/* */

நாமக்கல்லில் இன்று முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்: கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் இன்று முதல் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அமல்: கலெக்டர் அறிவிப்பு
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார். அருகில் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றது. கடைகள் அனைத்தும் மாலை 5 மணிக்கே மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வருகிற 23ம் தேதி வரை நீட்டித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஆக. 9ம்தேதி காலை 6 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது.

மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மெடிக்கல் ஸ்டோர் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறிகடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படவேண்டும். மாலை 5 முதல் இரவு 10 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமலும், ஈமச்சடங்குகளில் 20 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ளலாம்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் இயங்கும் பூக்கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. நாமக்கல் மற்றும் ராசிபுரம் நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் இறைச்சி வாங்குவதற்கு அதிகமாக கூட்டம் கூடுவதால் நாமக்கல் நகராட்சியில், காவேட்டிப்பட்டி (சிட்கோ காலனி அருகில்), மோகனூர் ரோடு, சேலம் பைபாஸ் ரோடு (முதலைப்பட்டி மேம்பாலம் அடியில்), கருப்பட்டிப்பாளையம் பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் இறைச்சி விற்பனை செய்யலாம். ராசிபுரம் நகராட்சியில் சேந்தமங்கலம் ரோடு (கொங்கு கல்யாண மண்டபம் அருகில் உள்ள காலியிடம்), டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் பதிவு செய்யாமல் செயல்படும் சிறு உணவகங்கள் 300 மீட்டருக்குள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து பூங்காங்கள் மற்றும் கொல்லிமலை உட்பட அனைத்து சுற்றுலாத்தலங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு செல்வதற்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது இரண்டு தவணைகள் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

உள்ளூர் மக்கள் மற்றும் அவசரத் தேவைக்கு செல்பவர்களைத் தவிர மற்ற அனைவரும் கொல்லிமலை செல்வதற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். சாதாரண ஆட்டோக்களில் டிரைவர் உட்பட 3 பேரும், ஷேர் ஆட்டோக்களில் டிரைவர் உட்பட 4 பேரும் மற்றும் கார்களில் டிரைவர் உட்பட 4 பேரும் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றி நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதில் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார். கூட்டத்தில் டிஆர்ஓ துர்காமூர்த்தி, ஆர்டிஓக்கள் நாமக்கல் கோட்டைக்குமார், திருச்செங்கோடு இளவரசி, பிஆர்ஓ இளங்கோ, பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் பச்சமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Aug 2021 4:23 AM GMT

Related News