/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

தொழிற்சங்கங்கள் 2 நாளாக பொது வேலைநிறுத்தம் நடக்கும் சூழலில், திருவண்ணாமலையில் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
X

மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில்  திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம்  முன்பு மறியல் போராட்டம் நடந்தது.

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாவது நாளாக பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், எல்.ஐ.சி. உள்ளிட்ட பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்றும், பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முதல் நாளான நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள், ஆட்டோக்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன. இதனால் மாணவர்களும், பொதுமக்களும் தனியார் பேருந்துகளில் தொங்கியவாறு பயணித்ததுடன், அதிக விலை கொடுத்து தனியார் வாகனங்களில் சென்றனர்.

இந்நிலையில் இன்று தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் 60 சதவீதப் பேருந்துகள் இயங்கும் என தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது நாளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை மறுக்கும் மின்சார சட்டம் 2020-ஐ ரத்து செய்ய வேண்டும்.

தொழிலாளர்களின் 44 சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறைகளான எல்.ஐ.சி., ராணுவம், வங்கி, பி.எஸ்.என்.எல்., ரெயில்வே, கப்பல் துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதையும், கனிமவளங்களை கொள்ளை அடிப்பதையும் கைவிட வேண்டும். பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்திட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

கார், ஆட்டோ வழக்கம் போல் இயங்கியது. வங்கிகளும் செயல்பட்டன. அரசு அலுவலகங்களுக்கு இந்த வேலை நிறுத்தம் காரணமாக எவ்வித முடக்கமும் இல்லாமல் செயல்பட்டது.

மாவட்டத்தில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக அவர்கள் திருவண்ணாமலை எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் காங்கேயன், தொ.மு.ச. மண்டல பொது செயலாளர் சவுந்தரராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் முத்தையன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் 185 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆரணியில் சி.ஐ.டி.யு. அமைப்பின் சார்பில் ஊர்வலம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஆரணி அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் சென்றதும் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் காந்திரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சி.ஐ.டி.யு. அமைப்பின் மாவட்ட நிர்வாகி சி.அப்பாசாமி தலைமையில் அரசு ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட 119 பேரை ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் ஆகியோர் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன் பிறகு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். வேலை நிறுத்த போராட்டத்தால் ஆரணி தாலுகா அலுவலக கதவு மூடப்பட்டது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பூட்டப்பட்டது. இதனால் வருவாய்த்துறை அலுவலர்களை சந்திக்க வந்த பொதுமக்கள் சிரமப்பட்டனர். ஆரணியில் உள்ள அனைத்து அரசு வங்கிகளும் இயங்கின. வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் சிலர் ஈடுபட்டதால், சங்கத்தில் இல்லாதவர்கள் பணியாற்றினர். வங்கிகளுக்கு குைறந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் வந்தனர். இருப்பினும் அனைத்து சேவைகளும் நடந்தன.

போளூர் பஸ் நிலையம் அருகில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகள் தண்டபாணி, உதயகுமார், ராஜரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 58 பெண்கள் உள்பட 178 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் போளூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

போளூரில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் 44 பஸ்களில், இன்று 20 பஸ்கள் வெளியூருக்கும், 16 பஸ்கள் கிராமங்களுக்கும் இயக்கப்பட்டன.

சேத்துப்பட்டு நான்குமுனை சந்திப்பில் தொழிற்சங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. பின்னர் தொழிற்சங்கத்தினர் அங்கிருந்து ஊர்வலமாக சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பெரணமல்லூர் அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விவசாய சங்க பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

வந்தவாசியில் அஞ்சல் அலுவலகம் முன்பும், தெள்ளாரில் காவல் நிலையம் எதிரிலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த இரண்டு இடங்களிலும் நடந்த போராட்டத்தில் மொத்தம் 128 பேரை கைது செய்து அந்தந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். வந்தவாசி பகுதியில் அரசு பஸ்கள் குறைவாகவும், தனியார் பஸ்கள் வழக்கம் போலவும் இயங்கின.

கீழ்பென்னாத்தூரில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகளான ராஜேந்திரன், கனகராணி, பரமன், ஏழுமலை, ராதாகிருஷ்ணன், முருகன், சரவணன் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல செய்யாறு, செங்கம், கண்ணமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது எனவே அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் இன்று பணிக்கு வந்திருந்தனர், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளில் 50 சதவீத ஊழியர்கள் விடுப்பு அளித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

பெரும்பான்மையான பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை அதிகபட்ச எண்ணிக்கையில் இருந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் மருத்துவ விடுப்பு தவிர்த்து தற்செயல் விடுப்பு உள்ளிட்ட காரணங்களால் நேற்று பணிக்கு வராத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் விபரம் சேகரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Updated On: 29 March 2022 6:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு