/* */

வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?

இதனை படித்துப்பாருங்கள், ஒரு வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பது புரியும்.

HIGHLIGHTS

வேட்பாளரின் வாழ்க்கை  எவ்வளவு கடினமானது தெரியுமா?
X

தேர்தல் வேட்பாளர் கோப்பு படம் 

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வெற்றி என்பது மக்கள் மட்டுமே தீர்மானிக்கின்றனர் என நாம் நம்புவது கடினமான விஷயம் தான். முழுமையாக படித்தால் புரியும்.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் மும்முனைப்போட்டி நிலவுகிறது. கூட்டணி பலம், அரசியல் கட்சிகளின் பலம், ஆட்சியாளர்களின் திறமை, நிர்வாக மேலாண்மை, தலைமையின் தலைமைப்பண்பு இப்படி பல விஷயங்கள் தான் ஒரு வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கின்றன என நாம் நினைக்கிறோம். அதனையும் தாண்டி பல விஷயங்களை, பல போராட்டங்களை வேட்பாளர்கள் சந்திக்க வேண்டி உள்ளது.

பொதுவாக அரசியல் கட்சிகள், தாங்கள் நிறுத்திய வேட்பாளர்கள் கட்டாயம் ஜெயிக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அப்படி நினைக்கும் அரசியல் கட்சிகள் கூட தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி வியூகத்தை வகுப்பதில்லை. ஒரே மாதிரி தேர்தல் பணிகளை செய்வதில்லை. சில இடங்களில் மட்டும் கடும் உழைப்பினை காட்டுகின்றனர். சில இடங்களில் மென்மையான போக்கினை கையாளுகின்றனர். தங்கள் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, எந்த வேட்பாளரை வீழ்த்த வேண்டும் என்பதில் எல்லா கட்சி தலைவர்களும் தீவிர கவனம் செலுத்தி வேலை செய்கின்றனர்.

ஒவ்வொரு கட்சித் தலைமையும், எப்படி தங்கள் வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ.... அதேபோல் எந்த வேட்பாளரை வீழ்த்த வேண்டும் என்ற பட்டியலையும் வைத்திருக்கின்றனர். வீழ்த்த வேண்டிய வேட்பாளருக்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்துகின்றனர். சரி அவ்வளவு தானா? என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.

ஒவ்வொரு தொகுதியிலும், கட்சியிலும் பல கோஷ்டிகள் உள்ளன. கோஷ்டிகள் இல்லாத அரசியல் கட்சிகளே கிடையாது. வேட்பாளர் தங்கள் கட்சித்தலைமையின் முழு அன்பை பெற்றிருந்தாலும், இந்த கோஷ்டிகளை சரி கட்டி வேலை வாங்கும் முன்னர் தவித்துப்போய் விடுகின்றனர். என்ன தான் சமரசம் செய்தாலும், தன் சொந்த கட்சி நிர்வாகிகளே பல வேட்பாளர்களுக்கு தலைவலியாக இருந்ததையும் பிரசாரத்தின் போது கவனிக்க முடிந்தது.

அடுத்து, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகளை சரி கட்டுவது வேட்பாளர்களுக்கு நெஞ்சு வலியையே ஏற்படுத்தி விடுகிறது. இவர்களை கெஞ்சிக்கதறி சரி கட்டும் முன்னர், பூத் கமிட்டி பிரச்னை வந்து விடுகிறது. இப்படி சொந்தக்கட்சியை சரி கட்டி நிம்மதி பெருமூச்சு விடும் முன்னர், உள்ளூர் தொகுதி கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏதோ தாங்கள் தான் பெரிய பிஸ்தா என நினைத்து வேட்பாளருக்கு கண்டபடி கட்டளைகள் பிறப்பிக்கின்றனர்.

இந்த கூட்டணி கட்சியிலும், அவனை கூப்பிட்டால் நான் வர மாட்டேன். எனக்கு தான் செல்வாக்கு என்ற பஞ்சாயத்து தொடங்கி விடுகிறது. இதனால் தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர் தான் சாப்பிடும் பிரசர் மாத்திரையினை இரு மடங்காக அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. இப்படி இவர்கள் தரும் நெருக்கடிகள், தொல்லைகளை சமாளித்து, சரி கட்டி முடிக்கும் முன்னரே நினைத்துப்பார்க்க முடியாத அளவு பணம் செலவாகி விடுகிறது.

இதனை கடந்து தேர்தல் பிரசாரத்திற்கு சென்றால், ஒவ்வொரு ஊரிலும் ஒரு நாட்டாமை, ஒவ்வொரு தெருவிலும் ஒரு நாட்டாமை, ஒவ்வொரு ஜாதியிலும் ஒரு நாட்டாமை, ஒவ்வொரு மதத்திலும் ஒரு நாட்டாமை இப்படி ஒரு தொகுதியில் வி.வி.ஐ.பி.,க்கள் என ஒரு பெரும் கூட்டம் பாடாய் படுத்துகிறது. அதனை தாண்டிச் சென்றால் மகளிர் குழுக்கள், மகளி்ர் குழு கூட்டமைப்பு, நாங்கள் வர்த்தக சங்கம், நாங்கள் உள்ளூர் சங்கம், நாங்கள் விளையாட்டு சங்கம், நாங்கள் நற்பணி மன்றம் என ஒரு குழு புறப்பட்டு விடுகிறது.

அப்பப்பா என நொந்து போய் அவர்களை கும்பிட்டு முடிக்கும் முன்பே... என்னை தாண்டி தொட்டுப்பார் என எதிர் அணி வேட்பாளரை சேர்ந்த பலமான வலுவான கட்சி நிர்வாகி வந்து வேட்பாளரை தடுத்து நிறுத்துவார். பெரும்பாலும் ஒவ்வொருவருக்கும், அடுத்தவரின் தேர்தல் பணித்திறமை பற்றி தெரியும். அப்படி தெரிந்தாலும் அதனை முடக்க பல்வேறு திரைமறைவு வேலைகளை செய்ய வேண்டும்.

சிலர் உடன்படுவார்கள். சிலர் எதிர்த்து கடினமாக களத்தில் நிற்பார்கள். இப்படி தாண்டி வாக்காளரை நோக்கி சென்றால், அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை ஆண்டவனே நிறைவேற்ற முடியாது. அத்தனை கோரிக்கை வைப்பார்கள். தவிர பிரச்சாரத்திற்கு வேட்பாளர் வருகிறாரே என எந்த வாக்காளரும் அவரை வரவேற்க வருவதில்லை. நான் பிரச்சாரத்திற்கு வருகிறேன் இந்த இடத்தில் வந்து இத்தனை பேரை நிறுத்துங்கள் என இதற்கென இருக்கும் புரோக்கர் கூட்டத்தை சரி கட்ட வேண்டும். இந்த புரோக்கர் கூட்டம் எல்லா கட்சிக்கும் கூட்டத்தை சேர்ப்பதை தொழிலாக செய்பவர்கள்.

இதனால் இவர்களிடம் துல்லியமான செயல்பாடு இருக்கும். எந்த பிரச்னையும் வராமல், கூட்டத்தை கூட்டி விட்டு, திரும்ப கொண்டு போய் விட்டு விடுவார்கள். இந்த நிலை ஓடிக்கொண்டிருக்கும் போதே நட்சத்திர பேச்சாளர்கள் என சிலர் வந்து நிற்பார்கள். சில நேரங்களில் கட்சி தலைவரே வந்து விடுவார்கள். கட்சித்தலைவர்கள் வரும் போதும், நட்சத்திர பேச்சாளர்கள் வரும் போதும், அவர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் அளவுக்கு கூட்டத்தை காண்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலுக்கு முன்பே முடிவு தெரிந்து விடும்.

இதனால் கட்சி தலைவர்கள் வரும் போது, வேட்பாளர்கள் படும் அவஸ்தைகளை வார்த்தைப்படுத்த முடியாது. காரணம் தன்னை நம்பி சீட் கொடுத்த தலைமைக்கு கட்டாயம் நம்பிக்கையூட்ட வேண்டும். இதற்காக அவர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இது போன்று வேட்பாளரை வதைக்க இன்னும் பல கூட்டங்கள் உள்ளது. சில விஷயங்களை எழுத முடியாமல் நாகரீகம் கருதி தவிர்த்திருக்கிறோம். இந்த போராட்டம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல், ஓட்டுப்பதிவு முடித்து விட்டு வீடு திரும்பும் வரை தொடரும். இந்த உலகிலேயே மிக கடுமையான வாழ்க்கை வேட்பாளராக வாழும் அந்த சில நாள் வாழ்வு தான். இதன் கடுமையை வார்த்தைகளில் வடிப்பது சுலபம் இல்லை.

இவ்வளவு போராட்டத்தையும் கடந்து தேர்தல் முடிவுக்காக 45 நாட்கள் காத்திருப்பது என்பது 45 ஜென்மங்களை கடத்துவது போன்றது தான். எனவே வேட்பாளர்கள் பாவம்... இதனையெல்லாம் அனுபவத்தில் உணர்ந்த பலர் தேர்தல் என்றாலே ஓடி ஒளிகின்றனர். அரசியல் அதிகாரத்திற்கு வருவது என்பது, எத்தனை போர்க்களத்தை சந்தித்தற்கு சமம் என்பதை வேட்பாளர்களின் வாயால் கேட்டால் மட்டுமே புரியும்.

(சும்மா வேட்பாளர் என்றால் சீட்டு கிடைத்து மகிழ்ச்சியாக வேலை செய்கிறார் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். அவர்கள் பாவம்..! "இப்படி பாவம் பார்த்தால் யாருக்குத்தான் ஓட்டு போடறது"..வாக்காளர் மைண்ட் வாய்ஸ் )

Updated On: 19 April 2024 3:14 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!