/* */

தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா பார்க்க மதுரை வாரீங்களா....

மதுரையில் நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் விழா தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா ஆகும்.

HIGHLIGHTS

தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா பார்க்க மதுரை வாரீங்களா....
X

பைல் படம்.

மதுரையில் இந்த விழா 500 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரியதிருவிழா இந்த விழா தற்போது நடந்து வருகிறது. மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் இந்த ஆண்டு மே 2ம் தேதி நடக்கிறது. தங்கை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வரும் அழகரை மணக்கோலத்தில் மீனாட்சியும், சொக்கனும் வரவேற்கும் விழாவும், அழகர் ஆற்றில் இறங்கி தன் பக்தர்களை ஆசீர்வதிக்கும் விழாவும் மே 5ம் தேதி சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது. மே 4ம் தேதி அழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை விழாவும் நடக்கிறது. குறைந்தது இந்த விழாக்களை காண மதுரையில் ஒரு வாரத்திற்கும் மேலாக சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்திருப்பார்கள்.

இந்த விழாவின் கொண்டாட்டங்களை காண கோடி கண்கள் வேண்டும். இது பற்றி பார்க்கலாம்.... மதுரை புதூர்ல ஒரு பைக்கை எடுத்தா இருபது நிமிஷத்துல அழகர் கோவிலுக்குப் போயிடலாம். வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு. ஆனால், அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்....தங்கச்சி மீனாச்சி கல்யாணத்தப் பாக்க ஆசப்பட்டு அழகர்மலையில இருந்து மதுரைக்கு கிளம்புவாரு… அழகரா இருந்தாலும் சும்மால்லாம் கிளம்பிட முடியாது.

அங்க காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்புகிட்ட உத்தரவு வாங்கிட்டு தான் கிளம்ப முடியும். அங்க இருக்கிற ஒத்த கருப்ப சாமி ஓராயிரம் கருப்பசாமியா மாறி பக்தர்களுக்குள்ள இறங்கி பாதுகாப்புக்குக் கூடவே வரும். சாமி இறங்கினவங்க ’திரி’ப் பந்தம் ஏந்தி, கையில் மொரட்டு அருவாளைத் தூக்கிக்கிட்டு கருப்பன் அருளோட சாமியாடிட்டு வருவதை எதிரில் நின்னு பார்த்தா அடிவயித்துல அமிலம் சுரக்கும்.

வருஷத்துக்கொரு தடவ வெளியே வர்ற அழகரை சும்மா விட்டுட முடியுமா? வர்ற வழியில கள்ளந்திரி, அப்பன் திருப்பதின்னு எல்லா ஊர்லயும் மண்டகப்படி போட்டு மரியாத பண்ணி கொஞ்சிக் கூத்தாடும் பக்தர்களின் அன்பில் சிக்கி தங்கச்சி கல்யாணத்துக்கு நேரத்துக்குப் போகணும்ங்கிறதையே மறந்துடுவாரு.

இந்தப் பக்கம் எங்க ஆத்தா மீனாச்சிக்கும், எங்கப்பன் சொக்கனுக்கும் கல்யாணம் நடந்திடும். எங்க வீட்டுக் கல்யாணக் கொண்டாட்டத்துல அந்தப் பக்கம் அழகர் இன்னும் வரலைங்குறதையே இவங்களும் மறந்துடுவாய்ங்க… மங்கையர்க்கரசி திருக்கல்யாணத்துக்காகவே வருஷம் பூராம் காத்திருந்து மதுரை மகராசிக பூராம் மாங்கல்யம் மாத்துவாங்க. அதாவது, அன்னிக்கு அம்புட்டு வீட்லயும் கல்யாணம் தான் ஆத்தாவையும் அப்பனையும் தேர்ல வச்சு ஊர்வலம் சுத்தி வந்தப்புறம் தான், ஐய்யய்யோ அழகரு வாராம எல்லாம் நடந்துடுச்சேன்னு இவங்களுக்கு சுருக்குனு இருக்கும்.

இருந்தாலும் எப்படியாவது சமாதானப்படுத்துவோம்னு தென்கரையில நினைச்சுட்டு இருக்கிற நேரத்துல, வடகரையில அழகரு ஆடி அசஞ்சு மதுரைக்குள்ள வந்துடுவாரு. இராத்திரி கொஞ்சம் காலாறுவோம்னு தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு போயிட்டு, அங்க ஏற்கனவே வந்து காத்திருக்கும் நம்ம ஆண்டாள் நாச்சியின் மாலைய தோளில் வாங்கிச் சாத்திக்கிட்டு, மறுபடி தங்கக் குதிரையில ஏறி கோயில விட்டு வெளியே வரும் அழகைப் பார்த்ததும், ” கோயிந்தா…. கோய்ய்ந்தோவ்வ்வ்”னு இலட்சக்கணக்கான குரல்கள் ஒன்னா கூப்பிடும் பாருங்க….. ஆத்மா சிலிர்த்தெழுறதுன்னா என்னானு அப்ப தெரியும். சித்திர மாசக் கத்திரி வெயிலுல இத்தன இலட்சம் பேரு கூடியிருந்தா வெந்து போயிட மாட்டீங்களானு வெளியூர்க்காரங்களுக்கு தோணலாம். ஆனால், தண்ணீர் பீச்சும் பக்தர்கள் தோள் வலிக்க வலிக்க சந்தோசமா தோப்பறையில தண்ணிய நெப்பிக்கிட்டு ரோட்டிலேயும் ஆகாசத்திலும் தண்ணியப் பீச்சிப் பீச்சு மதுரையவே குளிர வச்சுடுவாங்க… (தோலினால் செய்யப்பட்ட பை. ஒரு பக்கம் பெரிய துவாரம் வழியாக நீரை ஊற்றி அடைத்துவிட்டு இன்னொரு பக்கம் சின்னதா ஒரு துவாரம் வழியாக நீரினைப் பீச்சி அடிப்பது).

இப்படி ஒவ்வொரு மண்டகப்படியா அழகரை இழுத்துப் பிடிச்சு வாங்கய்யா வாங்கய்யானு மதுரக்காரய்ங்க பாசத்தைக் கொட்டிக் கொட்டி அலைக்கழிச்சு ஆத்துக்குள்ள இறங்கிறப்ப விடிஞ்சுடும்… விடியக்காலம் அழகர் ஆற்றில் இறங்கும் போது ஒட்டு மொத்த மதுரையும், இலட்சக்கணக்கான குரலில் அடிமனசிலிருந்து “ கோவிந்தாஆஆஆஆ…..”னு கூப்பிடும் போது பாற்கடலிலிருந்து பரந்தாமன் லேசா திரும்பி மதுரையைப் பாப்பாரு… எங்க அழகர் தங்கக் குதிரையில் பட்டுடுத்தி, பவனிக்கும் அழகில் மயங்கி மறுபடி சயனத்துக்கே போயிருவாரு.

இதான் எங்க ஊரு திருவிழா...உலகில் வேறெங்கும் இவ்வளவு உயிரோட்டமாய் ஒரு திருவிழா சாத்தியப்படுமா..?தெரிலை... எங்க பெண் வாரிசுகளை மீனாட்சியாகவும்..ஆண் வாரிசை அழகராகவும் கொண்டாடுவோம்பா..ஒட்டு மொத்த மதுரை மக்களின் பொதுவான குலதெய்வமாய் அழகரும் மீனாட்சியும் கொண்டாடுவோம்..எங்க மதுரை எங்கள் சொர்க்கம் பா..... இந்த ஆண்டு விழாவிற்கு நீங்களும் வாங்களேன்...

Updated On: 28 April 2023 6:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!