/* */

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: மனித உரிமை ஆணையத்திற்கு ஐகோர்ட்டு கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: மனித உரிமை ஆணையத்திற்கு ஐகோர்ட்டு கேள்வி
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா அடங்கிய அமர்வு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை தமிழக அரசுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதா? என பதில் அளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை நகல் தமிழக அரசுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று பதில் அளித்தார்.

அப்போது மனுதாரர் ஹென்றி திபேன், வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தனது புகார் மனு குறித்து எந்த ஒரு பதிவும் செய்யவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் ஹென்றி திபேன் அளித்த புகாரைப் பற்றிய பதிவு இடம்பெறாதது ஏன் என்றும் புகார் அளித்த அவர் தரப்பு வாதத்தை கேட்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது குறித்து மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் அளிப்பதற்காக வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Updated On: 27 Sep 2023 2:13 PM GMT

Related News