/* */

திருவண்ணாமலையில் திரும்பிய பக்கமெல்லாம் சாமியார்கள்..! நிஜமா? போலியா? படிங்க

திருவண்ணாமலையில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளது என்று புராணப்பெயர் மறைந்து தற்போது அடிக்கு ஒரு சாமியார் என்ற புது மொழி உருவாகிவிட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் திரும்பிய பக்கமெல்லாம் சாமியார்கள்..! நிஜமா? போலியா?  படிங்க
X

போதையில் கீழே விழுந்து கிடக்கும் சாமியார்.

திருவண்ணாமலையில் அடிக்கு ஒரு லிங்கம் உள்ளது என்கிறது புராணம். ஆனால், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அடிக்கு ஒரு சாமியார் என வரிசைக்கட்டி அமர்ந்து உள்ளார்கள் என்பது அதிர்ச்சி தரும் இப்போதைய உண்மை.

திருவண்ணாமலை, ஆன்மிக நகரமாகும். ஆனால், ஆன்மிக நகரத்தை, நரகமாக்கும் சில சம்பவங்கள் நம்மை வேதனைப்படுத்துகிறது. பௌர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள் வருகை அதிகமாக, அதிகமாக அங்கு ஆன்மீகமற்ற, விரும்பத்தகாத காரியங்கள் தலைதூக்க ஆரம்பித்து விட்டன

பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாக திருவண்ணாமலை திகழ்கிறது என்ற நிலையைத் தாண்டி அவலங்களை சந்திக்கும் நிலைஏற்பட்டுளளது. இங்கு நடக்கும் தரமற்ற செயல்கள் அநீதியான செயல்களுக்கு அனுமதி அளித்ததுபோல இருக்கிறது. அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யவும், சுற்றிப்பார்க்கவும் பிற மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கிறார்கள். மேலும் கோவிலுக்கு ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் வருகின்றனர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட பல சாமியார்களும் திருவண்ணாமலைக்கு வந்து தங்கி உள்ளனர்.


திருவண்ணாமலையில் சந்நியாசி, சாமியார், சாது, சித்தர், பிச்சைக்காரன், வேவு பார்ப்பவன் என்று எல்லா வகையறாக்களும் காவியைக் கட்டிக் கொண்டு அலைந்து வருகிறார்கள் என்பதை நாம் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். பச்சை, ஊதா, கருப்பு, ஆரஞ்சு என்ற கடவுளுக்கான நிறங்களில் விற்கும் வேட்டிகள், அதற்கேற்ற நிறங்களில் விற்கும் சட்டைகள், துண்டுகள் சகிதம் உலாவரும் அனைவரும் சந்நியாசிகள் அல்லர் என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம். இது திருவண்ணாமலை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள மற்ற புண்ணியத் தலங்கள், கோவில்கள் போன்றவற்றுக்கும் பொருந்தும்.

காவி, பச்சை, ஊதா, கருப்பு போன்ற நிறங்களில் ஆடை அணிபவர் எல்லாம் சந்நியாசி ஆகிவிட முடியாது. இவர்கள் சாமி கோலத்தில் சுற்றித்திரியும் ஆசாமிகள். உழைப்பதை உதாசீனப்படுத்திவிட்டு சோம்பேறித்தனத்தை ஆடையாக தரித்துக்கொண்டவர்கள். கடவுளின் பெயரைக்கூறி கூச்சமின்றி யாசகம் பெறும் நாகரிக பிச்சைக்காரர்கள். ஆன்மிகம் எனும் புனிதத்தைக் கெடுக்கும் வல்லூறுகள்.

திருவண்ணாமலைக்குத் தினமும் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் மட்டும் தான் அண்ணாமலையார் கோவிலில் கூட்டம் இருக்கும். ஆனால் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. எல்லா நாட்களிலும் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. அதுவும் கிரிவலம் வரும் நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் இருப்பார்கள். ஆனால் தற்போது தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.

விடுமுறை நாட்கள் அல்லாத சாதாரண நாட்களிலேயே அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தது மூன்று மணி நேரம் ஆகின்றது. அந்த அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.

கிரிவலப் பாதையில் சாதுக்கள்?

கிரிவலப் பாதை முழுவதும் ஏராளமான சாதுக்கள் தங்கியுள்ளனர். திருவண்ணாமலையில் அருணகிரிநாதர், சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி போன்றோர் ஆன்மிகம் வளர தொண்டு செய்து அண்ணாமலையாரின் புகழை உலகெங்கும் பரவச் செய்தார்கள்.

ஆனால், இன்று ஆசிரமம் என்ற பெயரில் போலி சாமியார்கள் நிறைய பேர் கிரிவலப் பாதையில் இருந்தபடி தவறு செய்கிறார்கள் என்று வேதனையுடன் பக்தர்கள் வெளிப்படுத்துகின்றனர்.ஒரு சில ஆசிரமங்களைத் தவிர மற்றவை 'ஆ'சிரமங்களாக இருக்கின்றன. அந்த ஆசிரமங்களில் என்ன நடக்கிறது என்பதே வெளியில் தெரிவதில்லை. ஆன்மிக பணிக்கு எதற்குத் திரை?

அந்த 'ஆ'சிரமங்கள் கதவுகள் எப்போதும் பூட்டியே இருக்கும். வெளிநாட்டவர்கள் மட்டும் உள்ளே சென்று வருவார்கள். இப்படியும் சில ஆசிரமங்கள் உள்ளன என்று ஒரு பக்தர் வேதனை தெரிவித்தார்.

14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் நாம் சென்று பார்த்தோமேயானால் எப்பொழுதுமே நடைபாதை முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சாமியார்கள் வரிசை கட்டி உட்கார்ந்து இருப்பார்கள். இவ்வளவு சாமியார்களா என்று நமக்கே வியக்கத் தோன்றும்.

அடிக்கு ஒரு லிங்கம் போல் அடிக்கு ஒரு சாமியார் என வரிசையாக உட்கார்ந்து இருக்கிறார்கள். கிரிவலப் பாதை முழுவதும் இவ்வளவு சாமியார்களா? இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று தினமும் நமக்குள் ஒரு குறுகுறுப்பு. சரி சென்று தான் பார்ப்போமே என்று ஒருநாள் காலையிலிருந்து மாலை வரை கிரிவலப்பாதையில் எமது கவனத்தை செலுத்தினோம்.

எப்போதுமே நிஜத்தை விட போலிக்குத் தான் மதிப்பு அதிகம். ஆமாம், நாம் கிரிவலப்பாதையில் சென்றபோது பல சுவாரசியங்கள் இருந்தது. ஆஹா..! என்ன ஒரு ஆனந்தமான வாழ்க்கை தெரியுமா இந்த சாமியார்களுக்கு..!!? என்னதான் செய்கிறார்கள் என்று நீங்களும் பாருங்கள்.

சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு கணக்கெடுத்தபோது.

அவர்களது ஒரு நாளின் செயல்பாடு இங்கு தரப்பட்டுள்ளது.

நிம்மதியான இரவுத்தூக்கம் முடித்து காலையில் எழுந்ததும் அருகில் உள்ள குளம் அல்லது குடிநீர் டேங்கில் ஒரு காலை ஸ்நானம் செய்கிறார்கள். சாமியார்கள் அல்லவா..? திருநீர் இல்லாமல் இருப்பது பாவமல்லவா? நெற்றி தொடங்கி கை, கால் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொள்கிறார்கள். (சர்வம் சிவாயநம)

அருகிலுள்ள கோவில்களுக்குச் சென்று 'என் இன்றைய பணி சிறக்க வாழ்த்துங்கள்' என்று சாமியையும், நிமிர்ந்து நிற்கும் மலைக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு பக்தர்கள் கிரிவலம் வர அமைக்கப்பட்டுள்ள டைல்ஸ் நடைபாதையில் காலை 6:30 மணிக்கு எல்லாம் கரெக்டாக வந்து அவர்களது டூட்டியில் உட்கார்ந்து விடுகிறார்கள். கிரிவலம் வரும் பக்தர்கள் இவர்களுக்கு காபி, பால், டீ என அவர்கள் கேட்பதை வாங்கித் தருகிறார்கள்.

பின்னர், எட்டு மணி அளவில் பல ஆசிரமங்களைச் சார்ந்தவர்கள் டெம்போ வாகனத்தில் சுடச்சுட இட்லி, பொங்கல் சில நாட்களில் பூரி, வடை என தினமும் டிபன் வந்து விடுகிறது. (அடடே.. நாமும் இப்படி உட்கார்ந்து விடலாமோ என்று எண்ணத்தோன்றுகிறதா?)

எழுந்து வர முடியாத சாமி என்றாலும் கூட அன்னதானம் வழங்குபவர்களே அவர்கள் அருகில் சென்று அவர்களுக்கு உணவு தந்து கூடவே ஒரு சின்ன மினரல் வாட்டர் பாட்டிலையும் தருகிறார்கள். (வேறென்ன வேண்டும்? எதுக்கய்யா கஷ்ட்டப்பட்டு வேகாத வெயிலில் வியர்வை சிந்தி உழைக்கணும்?) (நன்றாக கவனியுங்கள் இவ்விடத்தில் நான் சொல்வது உண்மையான சாமியார்களுக்குப் பொருந்தாது.)

'அப்பாடா.. காலை டிபன் முடிந்தது.' அந்த டைல்ஸ் நடைபாதையில் படுத்துக்கொண்டே 11 மணி வரை ஆனந்தமாக கதை பேசத் தொடங்குகிறார்கள். அரசியல் தொடங்கி அவரவர் வீட்டு சமாச்சாரங்கள் வரை அங்கு அலசப்படுகின்றன. அவ்வப்போது இடைப்பட்ட நேரத்தில் கிரிவலம் வரும் பக்தர்கள் தரும் பணத்தை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொள்கிறார்கள்.

11 மணிக்கு மேல் ரமணாஸ்ரமம் சென்று அங்கு வழங்கப்படும் அன்னதானத்தை கொண்டுசென்ற டப்பாக்களில் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.

பின்னர் சரியாக 12 மணிக்கு சேஷாத்திரி ஆசிரமத்தில் சுடச்சுட சாம்பார் சாதம் அல்லது வெஜிடபிள் சாதம், புளி சாதம் என வெரைட்டி ரைஸ் ஒரு தட்டு நிறைய வழங்குகிறார்கள். அதை வாங்கி நிம்மதியாக அங்கேயே வைத்து சாப்பிட்டுவிட்டு தங்களின் இருப்பிடம் திரும்புகிறார்கள். மீண்டும் நான்கு மணி வரை முழுமையான ஓய்வு. ஓய்வுக்குப் பின்னர் ரமணாஸ்ரமத்தில் வாங்கிய உணவை நான்கு மணிக்கு மாலை சிற்றுண்டிபோல சிலர் சாப்பிடுகின்றனர்.

இதில் விசேஷ செய்தி, ஒரு சிலரைத் தவிர அனைத்து சாமியார்களும் 'டச்' போன் வைத்துள்ளனர். சிலர் எந்நேரமும் சர்வதேச வணிகத்தில் ஈடுபடுபவர்கள் போல பிசியாகவே இருக்கிறார்கள். ஒரு சிலர் ஐ பேட்,லேப்டாப் என ஹை டெக்காக இருப்பதுடன், எந்நேரமும் பிசியாகவே இருக்கிறார்கள்.

திடீரென ஒரு சாமியார் கோயிலில் உள்ள ஒரு குருக்களைத் தொடர்பு கொண்டு 'பெங்களூரில் இருந்து நமக்கு வேண்டப்பட்டவங்க வராங்க. அவங்களுக்கு கோயில்ல சிறப்பான மரியாதை செய்யணும்' என டீலிங்கும் நடக்கிறது. (அட..நம்மால் அப்படி டீல் பேச முடியுமா? என்று வியந்துகொண்டேன். வேறு என்ன செய்யமுடியும்?)

மாலைவேளை வந்தால் தென்றல் வீசுகிறதோ இல்லையோ, டெம்போ ட்ராவலர் வந்துவிடும். அதில் இரவு உணவு சுடச்சுட சப்பாத்தி, பொங்கல், கிச்சடி என பெரிய ஸ்டார் ஓட்டல் கணக்காக சுவையான உணவுகள். தன்னார்வலர்கள் தினமும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து வழங்கிச் செல்கிறார்கள். இப்படி சாமியார்களின் ஒருபுறத்தைக் கண்ட நமக்கு மாலை மங்கி, இரவு தொடங்கியதும் இந்த சாதுக்களின் மற்றொருபுறம் நமக்கு தெரியவந்தது. நாம் அதிர்ச்சியில் உறைந்துநின்றோம்.

இங்குள்ள ஒரு சில சாமியார்களுக்கு (கவனிங்க..ஒருசில) அதீத கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன என்பதை இரவு நேரங்களில் அறிய முடிந்தது. குறிப்பாக முலைப்பால் தீர்த்தம், திருநேர் அண்ணாமலை பகுதியில் உள்ள சில சாமியார்கள் கஞ்சா புகையை இழுத்தபடி மதிமயங்கி இருந்தார்கள். சிலர் எங்கோ சென்று சாராயம் குடித்துவிட்டு வந்தார்கள். 'எங்க சாமி சாராயம் கிடைக்குது?' என்று நாம் அவர்களின் வாயைக் கிளறுவதற்காக கேட்டபோது 'அதை போய் கேட்டுகிட்டு? நீங்க கெட்டுப் போயிடாதீங்க' என்று நமக்கு அறிவுரை வழங்கினார்.

எங்கேயோ தொலைவுல போய் வாங்கிட்டு வரோம் என்று பொத்தாம்பொதுவாக கூறினார். 'ஏன் அது பக்கத்தில் கிடைப்பதில்லையா?' என்று கேட்டபோது, தற்போது திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எடுத்த கடும் நடவடிக்கையால் பாதி சாமியார்கள் இடத்தை காலி செய்து விட்டார்கள். அதேபோல் கஞ்சா,சாராயம் விற்பவர்கள் எல்லாம் தற்போது வருவதே இல்லை. காரணம் காவல்துறையினர் அதிகளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிரிவலம் பாதையில் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற சர்ச்சையால் தற்போது அதிக அளவில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் சாமியார்கள் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றனர் என்று கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிரிவலப் பாதையில் தங்கி உள்ள சாதுக்களுக்கு ஐடி கார்டு வழங்கும் திட்டத்தை தொடங்கினார். சாமியார்களின் கைரேகைகள் எடுக்கப்பட்டு குற்றப் பின்னணியில் இருக்கிறார்களா என்று விசாரணை மேற்கொண்டார். இதனால் பாதி போலி சாமியார்கள் தங்களது ஊர்களுக்கே சென்று விட்டனர் என்று தனக்குத் தெரிந்த தகவலை தெரிவித்தார்.

இங்கு நீண்ட நாளாக தங்கி இருக்கும் சாமியார் ஒருவர் கூறும் போது, ' இங்கு தங்கியிருப்போரில் 80 சதவீதம் பேர் குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள். பக்தியாக வந்தவர்கள் 10 சதவீதம் பேர். காவியுடை தரித்த குற்றவாளிகள் 10 சதவீதம் பேர் என்றார் சாதாரணாமாக புள்ளிவிபரத்துடன்.

இதனால் கிரிவலப் பாதையில் நடக்கும் சில விரும்பத்தகாத செயல்களை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் கண்டறிந்து அப்பகுதியில் நீண்ட நாட்களாக தங்கி உள்ளவர்களிடம் விசாரணை செய்து உண்மையான சாதுக்களை மட்டும் அடையாள அட்டையுடன் அனுமதித்துவிட்டு மற்றவர்களை காப்பகங்களில் தங்க வைக்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பிலும் பகதர்கள் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆன்மிக நகரமான திருவண்ணாமலையின் புனிதம் உலகளாவியது. அதன் பேரையும் புகழையும் காப்பது நமது கடமை.

Updated On: 31 July 2023 7:50 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்