/* */

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பலன் இல்லை -5மாவட்ட விவசாயிகள் சங்கம் கருத்து

முல்லை பெரியாறு அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் கொடுத்த உத்தரவு பலன் தராது என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பலன் இல்லை -5மாவட்ட விவசாயிகள் சங்கம் கருத்து
X

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற நீதியரசர்கள் ஏ.எம். கான்வில்கர், ஏ.எஸ்.ஓகா மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு 8-4-2022 கொடுத்த உத்தரவு, எந்த மாதிரியான சூழலில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற கேள்வியை எழுப்புகிறது.

கேரளாவின் வாதமே வேறு, முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என்பதுதான் அவர்களுடைய சமீபத்திய வாதம். அதில் அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள் என்பதைவிட அதை செய்தே ஆக வேண்டும் என்றும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள்.

இந்த நிலையில், அணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அணை உடைப்பு தொடர்பான பேரிடர்களை தடுப்பதற்கும் தேவையான அனைத்து அதிகாரமும், கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணைகள் பாதுகாப்பு மசோதாவின் அடிப்படையில் உருவாக்கப்பட இருக்கும், அணைகள் பாதுகாப்பு ஆணையம் நியமிக்கப்படும் வரை, கண்காணிப்பு கமிட்டியே செயல்படுத்தவேண்டும் என்றும், இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் கண்காணிப்பு கமிட்டிக்கு மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

கூடுதலாக தமிழகம் மற்றும் கேரளாவின் சார்பில், தலா ஒரு தொழில்நுட்ப வல்லுனரை இணைத்து, கண்காணிப்பு கமிட்டி மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். அதோடு கண்காணிப்பு கமிட்டி பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும், நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, சம்பந்தப்பட்ட இரண்டு மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் இருக்கிறது என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள்.

அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பு கமிட்டி அவ்வப்போது வழங்கும் வழிகாட்டுதல்களையும், உத்தரவுகளையும் உரிய காலத்திற்குள் நிறைவேற்ற, தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநில அரசுகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். ஒத்துழைப்பு அளிக்க இரண்டு மாநிலங்களும் தவறினால்,உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து, புதிதாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட கண்காணிப்பு கமிட்டி, புதிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த ஆய்வின் போது உள்ளூர் மக்களின் கருத்துக்களை கேட்டு அதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

இறுதியாக முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்களையும், மறுசீரமைக்கப்பட்ட கண்காணிப்பு கமிட்டி முடிவு செய்யும் எனவும், மீண்டும் அடுத்த மாதம் 11ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இடைக்காலத்தில் ஏதேனும் கண்காணிப்பு கமிட்டிக்கு தேவை ஏற்பட்டால், உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றும், வழக்கை முடித்து வைத்திருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த உத்தரவு தமிழகத்திற்கு சாதகமாக கூறப்பட்டது போல் தோன்றும். ஆனால் அணையின் பாதுகாப்பு குறித்தும், மற்றுமுள்ள விவகாரங்கள் குறித்தும் ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தெளிவான தீர்ப்பை வழங்கியதும் இதே உச்ச நீதிமன்றம் தான்.

இன்றைக்கு கண்காணிப்பு கமிட்டிக்கு, ஒத்துழைப்பு அளிக்க மறுத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுப்போம் என்று கூறும் உச்ச நீதிமன்றம், கடந்த 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக வழங்கிய தெளிவான தீர்ப்பை அமல் படுத்த மறுத்ததோடு, அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்ற ஒரு சட்டத்தையும் கேரள மாநில சட்டமன்றத்தில் இயற்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே கேள்விக்குள்ளாக்கியது கேரள மாநில அரசு. தாங்கள் அளித்த உத்தரவை நிறுத்தி வைத்த தோடு, மாநில சட்டமன்றத்தின் மூலம் புதிய சட்டத்தையும் இயற்றிய கேரள மாநில அரசு மீது, ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மேற்கொள்ள வில்லை என்கிற கேள்வி பிறக்கிறது.

தற்போது உச்சநீதிமன்றம் அதிக அதிகாரம் உள்ள அமைப்பாக காட்டியிருக்கும், கண்காணிப்பு கமிட்டிக்கு அதிகாரம் இருக்குமென்று சொன்னால்,2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கேரள மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களிலும், பொது இடங்களிலும் பரப்பப்படும் வதந்தி குறித்த நடவடிக்கைகளை, எழுத்துப்பூர்வமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறதா, இல்லையென்றால் அது தொடர்பாக கண்காணிப்பு கமிட்டி இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தான கேள்வியும் எழுகிறது.

அணைகள் பாதுகாப்பு மசோதாவே,மாநிலங்களுக்கு எதிரானது என்கிற நிலைப்பாட்டை நாங்கள் எடுத்திருக்கும் நிலையில், அந்த சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை பாயும் என்பது எந்த அளவிற்கு நம்பகத்தன்மையானது என்கிற கேள்வியும் எழுகிறது. கண்காணிப்பு கமிட்டிக்கு அதிகாரம் இருக்கும் என்று சொன்னால், இதுவரை அது அணையில் மேற்கொண்ட பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த பட்டியலை உச்சநீதிமன்றம் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.ஆனால் அப்படி செய்ததாக தெரியவில்லை.

கேரள மாநில அரசும், அங்குள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் அணைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் போதெல்லாம், பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த மிகப் பெரிய அச்சம் எழுந்தது என்பதை கண்காணிப்பு கமிட்டி உணர்ந்ததா என்று நமக்குத் தெரியவில்லை. இத்தனை அதிகாரம் கொடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தால் கூறப்பட்டிருக்கும் கண்காணிப்பு கமிட்டி...உள்ளபடியே பார்த்தால், கடந்த மாதம் இதே உச்சநீதிமன்றத்தில்,மத்திய நீர்வள ஆணையம் தாக்கல் செய்த அணை பராமரிப்பு பணிகள் குறித்து புதிய ஆய்வு செய்ய வேண்டும் என்கிற பிரமாண பத்திரத்திற்கு எதிராக ஆற்றிய வினை என்ன என்பது குறித்து விளக்க வேண்டும்.

வெறுமனே முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து அக்கறைப்படும் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள்,முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக கேரள மாநில அரசால் பீர்மேடு தாலுகாவில் உள்ள மஞ்சமலையில் கட்டப்பட இருக்கும், புதிய அணைக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டுப் பெற்றதன் அடிப்படையில்,தாக்கல் செய்து இருக்கிறது என்கிற விவகாரத்தை கண்காணிப்பு கமிட்டி உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டதா என்றும் தெரியவில்லை.

மேலாக மறுசீரமைக்கப்பட்ட கண்காணிப்பு கமிட்டி, உள்ளூர் மக்களிடமும் ஆய்வு நடத்த வேண்டும் என்று அறிவித்திருப்பது நமக்கு மிகப்பெரிய பின்னடைவே. ஏனென்றால் உள்ளூர் மக்கள் என்கிற பெயரில் பெரியாறு ஆற்றின் வழிப்போக்கை ஆக்கிரமித்திருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் அத்தனை பேரும், முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரானவர்கள் என்பதை உச்சநீதிமன்றம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

2011 ஆம் ஆண்டு கேரள மாநில உயர்நீதிமன்றத்தில், அம்மாநில அரசு தலைமை வழக்கறிஞர் தண்டபாணி அவர்கள், கொடுத்த பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் எவ்வித பாதிப்பும் கேரளாவிற்கு ஏற்படப் போவதில்லை என்றும், ஆக்கிரமிப்பாளர்களே பெரியாறு வழித்தடத்தில் அத்துமீறி குடியேறி இருப்பதாகவும், அதிகபட்சமாக பாதித்தால் 350 குடும்பங்களுக்குள்தான் இருக்கும் என்று தாக்கல் செய்த ஆய்வறிக்கையை உச்சநீதிமன்றம் கணக்கில் எடுத்து இருக்க வேண்டும்.

இதுபோல இன்னும் பல விடயங்களை உச்ச நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது நமக்கு தான் பெரிய பின்னடைவு. இதைவிட இன்னொரு முக்கிய விஷயம் இதுவரை கண்காணிப்பு கமிட்டியின் எந்த உத்தரவையும் ஏற்று மதிக்காத கேரள மாநில அரசு, மறுசீரமைக்கப்பட்ட கண்காணிப்பு கமிட்டியையா ஏற்றுக் கொள்ளப் போகிறது. அதோடு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் தனிநபர் வழக்குகள் குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பதும் நமக்கு பின்னடைவுதான்...

எத்தனை இடைக்கால தீர்ப்புகள் கொடுத்தாலும்... முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என்கிற கேரள அரசின் வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமே உச்ச நீதிமன்றத்திடம் நாம் எதிர்பார்க்கும் ஒரு சட்ட நடவடிக்கை ஆகும். அதுவன்றி கொடுக்கப்படும் அத்தனை இடைக்கால உத்தரவுகளும், புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கான தற்காலிக நிவாரணம்தானே தவிர, நிரந்தரமான மருந்து இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பெரியாற்றங்கரையில் அத்துமீறி குடியேறி இருப்பவர்களிடம்,மறு சீரமைப்பு கமிட்டி ஆய்வு நடத்த வேண்டும் என்பது, தமிழகத்தில் பெரியாறு தண்ணீரை நம்பி இருக்கும் பத்து லட்சம் விவசாயிகளை மனதில் வைத்து சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

உண்மையிலேயே மறுசீரமைப்பு கமிட்டி ஆய்வு நடத்த வேண்டியது, இந்த பெரியாறு தண்ணீரை நம்பி இருக்கும் கடைமடை மாவட்டங்களான சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் விவசாயிகளிடம்தான் என்பதை நாம் ஒரு விண்ணப்பமாக உச்சநீதிமன்றத்திடம் அளிக்க விரும்புகிறோம். இடைக்கால நிவாரணம் நமக்கு ஏமாற்றமே...நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது நமது நோக்கமல்ல, எங்கள் தரப்பு நியாயத்தை அதன் முன் வைக்க வேண்டும் என்பது மட்டுமே நம் நோக்கம். இவ்வாறு ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியுள்ளார்.

Updated On: 9 April 2022 7:39 AM GMT

Related News