/* */

திமுக.,வையும், திருவண்ணாமலையையும் பிரித்து பார்க்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்

தி.மலை-வேலூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவாயில், கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திமுக.,வையும், திருவண்ணாமலையையும் பிரித்து பார்க்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
X

கலைஞரின் சிலையை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த காட்சி.

திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் கலைஞரின் 8 அடி திருவுருவச் சிலை திறப்பு விழா நேற்றிரவு நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைத்தார். தொடர்ந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். சட்டபேரவை துணை தலைவர் கு.பிச்சாணடி, எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:

திருவண்ணாமலை மலையை சுற்றி மக்கள் கிரிவலம் செல்வார்கள். ஆனால் இன்று நான் திருவண்ணாமலையை சுற்றி வர கூடிய சூழ்நிலையை எ.வ.வேலு உருவாக்கி வைத்திருக்கிறார். திருவண்ணாமலை உச்சியில் தான் பொதுவாக தீபம் ஒளிரும். ஆனால் இன்றைய தினம் திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஒளிமயமாக காட்சி அளிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.வின் பொதுக்கூட்டம் எழுச்சியோடு மாநாடு போன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் திருப்பத்தூர், கரூர் மாவட்டங்களில் கூட்டம் நடைபெற்றது. அதைவிட திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதைகாணும் போது என்னையே திக்குமுக்காட வைத்திருக்கிறார் எ.வ.வேலு.

திமுக விழாவின் வேந்தர் என்றால் அது வேலு தான். எ.வ.வேலு என்று சொன்னால் எதிலும் வல்லவர் என்று சொல்லுவது அவரை புகழ வேண்டும், பாராட்ட வேண்டும் என்று சொல்லுவதற்காக இல்லை. அவருடைய இயல்பே அப்படி தான். அவரிடம் ஒரு செயலை கொடுத்தால் அதன்பிறகு அதை பற்றி நாம் கவலை படவேண்டாம். சொன்ன நாளைக்கு வந்தால் போதும். அந்த அளவுக்கு சுத்தமாக கனகச்சிதமாக அதை முடித்து காட்டக்கூடியவர் தான் வேலு. தமிழகத்தில் பல்வேறு ஊர்களில், பல்வேறு மாவட்டங்களில் கலைஞரின் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவை கம்பீரமாக காட்சி அளித்து கொண்டிருக்கின்றன. ஊரெல்லாம் அமைத்து வைத்து விட்டு தன்னுடைய ஊரிலே கலைஞரின் சிலையை அமைத்து அழைத்து வந்து இருக்கிறார் வேலு. அதனால் அவருக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். அவருக்கு நான் நன்றி சொல்வது எனக்கு நானே நன்றி சொல்வதற்கு சமமாகும். வெளிப்படையாக பாராட்ட வேண்டியது எனது கடமை என்ற அடிப்படையில் நான் அவரை பாராட்டி விடுகிறேன். அவருக்கு தோளோடு தோள் கொடுத்து பணியாற்றி வருகிறார் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி. கலைஞரின் சிலை கம்பீரமாக அமைக்க உழைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பேரறிஞர் அண்ணா பெயரில் அமைக்கப்பட்டு உள்ள நுழைவு வாயில் இன்று கம்பீரமாக திறந்து வைக்கப்பட்டு உள்ளது. தமிழர் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழி வகுத்தவர் அண்ணா. தலை நிமிர்ந்து நின்ற தமிழனத்தை தனது தொலைநோக்கு பார்வையால் தீட்டிய திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர். அதனால் தான் கலைஞரின் சிலையில் கை வானத்தை நோக்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறார்.

முற்போக்கு சிந்தனை கொண்ட தமிழர்கள் முன்னேற்றம் அடைந்த சமுதாயம் வளர்ந்து உள்ளது என்று பொருள். திருவண்ணாமலையையும், தீபத்தையும் எப்படி பிரித்து பார்க்க முடியாதோ, அதேபோல தான் திருவண்ணாமலையையும், தி.மு.க.வையும் பிரித்து பார்க்க முடியாது. கட்சி உருவான முதல் பொதுக்கூட்டத்தில் 1451 ரூபாய் வசூலானது. அதில் 100 ரூபாய் கொடுத்தது யார் என்றால் திருவண்ணாமலையை சார்ந்த ப.வு.சண்முகம் தான். கழகம் முதல்முதலாக தேர்தலில் போட்டியிட்ட 1957-ல் 15 சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றனர். இதில் 3 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். ப.வு.சண்முகம், பி.எம்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை ஆகிய 3 பேரும் வென்றனர். அதுமட்டுமின்றி கட்சி போட்டியிட்ட முதல் நாடாளுமன்ற தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றோம். திருவண்ணாமலை தொகுதியில் இரா.தருமலிங்கம் வென்றார். அந்த அளவிற்கு கட்சிக்கு அடிதளமாக அமைந்த ஊர்தான் திருவண்ணாமலை.

கழகத்துக்கு அமைப்பு ரீதியாக கால்கோள் நாட்ட அடித்தளமிட்டது திருவண்ணாமலை. எனவே இங்கு அண்ணா நுழைவு வாயிலும், கலைஞர் சிலையும் அமைய பொருத்தமான இடம். 1957 தேர்தலில் வெற்றி பெற்றதும் கழக மாநாடு நடத்த அண்ணா திட்டமிட்டார். அப்போது வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்த திருவண்ணாமலையில் தான் மாநாட்டை நடத்தினார்.

இந்தி ஆதிக்கம் தலைவிரித்து ஆடிய காலம் அது. முதல் நாள் இந்தி எதிர்ப்பு மாநாடும், 2வது நாள் கழக மாநாடும் நடந்தது. 1957ம் ஆண்டு செப்டம்பர் 21, 22ம் தேதிகளில் நடந்த மாநாட்டிற்கு துறவி அருணைகிரி அடிகள் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து அண்ணா உரையாடினார். தமிழ் மொழி காக்கவும், இந்தி ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு காட்டவும், தமிழ்நாட்டிற்கு வழிகாட்டியாக இருந்தது திருவண்ணாமலை. 1963ல் திருவண்ணாமலை இடைத்தேர்தலில் திமுக வெற்றி வேட்பாளாக ப.உ.ச போட்டியிட்டார். ஆளுங்கட்சி காங்கிரஸ் திமுக வெற்றி பெற வேண்டுமானால் யாரை அனுப்ப வேண்டும் என்று அண்ணா யோசித்தார். கலைஞரை தேர்தல் பொறுப்பாளாராக அனுப்பி வைத்தார். இரவு, பகல் பாராமல் உழைத்ததால், அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றோம். இந்த இடைத்தேர்தல் வெற்றி தான் பொதுத்தேர்தல் வெற்றிக்கு அடித்தளமிட்டது.சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்றும் பயணத்தை இந்த தொகுதியில் தான் தொடங்கினேன். அதன் பிறகு பல தொகுதிகளுக்கு சென்றேன். அப்போது தமிழ்நாட்டில் பல மக்களின் கோரிக்கைகளை மனுக்களை பெற்றேன்.

உங்களது கவலைகளை நான் என்னுடைய கவலை என்று நினைத்தேன். ஆட்சி அமைத்த பின்பு 100 நாட்களில் தீர்வு காண்பேன் என்று கூறினேன். என்னிடம் மனு கொடுத்தால் நிறைவேறும் என நினைத்து லட்சக்கணக்கான மக்கள் மனுக்கள் அளித்தனர். அதுதான் தி.மு.க. வெற்றி பெற அடித்தளமாக அமைந்தது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. இதன் தொடக்கம் திருவண்ணாமலை தான். மக்கள் அரசாக, மக்கள் நலன் விரும்பும் அரசாக, கவலைகள் போக்கும் அரசாக தி.மு.க. அமையும். உங்கள் கோரிக்கைகள், மனுக்கள் என் முதுகில் ஏற்றி வைத்திருக்கிறேன் என்று அப்போது கூறினேன். நம்பிக்கையோடு செல்லுங்கள் தி.மு.க. தான் ஆட்சி அமையும் என்றும் கூறினேன். இந்த ஓராண்டு காலத்தில் மக்களின் அரசாக, மக்கள் நலம் விரும்பும் அரசாக கவலைகள் போக்கும் அரசாக இன்னும் சொல்லப்போனால் பெருமையுடன் சொல்லப்போனால் திராவிட மாடல் ஆட்சியாக அமைந்துள்ளது. தமிழின் பெருமை வளர்க்கும் அரசாக தி.மு.க. உள்ளது. அண்ணாவின் ஆசை, கலைஞரின் கனவு போன்றவை நிறைவேற்றி விட்டு நான் இங்கு திருவண்ணாமலைக்கு நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக வந்துள்ளேன். எனது கடமைகளை நான் சரியாக செய்து வருகிறேன்.

கட்சி வளர்ச்சியால் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி அடங்கி உள்ளது. தமிழ் மொழிக்கும், இனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் காவல் அறன் தி.மு.க. தான். இங்கு திறக்கப்பட்டு உள்ள கலைஞரின் சிலை அல்ல கலைஞரின் கொள்கை மலை. அந்த சிந்தனையோடு ஒவ்வொருவரும் பெரியாராகவும், அண்ணாவாகவும், கலைஞராகவும் கழகத்திற்கும், நாட்டிற்கும் உழைக்க வேண்டும். இந்தி எதிர்ப்பு மாநாட்டில் எங்களுக்கு 2 எஜமானர்கள் உள்ளார்கள் என்று அண்ணா சொன்னார். ஒன்று மனசாட்சி, மற்றது இந்த நாட்டு மக்கள் என்று அவர் சொன்னார். மனசாட்சியையும், நாட்டு மக்களையும் தாண்டி நாம் அஞ்சுகின்ற பொருள் வேறு எதுவும் இல்லை. எந்த எண்ணத்தோடு தி.மு.க. ஆட்சி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு வாக்களித்தீர்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன் என்று அண்ணா, கலைஞர் மீது ஆணையாக சொல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக திருவண்ணாமலை மாடவீதி பெரிய தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிவாச்சாரியார்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆடைகள், பொருட்களை வழங்கினார்.

அதைதொடர்ந்து திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழிகளை வழங்கினார். கலைஞர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு தங்க சங்கிலி அணிவித்தார். பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் க.பொன்முடி, செஞ்சி மஸ்தான், அவைத்தலைவர் தா.வேணுகோபால், மாநில மருத்துவ அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பனர் இரா. ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 July 2022 1:14 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!