/* */

இந்தியை திணிக்கும் முயற்சி நாட்டை பிளவுபடுத்தும் செயல்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

இந்திய அரசமைப்புச் சட்டம் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள்

HIGHLIGHTS

இந்தியை திணிக்கும் முயற்சி நாட்டை பிளவுபடுத்தும் செயல்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
X

முதல்வர் ஸ்டாலின்,  பிரதமர் மோடி,

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தியை பயிற்று மொழியாக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரைத்திருந்த நிலையில், இந்தியை திணிக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களது தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளது.

அதேபோன்று, இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பரிந்துரைகள், இளைஞர்கள் இந்தி படித்திருந்தால் மட்டுமே சில வேலைகளுக்குத் தகுதி பெறுவார்கள் என்றும், ஆட்சேர்ப்பிற்கான தேர்வின்போது, கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இவையனைத்தும் நமது அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானவை, நமது தேசத்தின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்திடும்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன/ இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள். இந்த அட்டவணையில் இன்னும் சில மொழிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று பல கோரிக்கைகள் உள்ளது.

இந்திய மத்தியத்தில் இந்தி பேசுகிற மக்களின் எண்ணிக்கையைவிட, இந்தி அல்லாத மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய சிறப்பு இருக்கிறது: தனித்துவம் இருக்கிறது: மொழிவழிப் பண்பாடு இருக்கிறது. இந்தி ஆதிக்கத்திலிருந்து நமது வளமான மற்றும் தனித்துவமான மொழிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன்தான், ஆங்கிலம் இணைப்பு மொழியாக ஆக்கப்பட்டு, மத்திய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கிறது.

தமிழ் மட்டுமின்றி, அனைத்து மாநில மொழிகளின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமிழ்நாடு தொடர்ந்து வலுவாகக் குரல் கொடுத்து வருகிறது. 1965 ஆம் ஆண்டில் இந்தித் திணிப்புக்கு எதிராகவும். தாய்மொழியான தமிழைப் பாதுகாக்கவும் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்த மொழிப்போரில் பல தீரமிகு இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். அவர்களுடைய உணர்வுகளை மதித்து, இந்திய ஒற்றுமையையும். நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்ட அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், "இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழிகளில் ஒன்றாக இருக்கும்" என்று உறுதியளித்தார்.

அதைத் தொடர்ந்து, 1968 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில், அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதனடிப்படையில் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி, மத்திய அரசுப் பணிகளில், ஆங்கிலம் மற்றும் இந்தி என இரு மொழிகளையும் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலைப்பாடு தொடர்ந்து அனைத்து நிலைகளிலும் நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

இந்தியைத் திணிப்பதற்கான சமீபத்திய முயற்சிகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை, அவை நாட்டினை பிளவுபடுத்தும் தன்மை கொண்டவை. இது இந்தி பேசாத மக்களை பல விஷயங்களில் இரண்டாந்தர குடிமக்கள் போல ஆக்கும் தன்மை கொண்டவை என்றும், இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்திற்கும் ஏற்புடையதாக இருக்காது என்று கூறியுள்ளார்

வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். வளமான மற்றும் பல்வேறுபட்ட கலாச்சாரப் பன்முகத்தன்மையை. அந்தந்த தனித்துவமான மொழியியல் சுவைகளுடன் ஊக்குவிப்பது என்பது, இந்தியத் துணைக்கண்டத்தின் பெருமையும் வலிமையும் ஆகும். இது உலக அரங்கில் பலவித பண்பாடுகள் மற்றும் மொழிகள் கொண்ட ஜனநாயக நாடுகளுக்கு ஒரு வலுவான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. 'ஒரே நாடு' என்ற பெயரில், இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகள். பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாடுகளைக் கொண்ட இந்திய மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை சிதைப்பதோடு, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைப்பதாக அமைந்திடும் என அஞ்சுகிறேன் என கூறியுள்ளார்

Updated On: 16 Oct 2022 12:11 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  6. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  7. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  8. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  9. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து