/* */

அரசு மருத்துவமனையில் மார்ச் 1ம் தேதி பிறந்த 35 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

அரசு மருத்துவமனையில் மார்ச் ஒன்றாம் தேதி பிறந்த 35 குழந்தைகளுக்கு அமைச்சர் வேலு தங்க மோதிரம் பரிசளித்தார்.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனையில் மார்ச் 1ம் தேதி பிறந்த 35 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு
X

மார்ச் ஒன்றாம் தேதி பிறந்த 35 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார் அமைச்சர் எ.வ.வேலு.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் பிறந்த நாளான மார்ச் ஒன்றாம் தேதி 18 பெண் குழந்தைகளும், 17 ஆண் குழந்தைகளும் பிறந்திருந்தனர். அவர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு தங்க மோதிரங்களை பரிசளித்தார்.

அப்பொழுது அந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் படி குழந்தைகளின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, திராவிடச் செல்வன், திராவிட செல்வி , கலைச்செல்வி போன்ற பெயர்களை சூட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்ட மருத்துவமனையாக இருந்த காலத்தில் இருந்தும் தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக உயர் பெற்று இருந்த இப்பொழுதும் கடந்த 17 ஆண்டுகளாக முதல்வர் பிறந்த நாளில் மார்ச் ஒன்றாம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டு அது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திராவிட மாடல் ஆட்சியிலே தமிழ் எங்கும் ஒலிக்க வேண்டும் என்று முதல்வர் அவர்கள் நினைக்கின்றார். அந்த அடிப்படையில் தான் கல்விக்கும் தமிழுக்கும் முக்கியத்துவம் தந்து பல திட்டங்களை தீட்டி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் .

இந்த தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சியின் போது தாய்மார்கள் தமிழக முதல்வர் நூற்றாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்தினார்கள். இந்த வாழ்த்துக்களோடு திருவண்ணாமலை மாவட்ட தமிழ் மக்களும் இணைந்து தமிழக முதல்வர் நூறாண்டு வாழ வேண்டும் என அந்த வாழ்த்துகளோடு நாங்களும் இணைந்து கொள்கிறோம் எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ. வே. கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் ,முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி

ஆரணி அரசு மருத்துவமனையில் மார்ச் 1-ந் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் மார்ச் 1-ந் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என நகரமன்ற தலைவர் மணி தெரிவித்து இருந்தார்.

அதன்படி ஆரணி அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி களம்பூர் பகுதியைச் சேர்ந்த பிறந்த பெண் குழந்தைக்கு தங்க மோதிரத்தை தி.மு.க. மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் அணிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகள் அனைவருக்கும் பழங்கள், ரொட்டி வழங்கினர்.

Updated On: 4 March 2023 3:12 AM GMT

Related News