/* */

வாக்குப்பதிவு சதவீத குளறுபடி! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

தமிழக மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு சதவீத குளறுபடி குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.

HIGHLIGHTS

வாக்குப்பதிவு சதவீத குளறுபடி! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!
X

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹு 

கடந்த 19ஆம் தேதி மக்களவை தேர்தல் தமிழகம், புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு விவரங்கள் அன்றைய தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்குப்பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் (ஏப்.20) இறுதி வாக்குப்பதிவு விவரத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் தமிழகத்தில் 69.94 சதவீதம் வாக்குப்பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக அறிவிக்கப்பட்ட வாக்குப்பதிவை விட கிட்டதட்ட மூன்று சதவீத வாக்குப்பதிவு குறைவாக அறிவிக்கப்பட்டதால் பலரும் குழப்பத்திற்கு ஆள்ளாகினர். இந்த நிலையில்,தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மூன்றாவது முறை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (ஏப்.21) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இந்நிலையில், மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் இவ்வளவு குளறுபடிகள் நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, "தேர்தல் தொடர்பாக பல்வேறு பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதிவேற்றம் செய்வதற்கு ஒரு செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுவது முதல் அனைத்து தகவல்களும் இந்த செயலியில் தான் பதிவேற்றம் செய்யப்படும்.

அதன்படி வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலைமை அலுவலர்கள் தங்களது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளை இந்த செயலியில் பதிவேற்றம் செய்வார்கள். ஆனால் செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

எனவே ஒரு சிலர் மட்டுமே பதிவு செய்தனர். அந்த வாக்குப்பதிவு சதவீதம் தோராயமானது. எனவே, செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையிலே சதவீதம் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டது.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் தங்களின் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குப்பதிவு தொடர்பான 17C ஆவணத்தை வாக்கு எண்ணிக்கை மையத்தில் அளிப்பார்கள். இந்த 17C ஆவணத்தின் அடிப்படையில் தான் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை பதிவேற்றம் செய்வார். இதன்படி வரும் தகவல் தான் இறுதியானது" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் விடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். சிறப்பு வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு நடக்கும் போது வாக்காளர் பதிவு அதிகாரிகள் அனைவரும் வாரம் வாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்துவார்.

அந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வாக்காளர்கள் அளித்த விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அளிப்பார். அந்த நேரத்தில் அரசியல் கட்சிகளின் முகவர்களும் வாக்காளர் பட்டியலில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தெரிவிக்கலாம். இது போன்ற நடைமுறைதான் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், சரிபார்க்கவும் தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தால் எளிதாக பெயரை சேர்க்க முடியும் எனத் தெரிவித்தார்.

Updated On: 22 April 2024 3:00 PM GMT

Related News