/* */

திருவொற்றியூர் பட்டினத்தார் திருக்கோவில்

வானுலக தேவர்களில் ஒருவரான குபேரன் தான் இப்பூவுலகில் பட்டினத்தாராக அவதரித்தார் என்று திருவெண்காட்டுப் புராணம் கூறும்.

HIGHLIGHTS

திருவொற்றியூர்  பட்டினத்தார் திருக்கோவில்
X



வணிகர்களிலேயே பெரு வணிகர் என்பதோடு மன்னர்களுக்குச் சமானமான பெரும்பொருளுடன் மாளிகையில் மிகவும் வசதிகளோடும், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்தவர் பட்டினத்தார்.

"காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே''

என்ற ஒற்றை வரியில் வாழ்வின் நிலையாமையை உணர்ந்தார், நீர்க்குமிழி போன்ற இவ்வாழ்க்கை ஒரு பெருங்காற்றுக்குத் தங்காதே என்பதை அறிந்தார், துறவியானார்.

கோடி கோடியாக பணமும் பொருளும் சம்பாதித்தாலும், உலகத்தை விட்டு நீ போகும் போது உன்னுடன் காதற்ற ஊசி கூட வராது என்று உலகிற்கு உணர்த்தியவர் பட்டினத்தார்.

சென்னை – திருவொற்றியூர் கடற்கரை ஓரமாக மீனவர்கள் குடியிருப்பு பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது பட்டினத்தார் ஜீவசமாதி கொண்ட சிவாலயம். ஜீவ சமாதி திருக்கோயில் என்று சொல்ல முடியாது, உடலை விட்டு ஆத்மாவை பிரிக்க வில்லை.. மாறாக பட்டினத்தார் தனது உடலையே சிவலிங்கமாக மாற்றினார். அங்கேயே பக்தர்களால் ஆலயம் கட்டப்பட்டது, இதை பட்டினத்தார் திருக்கோவில் என்று சொல்லுவதே சிறப்பு.

காவிரிப் பூம்பட்டிணத்தில் பிறந்து, சென்னை திருவொற்றியூரில் கடற்கரையில் இறைவனோடு கலந்து கோவில் கொண்டவர் பட்டினத்தார்.

வணிகம், பக்தி, இலக்கியம், பாடல், அரசாட்சி முறை, குடும்ப வாழ்க்கை, உறவு, அறம், அநீதி, ஊழ்வினை பயன் என தத்துவங்களை போதிக்கிறது பட்டினத்தார் வரலாறு. வணிகர்கள் நிறைந்த காவிரிப் பூம்பட்டினத்தில் பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். இளமை முதலே இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்தது. வானுலக தேவர்களில் ஒருவரான குபேரன் தான். இப்பூவுலகில் பட்டினத்தாராக அவதரித்தார் என்று திருவெண்காட்டுப் புராணம் கூறும்.

சிவநேசர் – ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார்.

பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைத்தனர். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார். அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல் கடந்து சென்று வணிகம் சென்று வர அனுப்பினார்.

அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டுவந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய சிறு பெட்டி ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத்துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" எனஅதில் எழுதியிருப்பதைக் கண்டு, உள்ளம் துடிக்க, அறிவு புலப்பட்டு,அத்தனை செல்வங்களையும் தன் கணக்குப்பிள்ளை சேந்தனிடம் ஒப்படைத்தார்.

"இவற்றை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடு" எனச் சொல்லித் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார்.

அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம்கலந்த அப்பம் கொடுத்தார் அவருடைய தங்கை, அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு, "தன்வினை தன்னைச் சுடும் வீட்டப்பம் ஓட்டைச் சுடும்" என்று கூற அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள்.

தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார். அவ்வாறே அவர் அன்னையார் இறந்து விடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார். இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர் ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார்.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி...

என்ற பாடலை அவர் பாடியதும் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.

பத்திரகிரியாரை ஆட் கொள்ளல்


துறவை மேற்கொண்ட பட்டினத்தார் அங்கேயே இருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்து ஊர் ஊராகச் சென்று ஈசனைத் தரிசிக்க ஆரம்பித்தார். அவ்வாறு செல்கையில் உஜ்ஜையினி மகாகாளேஸ்வரர் கோயிலில் பத்திரகிரியார் என்னும் அரசனை ஆட்கொண்டார்.

இறுதியாக திருவொற்றியூர் வந்த பட்டினத்தாருக்கு அங்கே இறைவன் கொடுத்த கரும்பு இனித்தது. இங்கேயே தனக்கு முக்தி என்பதை உணர்ந்து கொண்ட பட்டினத்தார், அங்கு இருந்த சிலரை அழைத்துத் தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி வேண்ட அவர்களும் அப்படியே மூடினார்கள். மூடப்பட்ட பட்டினத்தார் லிங்க வடிவாக மாறினார், முக்தியடைந்தார்.

பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார்.

அரிச்சந்திரன் கோவிலில் கல்வெட்டாக வாசகம்

"காதற்ற ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே" பட்டினத்தாரின் இந்த வாசகமும் பாடலும் புதுச்சேரி கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள அரிச்சந்திரன் கோவிலில் கல்வெட்டாய் பதிக்கப்பட்டு உலக நிலையாமையை உணர்ந்து நடக்க வேண்டுகிறது.

பதினோராம் திருமுறை இவரது பெயரை பட்டினத்தடிகள் எனக் கூறுகிறது. மேலும் பட்டினத்தார், பட்டினத்துப் பிள்ளை, பட்டினத்துப் பிள்ளையார், திருவெண்காட்டு அடிகள் என்று பல பெயராலும் போற்றப்படுகிறார்.

பட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவை கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருஏகம்பமுடையார் திருவந்தாதி, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது.

புரட்சிகரமாக இன்று கவிதைகள் பாடும் பலருக்கும் முன்னோடியாக பட்டினத்தடிகளின் பாடல்கள் விளங்குகின்றன.. எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட வாழ்வியல் தத்துவங்களை எளிமையாக உணர்த்தும் அவரது பாடல்கள்..

எளிமையும் வாழ்வியல் தத்துவமும் கொண்டது அவரது பாடல், வாழ்க்கையை உணர பட்டினத்தார் வரலாறையும், அவரது பாடல்களையும் படித்தால் போதும்.

Updated On: 1 Jan 2021 4:27 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது