அடிமட்டத் தொண்டர்கள் பலர் சைலண்டாக மாற்றுக் கட்சியில் சேர்ந்து விட்டனர். தற்போது விரல் விட்டு எண்ணும் வகையில், ஏழெட்டு நிர்வாகிகள் தான் ஏதோ இயங்கிக் கொண்டுள்ளனர். முக்கிய பிரச்சினைகள் வரும் போது, அவர்கள் தான் அறிக்கை எழுதி கமலஹாசனிடம் காண்பித்து வெளியிடுகின்றனர். கமல் டிவிட்டரில் கருத்துகளை பகிர்வதே மாபெரும் அரசியல் பணி என திருப்தி அடைந்து விடுகிறார்.

இந்தச் சூழலில் இடைத் தேர்தலில் அவருக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டு உள்ளது. பெரியாரின் பேரனாக இருந்தாலும், பிறந்து வளர்ந்த மண்ணில் கூட வேரூன்ற முடியாத ஈவிகேஎஸ் இளங்கோவன் கமலஹாசனை தேடிச் சென்று பொன்னாடை போர்த்தி ஆதரவு கேட்டு உள்ளார்.

தங்கள் கட்சியின் ஆதரவை உடனே வெளிப்படுத்தாத கமலஹாசன், பிடி கொடுக்காமல் நிர்வாகிகளுடன் கலந்து பேசி சொல்வதாக வேறு பந்தா காட்டி உள்ளார். உண்மையில் கட்சியை ஒன்மேன் ஷோவாக நடத்துபவர் தான் கமலஹாசன். எந்த முடிவையும் அவர் தான் எடுப்பார். அவர் எடுத்த முடிவை அங்கீகரிப்பதாகத் தான் கட்சி அமைப்பையே வைத்துள்ளார். அப்படி இருந்த போதும் முடிவை சொல்லாதற்கு காரணம், 'சும்மா எல்லாம் ஆதரிக்க முடியாது என்ன தருவாங்க என்று பார்க்கலாம்..' என்பது தானாம். தன் கட்சித் தொண்டனுக்கு பிரச்சாரம் செய்வதற்கே காசு கேட்டு கலெக்சன் பண்ணும் கமலஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பிரச்சாரத்திற்கு அழைத்து, ஆதரவும் கேட்டால், சும்மா தருவாரா?

இந்த நிகழ்வை பார்த்தவுடன் சரத்குமாருக்கு சபலம் வந்துவிட்டது. 'நானும் தான் கட்சி நடத்துகிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். சென்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையமும் நாங்களும் கூட்டு வைத்திருந்தோம். அங்கு மக்கள் நீதி மையம் வாங்கிய பத்தாயிரத்து சொச்சம் வாக்குகளில் எங்கள் பங்கும் கணிசமானது. ஆகவே, நாங்களும் களம் காண உள்ளோம். நிர்வாகிகள் விரும்பினால், நானே நிற்கத் தயார்' என சவுண்ட் விட்டு உள்ளார்.

ஆக, பெரிய கட்சிகளில் ஏதாவது ஒன்று தன்னைத் தேடி வந்து ஆதரவு கேட்க வேண்டும் என நினைக்கிறார். 'ஆன்லைன் ரம்மிக்கு விளம்பர மாடலும் செய்வேன், அரசியல் கட்சிக்கு பிரச்சாரமும் செய்வேன்'. ஆக, மொத்தம் அவருக்கு காசு, துட்டு, மணி, மணி அவ்வளவு தான். கட்சியில அங்க நிற்கிறதுக்கு ஆளே இல்லாத நிலையில் தான் போன முறை அங்கே மக்கள் நீதி மையத்திற்கு தாரை வார்த்தார் என்பது தான் உண்மை.

சென்ற தேர்தலில் இவர்களின் கூட்டணியில் பச்சமுத்துவின் கட்சியும் இருந்தது கவனத்திற்கு உரியது. ஆக, அந்த பத்தாயிரம் ஓட்டை மூவரும் பகிர்ந்தால், ஒருவரின் பங்கு 3,500 ஓட்டுக்கள் எனக் கொள்ளலாம்! அதுவும், இப்போது உறுதியாகுமா எனத் தெரியாது.

சட்டமன்ற தேர்தல் தந்த படுதோல்வியால் சைலண்ட் மூடுக்குப் போய் அவ்வப்போது அறிக்கைகளின் வழியே மட்டும் கட்சி நடத்தி வந்தார் பிரேமலதா. விஜயகாந்தை பொம்மையாக காட்சிப்படுத்திக் கொண்டு, அவ்வப்போது கேப்டன் அறிவுறுத்தலின் பேரில், அவரது வழிகாட்டலின் பேரில் என்று சொல்லி, சீன் காட்டிக் கொண்டு அவர் கட்சி நடத்தும் ஸ்டைலே அலாதியானது தான். இது நாள் வரை அதிமுக கூட்டணியால் அலட்சியபடுத்தப்பட்டு வந்த நிலையில், திமுகவிலும் மரியாதை கிடைக்கவில்லை என்ற நிலையில், இந்த இடைத் தேர்தல் களத்தில் ஒட்டு மொத்த நிர்வாகிகளும் களம் இறங்கி வீடுவீடாக போய் ஜனங்க காலில் விழுந்து எழுந்தால் சில ஆயிரம் ஓட்டுகளை தேற்றிவிடலாம். அதை வைத்துக் கொண்டு அடுத்த தேர்தலில் கூட்டணி பேரம் பேசலாம் என நினைக்கிறார் பிரேமலதா.

அதிமுக கூட்டணியில் தொடர்வதில் தற்போது லாபமில்லை. திமுக கூட்டணிக்குள்ளும் நுழைய முடியல. இந்த ரெண்டுங்கெட்டான் நிலையில், தேர்தலில் நிற்கப் போவது இல்லை என பாமக சொல்லிவிட்டது. இந்த வகையில் தங்களுக்கான வாக்காளர்களை திரிசங்கு நிலைக்கு தள்ளிவிட்டது பாமக.

டிடிவி தினகரனின் அமுமுகவை பொறுத்த அளவில், எடப்பாடியை பலவீனப்படுத்த மட்டுமே இந்த தேர்தலில் களம் காண்கிறது. அங்கே கட்சி பலம் இல்லாத நிலையிலும்.

புதிய கட்சியும் டிடிவி தினகரனைப் போல ஆரம்பிக்க முடியாமல், அதிமுகவிலும் ஐக்கியமாக முடியாமல் பாஜக சார்பில், வலுவான அதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்து வந்த பன்னீர்செல்வம் நிலை தான் இந்த தேர்தலில் பரிதாபமாகி விட்டது. தாங்கள் நின்றால் டெபாசிட் கூட தேறாது என்ற நிலையில் பாஜக நின்றால், ஆதரவு என வலிந்து சொல்லிப் பார்த்தார் ஒ.பி.எஸ். ஆனால், அவரை நம்பி களத்தில் இறங்க பாஜக தயாராக இல்லை. ஒபிஎஸின் ஆதரவைப் பெற்று எடப்பாடி தலைமையின் அதிருப்தியை சந்திக்கவும் துணிவில்லை' என்ற நிலையில், பாஜகவும் களத்தில் இருந்து சூசகமாக விலகிக் கொண்டு, வலுவான அதிமுகவை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அண்ணாமலை பெயர் ரொம்ப டேமெஜ் ஆகியுள்ள நிலையில், பாஜகவுக்கும் களம் காண தைரியமில்லை. 'டெபாசீட் கூட கிடைக்காமல் போனால் இப்ப காட்டுகின்ற கெத்துக்கெல்லாம் அர்த்தம் இல்லாமல் அம்பலப்பட்டு விடுவோம்' என அண்ணாமலை நினைத்திருக்கலாம்.

எடப்பாடியின் அதிமுகவோ, இது நாள் வரை உண்மையான எதிர்கட்சியின் பாத்திரத்தை கூட செய்யாமல் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க திமுகவை சரிகட்டி தப்பித்துக் கொள்வதில் தான் குறியாக இருந்தது. மக்கள் பிரச்சினையில் கடுகளவும் அக்கறையே காட்டவில்லை. கள்ளக்குறிச்சி நிகழ்வில் குற்றவாளிக்கு ஆதரவாக மவுனம் சாதித்தது. வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததில் அதிமுகவின் பஞ்சாயத்து தலைவர் முத்தையா தான் சம்பந்தப்பட்டுள்ளார் எனத் தெரியவந்தும், அவரை கண்டிக்கவோ, கட்சியில் இருந்து நீக்கவோ துணிவில்லாமல் அமைதி காக்கிறது. சேர்த்த ஊழல் பணம் இருக்கும் நம்பிக்கையிலும், பாரம்பரிய அதிமுக ஓட்டுகளும், திமுக ஆட்சியின் அதிருப்தி ஓட்டுகளும் எப்படியும் நமக்கே வரும் என்ற தெனாவட்டிலும் எடப்பாடியின் அதிமுக களம் காண்கிறது. அதே சமயம் சீமானும் திமுக அரசின் அதிருப்தி ஓட்டை கணிசமாக பிரிப்பார். அவர் என்ன நிலைபாடு எடுக்கப் போகிறார் என போக போகத்தான் தெரியும்.

திமுகவை பொறுத்த வரை அவர்கள் நேர்மையான நல்லாட்சி தரவில்லை என நன்கு தெரிந்த நிலையில் தான் பெரும் அமைச்சர்கள் பட்டாளமே களம் இறங்குகிறது. காங்கிரஸ் வெற்றி என்பது திமுக ஆட்சியின் கவுரவப் பிரச்சினையாகி விட்டது. ஆட்சி பலம், பணபலம், படைபலம், கடும் உழைப்பு ஆகியவற்றால் வெற்றியை தட்டிக் கொள்ளலாம் என நினைக்கிறது. இந்த தேர்தலில் திராவிட இயக்க சித்தாந்தங்களை வெறுமே வாக்குகளுக்கான துருப்பு சீட்டாக திமுக பயன்படுத்துவது சற்று கஷ்டம். ஊழல் அதிமுகவின் அமைச்சர்கள் யாரையுமே கைது செய்ய துப்பில்லாமல், கமிஷன் வாங்கிக் கொண்டு 'கப்சிப்' ஆனதும், பாஜக விஷயத்தில் பணிந்து கிடப்பதும் திமுகவின் வெற்றியை பாதிக்க கூடிய அம்சங்களாக இருக்கும்.

நன்றி: -சாவித்திரி கண்ணன்

Updated On: 25 Jan 2023 3:12 AM GMT

Related News

Latest News

  1. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  2. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  3. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  4. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  5. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  6. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  8. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  9. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...