/* */

ஸ்ரீ பட்டீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் நிறுத்தம்

பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக செய்யாறு ஸ்ரீ பட்டீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஸ்ரீ பட்டீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் நிறுத்தம்
X

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் முன் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அமைந்துள்ள ஸ்ரீ ஈஸ்வரன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலம் அங்குள்ள வைத்தியர் தெருவை சேர்ந்த புளியந்தோப்பு பகுதியில் இருந்து வருகிறது.

அந்த இடத்தில் 17 பேர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.அறநிலையத் துறைக்கு உட்பட்ட இந்தக் கோவிலை நிர்வகித்து வரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சமூகத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 18ஆம் தேதி அறநிலையத்துறையினர் போலீசார் அப்பகுதியில் முகாமிட்டனர். அப்போது எழுந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கைவிடப்பட்டது.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தலைமையில் ஏ.டி.எஸ்.பி. ராஜா காளீஸ்வரன் மேற்பார்வையில் டி.எஸ்.பி.க்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அப்போது அங்கு வீடு கட்டி வசித்து வருபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு தயார் நிலையில் இருந்த பொக்லைன் இயந்திரம் முன் அமர்ந்து குடியிருப்புகளை இடிக்கக் கூடாது என முழக்கங்களை எழுப்பினர்.

அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் மற்றும் பா.ம.க.வினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலகங்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மூன்று தலைமுறையாக இங்கே வசித்து வருவதாகவும் திடீரென காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே போவோம் என்றும் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் வட்டாட்சியர் சுமதி மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை அளவையர்கள் நிலத்தை அளவீடு செய்ததில் திருப்தி இல்லை. வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் அளவீடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வந்திருந்த ஊழியர் உதயபானு அங்கிருந்து வெளியேறினார் , அங்கு வந்திருந்த அதிகாரிகள் வெளியேறினர். அதன் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டது.

Updated On: 28 April 2022 7:44 AM GMT

Related News