/* */

விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!

Gold price rise- தங்கம் விலை உயர்வு தான் இப்போதைய வாட்ஸப் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் ஹாட் டாபிக். அது பற்றி பார்க்கலாம்.

HIGHLIGHTS

விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
X

Gold price rise- கிடுகிடு என உயர்ந்த தங்கம் விலை (கோப்பு படம்)

Gold price rise-‘1990-ல் 1 கிலோ தங்கம் இருந்தால் மாருதி 800 கார் வாங்கியிருக்கலாம். 2000-த்தில் 1 கிலோ தங்கம் இருந்தால் மாருதி எஸ்டீம் கார் வாங்கியிருக்கலாம். 2005-ல் 1 கிலோ தங்கம் இருந்தால் டொயோட்டா இனோவா கார் வாங்கி யிருக்கலாம். 2010-ல் 1 கிலோ தங்கம் இருந்தால் டொயோட்டா பார்ச்சூனர் கார் வாங்கியிருக்கலாம். 2020-ல் 1 கிலோ தங்கம் இருந்தால் பி.எம்.டபிள்யூ கார் வாங்கியிருக்கலாம். 2030-ல் வோல்வோ பஸ்கூட வாங்கலாமோ என்னவோ..!'

தங்கத்தின் விலை, கார் விலையை விட மிக வேகமாக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை சவரன் 40,000 ரூபாய் என்பதாக இருந்தது திடுதிப்பென ரூ.55,000 தாண்டி இருக்கிறது. இதனால் பலரும் கலங்கி நிற்கிறார்கள். தங்கம் விலை உயர்வுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றை இங்கு பார்ப்போம்...

உலக நாடுகளுக்கு இடையேயான போர்கள் காரணமாக தங்கத்தின் விலை உயரும். அண்மைக் காலத்தில் ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஈரான்- இஸ்ரேல் பிரச்னையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. நிலக்கரி விலையும் உயர்ந்து வருகிறது. இதன் தாக்கத்தால் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. இது தங்கம் விலை உயரக் காரணமாகிறது.

நாடுகளுக்கு இடையே ஏற்படும் வர்த்தகப் போர் காரணமாகவும் தங்கத்தின் விலை உயரும். கடந்த 2019-20 காலகட்டத்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட வர்த்தகப் போரால் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்தது. பிக்ஸட் டெபாசிட் வட்டி குறைவது! கடன் மற்றும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம், சந்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக உடனே மத்திய வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும்; கூடவே டெபாசிட்டுக்கு வட்டியும் அதிகரிக்கும். அதாவது கடன் வாங்குவது குறையும்; டெபாசிட் செய்வது அதிகரிக்கும். கூடவே செலவு செய்வதும் குறையும். இதனை அடுத்து பணவீக்க விகிதம் குறையும். இந்த நிலையில் மத்திய வங்கிகள் கடன் மற்றும் டெபாசிட்டுக்கு வட்டியை மீண்டும் குறைக்கும். அப்போது முதலீட்டாளர்கள் குறைவான வருமானம் தரும் டெபாசிட்களை எடுத்துத் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயரும்.

அமெரிக்காவில் அண்மையில் பணவீக்க விகிதம் குறைந்துள்ளதால், விரைவில் அங்கு கடன் மற்றும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வதால், தங்கத்தின் விலை ஏற்றம் கண்டுவருகிறது. அண்மையில் நம் அண்டை நாடான சீனாவில் தங்கத்துக்கான தேவை, யூக வணிகத்தின் அடிப்படையில் திடீரென அதிகரித்துள்ளது.

இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து ஆன்லைன் மூலம் தங்கத்தை வாங்க ஆரம்பிக்கவே அதன் விலை ஏறத் தொடங்கியது. கூடவே சிறு முதலீட்டாளர்கள் தொடங்கி, பெரும் முதலீட்டாளர்கள், நாடுகளின் மத்திய வங்கிகள் (நம் நாட்டின் ரிசர்வ் வங்கி போன்றவை) என்று எல்லோருமே தங்கத்தை அதிகமாக வாங்கியதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்தது. பங்குச் சந்தை மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் பாதுகாப்புப் புகலிடமான தங்கத்தில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் முதலீட்டை அதிகரிப்பதும் தங்க விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம் ஆகும். நம் ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் 13.4 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இப்போது அதன் வசம் இருக்கும் தங்கத்தின் அளவு 817 டன்னாக அதிகரித்துள்ளது. (ஒரு டன் என்பது 1,000 கிலோ ஆகும்!)

பண்டிகை நாள்களிலும் தங்கத்தின் அதிக தேவை காரணமாக அதன் விலை அதிகரிக்கும். புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான், தீபாவளி, அட்சய திரிதியை ஆகியவற்றை ஒட்டி தங்கம் விலை அதிகரிக்கும். உலக அளவில் தங்கத்தின் இருப்பு குறைவாக உள்ளது. ஆனால் தேவை மிக மிக அதிகமாக உள்ளது. அதனால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது.

பொருளாதார வளர்ச்சி மோசமான சூழல்!

உலக அளவில் எப்போதெல்லாம் பொருளாதாரம் மோசமாக உள்ளதோ, பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை வேகமாக அதிகரிக்கும். அந்த மோசமான பொருளாதார காலகட்டத்தில் பங்குச்சந்தை, பிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட் போன்றவை எல்லாம் நல்ல வருமானம் கொடுக்காது. பெரும் பணக்காரர்கள் இந்த முதலீடுகளிலிருந்து வெளியேறி, அந்தப் பணத்தைத் தங்கத்தில் முதலீடு செய்துவிடுவார்கள். அதனால்தான் மோசமான காலகட்டத்தில் தங்கத்தின் விலை தினம் தினம் ஏற்றம் கண்டு புதிய உச்சத்தை நோக்கிச் செல்லும்.

இதற்கு அண்மைக் கால உதாரணமாக, 2020-ம் ஆண்டின் கோவிட் பாதிப்பைச் சொல்லலாம். உலகமே முடங்கிக் கிடந்ததால், பெரும்பாலான நிறுவனங்கள் செயல்படவில்லை; அவற்றுக்கு உற்பத்தி இல்லை; விற்பனை இல்லை; லாபம் இல்லை. இதனால் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் எல்லாம் வீழ்ச்சி கண்டன. நிறுவனங்கள் நிதி திரட்டவில்லை என்பதால் பிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்களுக்கும் தேவையில்லை. இந்த நேரத்தில் அனைவராலும் சுலபமாகப் பணமாக்கக்கூடிய தங்கத்துக்கான தேவை கூடியதால் அதன் விலை வேகமாக ஏறியது.

24 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.4,000-த்திலிருந்து குறுகிய காலத்தில் ரூ.5,500-க்கு உயர்ந்தது. பொதுவாக உலகில் கெட்டது நடந்தால் தங்கத்தின் விலை எகிறும் எனலாம்.உலக அளவில் சுலபமாக பூமிக்கு அடியில் எடுக்கக்கூடிய தங்கத்தை எல்லாம் கிட்டத்தட்ட வெட்டி எடுத்துவிட்டார்கள். இப்பொழுது தங்கச் சுரங்கங்களில் பூமிக்கு அடியில் பல கிலோ மீட்டர் ஆழத்துக்குக் கீழே உள்ள குறைவான தங்கத்தை வெட்டி எடுக்க அதிக உழைப்பு மற்றும் செலவு ஆகிறது. அதாவது, அதன் உற்பத்தி விலை பல சமயங்களில் சந்தை விலையைவிட அதிகமாக இருப்பதால், தங்கம் வெட்டி எடுக்கப்படுவது அரிதாகவே இருக்கிறது. இதுவும் விலை ஏற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணம்.

இந்திய ரூபாயின் மதிப்பு!

இந்தியாவின் தங்கத் தேவையில் பெரும் பகுதி வெளிநாடுகளிலிருந்து இறக்மதி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரில் மதிப்பிடப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்து இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துக்கு உட்படும். மேலும், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும் அதன் இந்திய விலையை அதிகரிக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஒருவர் ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள தங்கத்தை இறக்குமதி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 75 ரூபாய் என்றால் ரூ.75 லட்சம் கொடுக்க வேண்டும். இதுவே ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் என்றால் ரூ.80 லட்சம் கொடுக்க வேண்டும். தற்போது இந்தியாவில் தங்கம் மீதான சுங்க வரி 15% ஆக உள்ளது. இதனால், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை 15% அதிகரித்துவிடும்.

பெட்டகத்தில் முடங்கும் தங்கம்! உலக அளவில் வாங்கப்படும் தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகள் பெரும்பாலும் வீட்டு அல்லது வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் (லாக்கர்) தூங்கிக்கொண்டிருக்கும். அவசரத் தேவைக்குக்கூடத் தங்கத்தை விற்றுப் பணமாக்குவது அரிது; அடமானம் வைக்கிறார்கள். இதனால், நகை மீண்டும் லாக்கருக்கு வந்துவிடுகிறது. அடுத்து தங்க நகை பழையதாக மாறிவிட்டால், அதை எக்சேஞ்ச் செய்து புதிதாக அதே அளவில் அல்லது அதைவிடப் பெரிதாக புதிய டிசைன் நகை எடுத்துவிடுகிறார்கள். இதனால், பழைய நகை போய் புதிய நகை லாக்கருக்கு வந்துவிடுகிறது. கிட்டத்தட்ட தங்கம் பதுக்கப்பட்டிருப்பதுபோல் ஆகிவிடுகிறது. இதுவும் தங்க விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்க முக்கிய காரணம் ஆகும்.

அதிர்ஷ்ட தினம் எனக் கருதப்படும் அட்சய திரிதியை மே 10 அன்று வருகிறது. அந்தக் கால கட்டத்தில் தேவை அதிகரிப்பு காரணமாக விலை மீண்டும் உயரலாம். கஷ்ட காலத்தில் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களிடம் கேட்பதைவிட தங்க நகையை அடமானம் வைப்பது கௌரவமாக இருக்கும் என நினைக்கிற சமூகத்தில் தங்கம் விலை ஏற்றத்தில்தான் இருக்கும்.

தங்கம் கொடுத்த வருமானம்!

1990-ம் ஆண்டில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.3,200 ஆக இருந்தது. அது 2024-ல் ரூ. 73,000 ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளில் 23 மடங்கு விலை உயர்ந்துள்ளது; கடந்த 30 ஆண்டுகளில் தங்கம் ஆண்டுக்கு சராசரியாக 9.5% வருமானம் கொடுத்துள்ளது; கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கொடுத்துள்ளது.

நகை வாங்குவது குறைந்தால் விலை குறையுமா?

தங்கத்தின் தேவையானது, கடந்த 2023-ம் ஆண்டுடன் முடிந்த 10 ஆண்டுக்காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 3,125 டன் ஆக உள்ளது. இதில் 35% ஆபரணத் தேவையாகவும், 7% தொழில்துறை (ஸ்மார்ட் போன் தயாரிப்பு, பல் மருத்துவம்) தேவையாகவும் உள்ளது. மத்திய வங்கிகளின் தேவை 19% ஆக உள்ளது. முதலீட்டுக்கான தேவை 39% ஆக உள்ளது. இது உலக தங்க கவுன்சில் (World Gold Council) தெரிவிக்கும் தகவல். ‘விலை மிகவும் உயர்ந்துள்ளதால் தங்க நகைகள் வாங்குவது குறையும், அதனால் தங்கத்தின் விலை குறையும்’ என்று சொல்ல முடியாது. அதன் அனைத்துத் தேவைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டால் மட்டுமே தங்கத்தின் விலை குறையும். அது நடக்கிற காரியம் இல்லை.

Updated On: 25 April 2024 6:27 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்