/* */

2021-22 சம்பா தாளடி பயிர்க்காப்பீடு இழப்பீடுத் தொகையை தாமதமின்றி வழங்க கோரிக்கை

Farmers Crop Insurance -ஏக்கருக்கு எவ்வளவு இழப்பீடுத்தொகை என்பதை இதுவரை அறிவிக்காமலிருப்பது சரியான நடைமுறையல்ல உடனடியாக அறிவித்திட வேண்டும்

HIGHLIGHTS

2021-22 சம்பா தாளடி பயிர்க்காப்பீடு இழப்பீடுத் தொகையை தாமதமின்றி வழங்க கோரிக்கை
X

பைல் படம்

Farmers Crop Insurance -தாமதமாக அறிவிக்கப்பட்ட 2021-22 சம்பா, தாளடி பயிர்க்காப்பீடு இழப்பீடுத்தொகையினை உழவர்கள் வங்கி கணக்குகளுக்கு அனுப்புவதில் நீடிக்கும் தாமத்தை களைந்திட , தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டுமென தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் வேளாண் மற்றும் உழவர்கள் நலத்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட RPMFBY- திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2021-22 சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு சென்ற ஆண்டு நவம்பர் 15-க்குள் தமிழ்நாட்டில் சுமார் 26 லட்சத்து 6 ஆயிரம் உழவர்கள் தங்களது 40 லட்சத்து 63 ஆயிரம் ஏக்கர் பயிர்களை காப்பீடு செய்து உழவர்கள் பிரீமியம் செலுத்தியிருந்தோம். தமிழ்நாடு அரசு மாநில நிதியிலிருந்து பயிர்காப்பீடு மானியமாக, 2021-22 ஆம் ஆண்டிற்கு சுமார் ரூ-2324 (இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்தி நான்கு) கோடியை பயிர்க் காப்பீடு பெருநிறுவனங்களுக்கு செலுத்தியிருந்தது.

2021-22 சம்பா, தாளடி நெல் அறுவடை 2022 மார்ச் மாதம் முற்றிலுமாக முடிவடைவதற்கு முன்பாக நிகழாண்டு ஃபிப்ரவரி மாதத்திலேயே, பயிர் காப்பீடு நிறுவனங்கள், வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறை, புள்ளியல் துறை, வருவாய் துறை, அனைத்து வருவாய் கிராமங்கள் தோறும், நிகழாண்டு சம்பா, தாளடி நெல் பயிரில் எவ்வளவு மகசூல் இழப்பு உழவர்களுக்கு ஏற்பட்டது என்பதை அறிந்திட சோதனை அறுவடையை மேற்கொண்டன.

இந்திய ஒன்றிய அரசு, பயிர் காப்பீடு நிறுவனங்களுக்கு விதித்துள்ள காப்பீடு செயல்பாடு வழிகாட்டு விதிகளின்படி அந்நிறுவனங்கள், எந்தெந்த கிராமங்களில் எவ்வளவு சதவிகிதம் பயிர் மகசூல் இழப்பு ஏற்பட்டது? என்பதையும், தொடர்புடைய கிராம உழவர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு எவ்வளவு ரூபாய் இழப்பீடுத் தொகை வழங்கப்படுமென்பதையும், ஒவ்வொரு விவசாயிக்கும் தகவலாக கடிதம் மற்றும் இணையதளத்தில் வெளிப்படையாக மார்ச் மாதத்தில் உழவர்கள் நலன் கருதி அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கிராம நிர்வாக அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களிலும் அனைத்து பொதுமக்களும் அறிந்திடும் வகையில் பொதுத் தகவலாக வெளியிட்டு, இழப்பீடுத் தொகை முழுவதையும், காலதாமதத்திற்குரிய வட்டியுடன் மே மாதத்திற்குள்ளாக உழவர்களுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

அதனை காப்பீடு நிறுவனங்கள் உரிய காலத்தில் சரியாக செய்யத் தவறியதால் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் பல கட்ட போராட்டங்களை இந்திய ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் முன்பு தொடர்ச்சியாக நடத்தியும், எவ்வித முறையான அறிவிப்பினையும் காப்பீடு நிறுவனங்கள், இந்திய அரசு, தமிழ்நாடு அரசு செய்திட முன்வராததால், இச்சங்கத்தின் செயலர் என்ற முறையில் இந்திய பிரதமர், தமிழ்நாடு முதல்வர், பயிர்க்காப்பீடு நிறுவனங்கள் உள்ளிட்ட 14 உயரலுவலர்களுக்கு சட்டரீதியான அறிவிப்புக் கடிதத்தினை நான் கடந்த ஆகஸ்ட் 2022 ல் அனுப்பி இருந்தேன்.

இழப்பீடு வழங்குவது பற்றிய எவ்வித அறிவிப்பும், இந்திய ஒன்றியஅரசு, தமிழ்நாடு அரசுகளின் வேளாண்மை உழவர்கள் நலத்துறை அமைச்சகம், பயிர்க்காப்பீடு நிறுவனங்களால் வெளியிடப்படாததால் கடந்த 27-9-2022 அன்று, தமிழ்நாட்டி லுள்ள 26 லட்சத்து 6 ஆயிரம் உழவர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை W.P(MD)/23217/2022 தாக்கல் செய்தேன். அதனைத் தொடர்ந்து தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் , கடந்த சம்பா, தாளடி மகசூல் பாதிப்பிற்கு, காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து சுமார் ரூ 481 கோடி இழப்பீடுத் தொகை வரப் பெற்றுள்ளதாகவும், அவ்விழப்பீடு அக்டோபர் மாதம் உழவர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமென அறிவித்தார்.

கடந்த சம்பா, தாளடி நடவு முடிந்தவுடனும், அறுவடைக்கு முன்னதாகவும் பருவம் தவறிய பெருமழையினாலும், ஆனைக்கொம்பன் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் தொடர் மழையின் காரணமாக நெல் மகசூல் அதிக அளவில் இழப்பு ஏற்பட்டு இருந்தும் , இதுவரை வருவாய் கிராமம் வாரியாக எவ்வளவு சதவிகிதம் மகசூல் இழப்பு? எவ்வளவு ஏக்கருக்கு எவ்வளவு இழப்பீடுத்தொகை என்பதை இதுவரை அறிவிக்காமலிருப்பது சரியான நடைமுறையல்ல. வெளிப்படையாக உடனே அறிவித்திட வேண்டும்.

மேலும் காப்பீடு நிறுவனத்திடமிருந்து வந்துள்ளதாக கூறப்படுகின்ற தொகை ரூ 481 கோடியும் மிகக் குறைவு. இன்னும் எவ்வளவு வரவேண்டியுள்ளது என்பதையும், தமிழ்நாடு அரசிற்கு வந்த தொகையினை எக்காரணம் கொண்டும் காலந்தாழ்த்தாமல், தாமதிக்காமல், உடனடியாக, குறிப்பாக அக்டோபர் 15 ஆம் தேதிக்குள்ளாக, தீபாவளிக்கு முன்பாக உழவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைப்பதோடு, ஒவ்வொரு உழவர்களுக்கு அனுப்பப்படுகின்ற இழப்பீடுத் தொகை எவ்வளவு என்பது குறித்த அனைத்து விவரங்களுடன் கூடிய பதிவு தபால் ஒன்றினை பயிர்காப்பீடு நிறுவனம் அல்லது தமிழ்நாடு அரசு ஒவ்வொரு உழவருக்கும் தெரிவித்திடுமாறும், வருவாய் கிராமம் வாரியாக, ஒரு ஏக்கர் ஒன்றிற்கு எவ்வளவு இழப்பீடுத் தொகை என்ற அறிவிப்பினை அந்தந்த வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் வாயிலாக செய்தியாக வெளியிடுமாறு கருதி வலியுறுத்துகிறேன்..

குறிப்பு: சென்ற ஆண்டும் பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை வழங்கக்கோரி நாங்கள் மதுரை உயர்நீதி மன்றகிளையில் பொதுநல வழக்கு W.P(MD)/16238/2021 தொடர்ந்த பின்னர்தான் பயிர்க்காப்பீடு இழப்பீடுத் தொகை விடுவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மேலும் காலதாமதமாகிறது. இதில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்திட வலியுறுத்துகிறேன் என அந்த மனுவில் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மனு நகல்கள், வே. இறையன்பு, தலைமைச் செயலர், . ஜெ.ராதாகிருஷ்ணன், முதன்மைச் செயலர், கூட்டுறவுத்துறை, சி. சமயமூர்த்தி முதன்மை செயலர், வேளாண்மை துறை, எம்.எஸ். சண்முகம் முதல்வரின் செயலர், .ஆ .அண்ணாதுரை இயக்குனர், வேளாண்மை துறை., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 Oct 2022 4:05 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  2. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  3. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  4. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  9. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  10. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...