/* */

வீதிக்கு வந்த விநாயகர் சிலை... தூத்துக்குடியில் கோயில் இடிக்கப்பட்டதால் பரபரப்பு…

தூத்துக்குடியில் விநாயகர் கோயிலில் இருந்த சிலையை வெளியே எடுக்காமல் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

வீதிக்கு வந்த விநாயகர் சிலை... தூத்துக்குடியில் கோயில் இடிக்கப்பட்டதால் பரபரப்பு…
X

ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்ட விநாயகர் கோயில்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின்போது சாலையோரத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை மாநகாரட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலையில் இருந்த விநாயகர் கோயில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது.

இதற்கு, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கோயிலுக்குள் இருந்த விநாயகர் சிலையை வெளியே எடுக்காமலேயே கோயிலை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் இடிக்கப்பட்ட கோயிலுக்குள் சென்று விநாயகர் சிலையை வெளியே எடுத்து வந்து சாலையின் நடுவே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து, மாநகாரட்சி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இதுதொடர்பாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலையில் உள்ள விநாயகர் கோயில் கடந்த 38 ஆண்டுகளாக இருந்து வருகிறது. கோயில் அமைந்துள்ள இடம் பட்டா நிலம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த கோயிலுக்கு அருகேயுள்ள இடத்துக்காரர் கோயில் பொது இடத்தில் உள்ளதாக வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் இருந்தபோதே கோயிலை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முயன்றது.

ஒருநாள் அதிகாலை 5 மணியளவில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மாநகாரட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் கோயிலை இடிக்க முயன்றனர். அப்போது, அங்கு திரண்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் வந்த பிறகே சமரசம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவனிடம் முறையிட்டோம். அவரது உதவியாளர் ஒருவர் வந்து கோயிலை இடிக்கக் கூடாது என மாநகாரட்சி அதிகாரிகளிடமும், போலீஸாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதன் பிறகே போலீஸார், மாநகராட்சி அதிகாரிகளும் அங்கிருந்து கிளம்பினர். இருப்பினும், கோயில் பாதியளவு இடிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கோயிலில் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்தது. தற்போது, எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் கோயில் இடிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாநகாரட்சி அதிகாரிகள் கூறும்போது:

விநாயகர் கோயில் அமைந்துள்ள இடம் பட்டா நிலம் என ஒருதரப்பினரும், அது பொது இடம் என மற்றொரு தரப்பினரும் கூறி வந்தனர். இதுதொடர்பான வழக்கில் பொது இடத்தில் கோயில் உள்ளது என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. அதன் பிறகும் கோயிலை யாரும் அப்புறப்படுத்தவில்லை.

இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகாரட்சி நிர்வாகம் மீது நீதிமன்ற வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையிலேயே தற்போது கோயில் அகற்றப்பட்டுள்ளது. இதில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என தெரிவித்தனர்.

இந்த விநாயகர் கோயில் இடிப்பு சம்பவத்திற்குள் பெரும் அரசியலே உள்ளதாக ஸ்டேட் பாங்க் காலனி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். விநாயகர் கோயில் உள்ள இடம் யாருக்கும் சொந்தமானது இல்லை என்பது உண்மையே. ஆனால், பாஜகவைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் நிர்வகித்து வந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் கோயிலை இடிக்க முயன்றபோது அப்போது எம்எல்ஏவாக இருந்த தற்போதையை அமைச்சர் கீதாஜீவன் வந்து தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால், கோயில் இடிக்காமல் தடுக்கப்பட்டது.

அதன் பிறகு ஆட்சி மாற்றம் வந்த நிலையில், தற்போதையை மாநகராட்சி நிர்வாகம் கோயிலை இடிக்க முயன்றது. அப்போதும், கீதாஜீவன் மாநகாரட்சி அதிகாரிகளையும், காவல் துறையையும் தொடர்பு கொண்டு கோயிலை இடிக்கக் கூடாது என தடுத்தார். இதனால், கோயில் பாதியளவு இடிக்கப்பட்ட நிலையில் மேற்கொண்டு இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டது.

இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரச்சினை ஏதும் வந்துவிடக் கூடாது என்பதால் உடனடியாக கோயிலை இடித்து அப்புறப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதன்பிறகே, மாநகாரட்சி அதிகாரிகள் விநாயகர் கோயிலை இடித்து உள்ளனர். இந்த சம்பவத்தை முன்னிட்டு, அந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சமூக நலத் துறை அமைச்சர் கீதாஜீவன் கோயிலை இடிக்கக் கூடாது என தடுத்து வந்த நிலையில், அவரது சகோதரரான ஜெகன் பெரியசாமி மேயராக உள்ள மாநகாரட்சி நிர்வாகம் கோயிலை இடித்து உள்ளது. நீதிமன்ற அவமதிப்பாக இருந்தாலும் விநாயகர் கோயிலை அப்புறப்படுத்திய விவகாரம் தற்போது தூத்துக்குடி மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 19 Nov 2022 7:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  5. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  6. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  7. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  9. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை