/* */

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி குறிவைக்கும் அந்த எட்டு எம்.பி.தொகுதிகள்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி 8 எம்.பி.தொகுதிகளை குறி வைத்து தேர்தல் பணியை தொடங்கி உள்ளது.

HIGHLIGHTS

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி குறிவைக்கும் அந்த எட்டு எம்.பி.தொகுதிகள்
X

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் குறிப்பாக தேசிய கட்சிகளான பாரதிய ஜனதாவும், காங்கிரஸும் இப்பொழுதே தங்களது வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டனர். அதன் வெளிப்பாடுதான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழகத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியில் இருந்து தனது ஒற்றுமை பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

ராகுல் காந்தி ஒற்றுமை பயணத்தை தமிழகத்திலிருந்து ஏன் தொடங்கினார் என்றால் காங்கிரஸ் இன்னமும் உயிரோட்டமாக இருப்பது கேரள மாநிலத்திலும் தமிழகத்திலும் தான். அதனால் தான் இந்த இரு மாநிலங்களின் வழியாக தனது நடை பயணத்தின் பெரும்பகுதியை செலவிட்டு வருகிறார். காங்கிரசின் கோட்டை, காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதி என்றெல்லாம் போற்றப்படும் உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் அவர் என்று தோல்வியை தழுவினாரோ அன்றே அவர் வடநாட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு காங்கிரஸின் பிடி உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தளர்ந்து வருகிறது.

அதே நேரத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள பாரதிய ஜனதாவும் வட மாநிலங்களில் வலுவாக கோலோச்சி வந்தாலும் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா ,ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இதுவரை சரியாக கால் ஊன்ற கூட முடியவில்லை. அதற்கு காரணம் கேரளாவில் இடதுசாரி இயக்கமும் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிட கட்சிகளும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் அங்குள்ள மாநில கட்சிகளும் வலுவாக இருப்பதால் பா.ஜ‌க.வின் பாச்சா இங்கு இதுவரை பலிக்கவில்லை. இது கடந்த தேர்தலில் அவர்களுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமல் போனதால் வெளிப்படையாக தெரிந்தது. இந்த மாநிலங்களில் சொந்தமாக கால் போன்ற முடியவில்லை என்றாலும் மாநில கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தாவது நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. இப்போது திட்டமிட்டு விட்டது.


அதனால் தான் டெல்லியில் இருந்து பா.ஜ.க. முன்னணி தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் தமிழகத்தை குறிவைத்து வந்த வண்ணம் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே. பி. நட்டா மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அவர் அளித்த பேட்டி சர்ச்சைக்குரியதாகிவிட்டது. அதற்காக அவர்கள் சோர்ந்து போய்விடவில்லை. இது அரசியல் ரீதியாக திராவிட கட்சிகளால் திரித்து கூறப்பட்டு வருகிறது என பதில் அளித்து இருக்கிறார்கள்.

2019 நாடாளுமன்றத் தேர்தல்போல ௨௦௨௪ நாடாளுமன்ற தேர்ததலை நாங்கள் விட்டுவிட மாட்டோம். தனியாக நின்றால் கூட 10 தொகுதிகளில் நிச்சயமாக ஜெயிப்போம். 2024 தேர்தலில் எங்களோட இலக்குல தமிழ்நாடும் முக்கியமான இடத்துல இருக்கு. அதுக்கான வேலைகளை இப்போதே தொடங்கிட்டோம். நட்டாஜி சுற்றுப்பயணம், மத்திய அமைச்சர்கள் வருகைன்னு அடுத்தடுத்து பல திட்டங்கள் இருக்கு' என மிகவும் உற்சாகமாகப் பேசுகிறார்கள் தமிழக பா.ஜ.க-வினர்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி பா.ஜ.க-வில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு இரண்டுநாள் சுற்றுப்பயணமாக, கடந்த வியாழக்கிழமை வந்தடைந்தார் ஜெ.பி.நட்டா. மதுரை மற்றும் காரைக்குடியில் நடைபெற்ற பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்றார். நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதுஒருபுறமிருக்க, இந்தமுறை தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தைக் குறிவைத்து பா.ஜ.க பல்வேறு வியூகங்களை வகுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கடந்தமாதம், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பை ஆய்வு செய்தார். அதேபோல, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜிதேந்தர் சிங், கிஷன் ரெட்டி உள்ளிட்டவர்களும் தமிழ்நாட்டுக்கு வருகைதந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இன்னும் அடுத்தடுத்த நாள்களில் மத்திய அமைச்சர்கள் பலர் தமிழகத்தை நோக்கி படையெடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மத்திய அமைச்சர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்து பா.ஜ.க வட்டாரத்தில் பேசியபோது ஹைதராபாத்துல நடந்த எங்க கட்சியோட செயற்குழு கூட்டத்துல அமித் ஷா தெளிவாக சொல்லிட்டாரு. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த பல்வேறு திட்டங்களை வகுக்க ஆரம்பிச்சு வேலைகளைத் தொடங்கிட்டோம்.

இந்தியா முழுவதும் கடந்த தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்துல வெற்றி வாய்ப்பை இழந்த 144 தொகுதிகளைக் குறிவைச்சு, மத்திய அமைச்சர்களுக்கு அந்தத் தொகுதிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு வேலைகள் நடந்து வருகிறது.

இந்தியா முழுவதும் எங்களது கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்கள்தான் எங்கள் அடுத்த இலக்கு. தமிழ்நாடும் அந்த பட்டியலில் இருக்கிறது. இந்தமுறை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கூட்டணியில நின்னாலும் சரி, தனியா நின்னாலும் எட்டுத் தொகுதிகள் எங்களோட இலக்கு. கோயம்புத்தூர், சிவகங்கை , கன்னியாகுமரி, ஈரோடு, இராமநாதபுரம், தென்காசி, மதுரை, நீலகிரி ஆகிய இந்த எட்டுத் தொகுதியில் அதிக கவனம் செலுத்த முடிவு செஞ்சிருக்கோம்.


இந்த எட்டுத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஒரு மத்திய அமைச்சர் நியமிக்கப்படுவாங்க. அங்க பா.ஜ.க-வோடு திட்டங்களை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கிறது, நிதியுதவி செய்யுறது போன்ற வேலைகளை மேற்பார்வையிடுவாங்க. வடகிழக்கு மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த இந்த யுக்தி எங்களுக்குப் பெரியளவுல கைகொடுத்துச்சு. அது தமிழ்நாட்டுலயும் கைகொடுக்கும்னு நம்புறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களோடு எங்க கணக்தைத் தொடங்கின மாதிரி இந்தமுறை எட்டுத் தொகுதிகளோடு கணக்கைத் தொடங்குவோம்.

நட்டாஜியோட தமிழகப் பயணம் மக்கள் மத்தியில எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துச்சுன்னு தெரியல, ஆனால் எங்கள் கட்சி நிர்வாகிகளை ரொம்பவும் உற்சாகமடைய வச்சிருக்கு. ஒவ்வொரு அணிகளைச் சேர்ந்த தலைவர்களையும், பூத் கமிட்டியைச் சேர்ந்த நிர்வாகிகளையும் சந்திச்சு நட்டாஜி பேசியிருக்கார். நிச்சயமா எங்க ஆட்கள் இன்னும் தீவிரமாக களப்பணியில இறங்குவாங்க. கடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல கோட்டைவிட்ட மாதிரி இந்தமுறை விடமாட்டோம்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் எங்களது கூட்டணி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்று தான் நினைக்கிறோம். எடப்பாடி பழனிசாமி -அமித்ஷா சந்திப்பு மூலம் அ.தி.மு.க.வுடனான கூட்டு உறுதியாகி இருக்கிறது. அ.தி.மு.க.வில் உள்ள கோஷ்டி பிரச்சினை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இரட்டை இலை சின்னம் யாரிடம் உள்ளதோ அவர்களுடன் தான் எங்கள் கூட்டணி இருக்கும் என்றார்கள் உற்சாகமாக.

Updated On: 27 Sep 2022 5:40 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?