/* */

தென் மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க அன்புமணி வேண்டுகோள்

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

தென் மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க அன்புமணி வேண்டுகோள்
X

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ். (கோப்பு படம்).

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிக கன மழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை 5 மணி அளவில் சேலத்தில் இருந்து பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் #NorthEastMonsoon அதி கனமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மூத்த IAS அதிகாரிகளை நியமித்து, கண்காணிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மாவட்டங்களில் வரலாறு மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. காயல் பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை கொட்டியிருக்கிறது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 50 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்திருக்கிறது. அதனால் தூத்துக்குடி - திருநெல்வேலி சாலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவாக மாறியிருக்கின்றன. இன்றும் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமை என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவுக்கு பிறகு தான் கடுமையான மழை பெய்தது என்பதாலும், இவ்வளவு அதிக மழை பெய்யும் என்பதை எவரும் எதிர்பார்க்காததாலும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்து கொண்டிருப்பார்களா? என்பது தெரியவில்லை. அவர்களுக்குத் தேவையான பால், ரொட்டி, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

மழை வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகமே மழை - வெள்ளத்தால் சூழப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால், பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க அதிக எண்ணிக்கையில் நிவாரண முகாம்கள் தேவைப்படக் கூடும். அவற்றை உடனடியாக அமைத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வந்து அங்கு தங்க வைத்து தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்.

காயல்பட்டினத்தில் பெய்துள்ள 95 செ.மீ மழை என்பது, வழக்கமான காலத்தில் அங்கு ஆண்டு முழுவதும் பெய்யும் மழையை விட அதிகம் ஆகும். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் இதுவும் ஒன்று என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத் தான் காலநிலை மாற்ற அவசர நிலையை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். காயல்பட்டினத்தில் இன்று நிகழ்ந்தது நாளை தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நிகழக்கூடும். இனியாவது புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Dec 2023 7:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்