/* */

இப்போ இல்லேன்னா எப்போ? கல்வித்துறையின் கண்டிப்பு காலத்தின் கட்டாயம்

மாணவர்களின் ஒழுங்கீனமான நடவடிக்கையை தடுக்க கல்வித்துறை சில கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது தற்போதைய தேவை

HIGHLIGHTS

இப்போ இல்லேன்னா எப்போ? கல்வித்துறையின் கண்டிப்பு காலத்தின்  கட்டாயம்
X
  • தேனி அரசுப்பள்ளியில் ஆசிரியையிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் மாணவன்.
  • திருப்பத்தூரில் ஆசிரியரை அடிக்கப்பாயும் மாணவன்
  • வேலூரில் பள்ளி இருக்கையை உடைக்கும் மாணவர்கள்
  • செங்கத்தில் சக மாணவர்களை ராகிங் செய்யும் மாணவர்கள்,

சமீப காலமாக இதுபோன்ற செய்திகளை சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சியிலும் அடிக்கடி பார்க்கிறோம். மாணவர்களின் இதுபோன்ற ஒழுக்க சீர்கேட்டிற்கு யார் காரணம் என சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றமே நடத்தலாம். சினிமாவைப் பார்த்து ஹீரோயிசம் காட்ட நினைப்பது, சக மாணவர்கள் மத்தியில் தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள விழைவது போன்றவை காரணமாக இருந்தாலும், தற்போதைய நிலைக்கு வேறொரு காரணமும் உள்ளது.

ஆசிரியரை அடிக்கப் பாயும் மாணவன்

கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் வீட்டிலேயே இருந்து, ஆன்லைன் மூலமாக கல்வி கற்கத் தொடங்கியது தான், இந்த பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம். பள்ளிக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்து கொண்டு, மொபைலில் தேவையற்றதை பார்த்து கெட்டுப் போனவர்களே அதிகம்.

மேலும், ஜாலியாக வீட்டில் இருந்து கொண்டும், ஊர் சுற்றிக்கொண்டுமிருந்த மாணவர்கள் தற்போது பள்ளிக்கு வரத்தொடங்கியதும் அவர்களை கட்டுப்படுத்த ஆசிரியர்களால் இயலவில்லை. மாணவர்களின் ஒழுங்கீனத்தை ஆசிரியர்கள் தட்டிக்கேட்க சட்டம் இடம் கொடுக்கவில்லை.

வகுப்பறையில் இருக்கையை உடைக்கும் மாணவர்கள்

தண்டிக்கத்தான் அதிகாரம் கிடையாது, கண்டிப்பதற்கு கூடவா கிடையாது. கல்வி கற்று தரும் ஆசான், எதையும் தட்டிக் கேட்காமல் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பது சொல்வதற்கு சுலபமாக இருக்கும். நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்பது கல்வித்துறைக்கு தெரியாதா?

நீதி தேவதை பாரபட்சம் பார்க்கக்கூடாது என்பதற்காக கண்களை கட்டியிருப்பார்கள். ஆனால், ஒழுங்கீனமான மாணவனை கண்டிக்கக் கூட முடியாமல் ஆசிரியர்களின் கைகளை கட்டிப் போட்டிருப்பது எந்த விதத்தில் நியாயம்? தன் கண் முன்னே நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்க முடியாமல், கையறு நிலையில் உள்ள ஆசிரியரால் எவ்வாறு ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க முடியும்?

கல்வி என்பது மதிப்பெண் பெறுவது மட்டும் தானா? ஒழுக்கம் என்பது கல்வி கற்றலில் இடம் பெறாதா? மாணவர்களின் கல்வி என்பது இந்த சமூகத்தின் எதிர்காலம். நாட்டின் எதிர்காலம். மாதமானால் சம்பளம் வந்தால் போதும் என்று இருக்கவா ஆசிரியர் தொழில்?

இதற்கு தீர்வு தான் என்ன?

இந்த சமயத்தில் தமிழக முதல்வரும், கல்வித்துறை அமைச்சரும் மனது வைத்தால், இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

இந்த கல்வியாண்டு முடிந்து விட்டது. அடுத்த கல்வியாண்டு முதல் ஒருசில கட்டுப்பாடுகளை விதித்தால் இது போன்ற ஒழுங்கீனமான நடத்தைகள் நடக்காது. தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால், ஒழுக்கமான மாணவர்களை உருவாக்க முடியும்.

முதலில் தலையில் இருந்து ஆரம்பிக்கலாம்.

  • பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை சீராக வெட்டிக்கொண்டு வர வேண்டும். தற்போதுள்ள விதவிதமான சிகை அலங்காரங்கள் கூடவே கூடாது. Box Cutting, One Side Cutting, V-Cutting, Spike போன்ற தலை அலங்காரங்களை அனுமதிக்கக்கூடாது. மீறினால், பள்ளிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
  • உடையை பொருத்தமட்டில், உள்ளாடை தெரியும்படி கால்சட்டை அணிவதை தற்போது மாணவர்கள் மேற்கொள்கிறார்கள். இதனையும் ஒரு உத்தரவின்பேரில் மாற்றிவிடலாம்.
  • தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்க ஒரு சில அதிகாரங்கள் வழங்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை வாங்க வேண்டும்.
  • பள்ளிக்கு அலைபேசி கொண்டு வருவது தடை செய்யப்பட வேண்டும். இதற்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
  • சாதிரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்களிடம் அதனைப்பற்றி எடுத்துக் கூறி, மீண்டும் அதே போல நடந்தால், பள்ளியில் இருந்து நீக்க தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் தமிழக முதல்வரும், கல்வித்துறை அமைச்சரும் ஒரே ஒரு உத்தரவின்பேரில் நடைமுறைப்படுத்த முடியும்.

ஏனெனில், எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பது பழமொழி. நமக்கு தேவை பண்பாடுள்ள ஒழுக்கமான கல்வி தான். ஒழுக்கம் இருக்கும் இடத்தில் கல்வி தானாக வெளிப்படும்.

இவற்றை நடைமுறைப்படுத்தும்போது சமூகத்தில் இருந்தும் ஆதரவு கிடைக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு சீருடை தைக்கும் தையல்காரர், மாணவன் விருப்பம்போல் தைக்காமல், எது படிக்கும் மாணவனுக்கு சரியோ அதே போல் தைத்துத் தர வேண்டும்.

சலூன் கடைக்காரரும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சூழலுக்கு ஏற்றவாறே சிகையலங்காரம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விலையுயர்ந்த அலைபேசி வாங்கித் தராமல், அவர்களுக்கு மடிக்கணினி வாங்கித் தந்தால், வீட்டில் உங்கள் கண்காணிப்பில் அதனை அவர்களால் பயன்படுத்த முடியும். இப்போது மடிக்கணினியிலேயே வாட்ஸ்அப், ட்விட்டர் எல்லாம் கிடைக்கும்.

பெற்றோர்கள் தங்கள் செல்லப்பிள்ளைக்கு விலையுயர்ந்த வாகனம் வாங்கிக் கொடுத்து அவர்களை சீரழிக்க வேண்டாம். காவல்துறையினரும் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தால், அவர்களது பெற்றோர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். இவை மோட்டார் வாகன சட்டத்தில் உள்ளது. அவற்றை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆனால் இவற்றை எதிர்ப்பதற்கும் ஒரு கூட்டம் கிளம்பும், மாணவர்கள் உரிமை பறி போகிறது என்று. ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த ஆசிரியர் இனத்துக்கே கட்டுப்பாடு விதிப்பது நியாயம் என்றால், ஒரு சில மாணவர்கள் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் கட்டுப்பாடு விதிப்பது எப்படி தவறாகும்?

சாலையில் வேகத்தடை அமைப்பது, வேகமாக செல்லும் வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தவே. ஆனால், மிதமான வேகத்தில் செல்பவர், நான் மெதுவாகத்தானே செல்கிறேன், எனக்கெதுக்கு வேகத்தடை என கேட்க முடியுமா?

கட்டுப்பாடு என்பது ஒரு சிலர் தவறு செய்கிறார்கள் என்பதற்காக அல்ல, மற்றவர்கள் அதே போல செய்யக் கூடாது என்பதற்காகத்தான். கட்டுப்பாடு என்பது ஓரு கயிறு. அந்த கட்டுப்பாடு என்னும் கயிறு இருந்தால் தான் தலைச்சசுமையை நேர்த்தியாக கொண்டு சேர்க்கமுடியும். சமூகத்திலும் கட்டுப்பாடு என்பது சீர்திருத்தும் ஒரு கயிறுதான். சாலையில் இடதுபுறம் செல்ல வேண்டு என்ற கட்டுப்பாடு இருப்பதால்தான் வாகனங்கள் சீராக செல்ல முடிகிறது. கட்டுப்பாடு என்னும் விதிகள்தான் விபத்தில்லா பயணங்களை தீர்மானிக்கின்றன.

தமிழக முதல்வரும், கல்வித்துறை அமைச்சரும் இந்த சீர்திருத்தங்களை கொண்டுவந்தால் தலைமுறை வாழ்த்துச் சொல்லும்.

Updated On: 26 April 2022 9:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?