/* */

பிகாரில் இட ஒதுக்கீடு 65% ஆக உயர்வு: ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பிகாரில் இட ஒதுக்கீடு 65% ஆக உயர்வு: ராமதாஸ் வரவேற்பு
X

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். (கோப்பு படம்).

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, அதன் மீது நடத்தப்பட்ட விவாதத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பிகார் மாநிலத்தின் இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டில் இருந்து 65% ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு 13 விழுக்காட்டில் இருந்து 20% ஆகவும், இரு பிரிவு ஓபிசி இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்து 43% ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. பழங்குடியினர் இட ஒதுக்கீடு 2% ஆக நீடிக்கும். இதற்கான சட்ட முன்வரைவு நடப்புக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்றும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பிகார் மாநில அரசின் முடிவு பாராட்டப்பட வேண்டியது. சமூகநீதியின் தலைநகரம் பிகார் தான் என்பதை அம்மாநில அரசு மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

மாநில அரசுகள் நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிடவோ, அதனடிப்படையில் முடிவெடுக்கவோ எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதால், பிகார் அரசின் இந்த முடிவுகளை செயல்படுத்த சட்டப்படியாக எந்தத் தடையும் இல்லை. மாநில அரசுகள் நடத்தும் கணக்கெடுப்பை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவரும் நிலையில், பிகார் அரசு சமூகநீதிப் பயணத்தில் புரட்சிகரமான மைல்கல்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

பிகார் அரசின் இந்த நடவடிக்கைக்கு பிறகும் தமிழக அரசு தானாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப் போகிறதா? அல்லது அந்தப் பொறுப்பை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டு சமூக அநீதி இழைக்கப் போகிறதா? என்பது தான் இப்போது நம்முன் உள்ள வினா ஆகும். பிகாரில் 63% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு இதுவரை 30% ஆக இருந்து வந்த நிலையில், இனி அது 43% ஆக உயர்த்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகை 69%க்கும் அதிகமாக உள்ள நிலையில், அதை சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் உறுதி செய்து, அதற்கேற்ற விகிதத்தில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.

மீண்டும், மீண்டும் சொல்கிறேன்.... முதல் சாதிவாரி கணக்கெடுப்பும், அதனடிப்படையிலான இட ஒதுக்கீடு அதிகரிப்பும் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் நடந்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பை நழுவவிட்டு விட்ட தமிழக அரசு, நான்காவது அல்லது ஐந்தாவது மாநிலமாகவாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதனடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், அருந்ததியர், பழங்குடியினர் ஆகிய அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Nov 2023 1:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!