/* */

அமைச்சராக நீடிப்பது எப்படி? செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கேள்வி

அமைச்சராக நீடிப்பது எப்படி? என செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கேள்வி எழுப்பினார்.

HIGHLIGHTS

அமைச்சராக நீடிப்பது எப்படி? செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி கேள்வி
X

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்).

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பது எப்படி? என்று அவருக்கு ஜாமீன் கோரிய வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அமலாக்க துறையால் அவர் கைது செய்யப்பட்ட போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் தான் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில், வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா என்பதை விசாரணையில் தான் நிரூபிக்க முடியும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என கூறப்பட்டுள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலை மாறவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறிய நிலையில், ஆவணங்கள் திருத்தப்பட்டதே, சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாகக் கருதுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், வழக்கின் புலன் விசாரணை முடிந்து விட்டது. ஆவணங்கள் அமலாக்கத் துறை வசம் உள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருக்கிறார் எனக் கூறி ஜாமீன் மறுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் 230 நாட்களுக்கு மேல் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு, அவர் அமைச்சராக நீடிப்பது குறித்து கருத்து தெரிவித்திருந்தது என சுட்டிக்காட்டினார்.

மேலும், கடை நிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிக்க அனுமதிப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், கண்டன தீர்மானத்தை எதிர்கொண்ட நீதிபதி, தொடர்ந்து பதவியில் நீடிக்கலாமா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என நீதிபதி கூறியதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது கண்டன தீர்மானம் வந்தபோது, அப்போதைய தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் அவர் முன் ஆஜராகலாம் என தலைமை நீதிபதி கூறினார். தொடர்ந்து நீதிபதியாகவும் நீடித்தார் எனத் தெரிவித்தார்.

மேலும், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்ததாகவும், அமைச்சரை நீக்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Updated On: 31 Jan 2024 3:37 AM GMT

Related News