/* */

கிராம சபை கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர் பங்கேற்கலாம்- அரசு உத்தரவு

கிராம சபை கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

HIGHLIGHTS

கிராம சபை கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர் பங்கேற்கலாம்- அரசு உத்தரவு
X

கிராமசபை கூட்டம் பைல் படம்.

தேச பிதா மகாத்மா காந்தி கண்ட கனவு கிராம ராஜ்யம் தான். நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கிராம புறங்களை சார்ந்து தான் இருக்கிறது. நாட்டின் முதுகெலும்பு என போற்றப்படும் விவசாயிகள் வாழ்வது கிராமங்களில் தான். கிராமங்கள் வளமாக இருந்தால் தான் நாடு உற்பத்தி துறையில் சாதனை படைக்க முடியும். எனவே கிராம புறங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், நாள் முழுவதும் விவசாயம் செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ள விவசாயிகள் தங்களது சொந்த கிராமத்தில் குறைகளை எடுத்து சொல்லி தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற வேண்டும் என்பதற்காக தான் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தரை சுமார் 12 ஆயிரத்து 500 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகள் அனைத்திலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் வழக்கம் போல் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தந்த ஊராட்சி தலைவர்களின் தலைமையில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் ஊர் முக்கியஸ்தர்கள் முதல் சாதாரண குடிமகன் வரை யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியும். பெரும்பாலும் கிராம சபை கூட்டங்களில் அரசியல் கட்சியினரும் அவர்களது ஆதர்வாளர்களும் மட்டுமே கலந்து கொள்வது பெரும்பாலான கிராமங்களின் நடைமுறையாக இருந்து வருகிறது.


இந்நிலையில் தான் கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ந்தேதி தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக விவாதிக்க வேண்டும். பள்ளிகளின் வளர்ச்சி, கற்றல்-கற்பித்தல் போன்றவை தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம சபைக் கூட்டத்தில் முன்வைக்க வேண்டும். இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பாகவும் கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டும். பள்ளிகளின் வளர்ச்சி தொடர்பாக கிராம பஞ்சாயத்துகளின் ஆலோசனையைப் பெற்று, கிராம சபைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீண்டும் அடுத்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


தமிழக அரசின் இந்த உத்தரவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தொடர்பாக இந்த அமைப்பின் திருச்சி மாவட்ட செயலாளர் உதுமான் அலி கூறுகையில் 'கிராம சபை கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருப்பது மிகவும் வரவேற்பு உரிய ஒன்று. இதன் மூலம் கிராமப்புற பள்ளிகளில் உள்ள பிரச்சனைகளை அதன் தலைமை ஆசிரியர்கள் கிராம ஊராட்சி தலைவர்களிடம் நேரடியாக எடுத்துக் கூற முடியும். அடுத்து கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்படும் பொருள் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஒரு ஆவணமாக பதிவு செய்யப்படுகிறது. கிராமப்புற பள்ளிகளை பொறுத்த வரை பெரும்பாலும் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளவையாகும் .அவர்கள் தங்களது நிறை குறைகளை அருகில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி தலைவர்களிடம் தான் எடுத்துக் கூற முடியும். அப்படி அவர்களை தேடி சென்று கூறுவதற்கு பதிலாக கிராம சபை கூட்டத்தில் தங்களது கருத்துக்களை எடுத்து வைப்பதன் மூலம் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கும் தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கலாம். மேலும் கல்வி வளர்ச்சிக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கும் எடுத்துக் கூறலாம் கிராமப்புற பள்ளிகளை பொறுத்த வரை ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றிற்கு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை நடைபெறும் இந்த கிராம சபை கூட்டத்தின் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும். வருகிற காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் அரசின் இந்த உத்தரவை பின்பற்றி தங்களது பள்ளிகளின் வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை எடுத்து கூறுவதோடு கல்வி வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

கிராம சபை கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டு இருப்பதன் மூலம் இனி கிராமப்புற கல்வி மேம்பாடு அடையும் என்பதில் ஐயமில்லை. பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பிரச்சினை பற்றி எடுத்து கூறுவதன் மூலம் அதில் பங்கேற்கும் பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தமிழக அரசின் இந்த உத்தரவு கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Updated On: 21 Sep 2022 4:56 AM GMT

Related News