ஒலகடம் பேரூராட்சி கூட்டம்: திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஈரோடு மாவட்டம் ஒலகடம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 6 திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS

வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒலகடம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக வீட்டுமனைகள் அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டிடிசிபி அனுமதி வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சிக்கு இடம் ஒதுக்காமலேயே முழுவதுமாக வீட்டு மனைகளாக அமைக்கப்பட்டதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அப்ரூவல் வழங்கப்பட்டிருப்பதாக வார்டு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பேரூராட்சி வார்டு பகுதிக்கு தேவையான ரேஷன் கடை, சிறுவர் பூங்கா, நூலகம். அங்கன்வாடி மையம், மின்வாரிய அலுவலகம், உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை அரசு அலுவலகங்களுக்கு போதுமான இடம் ஒதுக்கீடு இல்லாமல் வாடகை இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தற்போது வழங்கப்பட்டுள்ள வீட்டு மனை காலியிடங்களுக்கான டிடிசிபி அப்ரூவல் வழங்காமல் பேரூராட்சி வார்டு பகுதிக்கு ஒதுக்கப்பட வேண்டிய காலி இடத்தை ஒப்பந்ததாரர் ஒதுக்கி கொடுத்த பின்னர் டிடிசிபி அப்ரூவல் வழங்கலாம் என திமுகவை சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் குரல் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த வீட்டு மனைகளுக்கான டிடிசிபி அப்ரூவல் குறித்தான தீர்மானத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஒலகடம் பேரூராட்சியில் திமுகவை சேர்ந்தவர் தலைவராக உள்ள நிலையில் திமுகவை சேர்ந்த ஆறு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.