/* */

இந்தியாவை இண்டியா கூட்டணி தான் ஆள வேண்டும்: ஸ்டாலின் பேச்சு

அதிமுகவை பொருத்தவரை எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்று தெளிவே இல்லாமல் களத்துக்கு வந்திருக்கிறார்கள் என முதல்வர் பேசியுள்ளார்.

HIGHLIGHTS

இந்தியாவை இண்டியா கூட்டணி தான் ஆள வேண்டும்: ஸ்டாலின் பேச்சு
X

பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

திருவண்ணாமலையில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோருக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

இது ஏப்ரல்தான். இன்னும் மே மாதம் இருக்கிறது. ஜூன் மாதம் இருக்கிறது. உங்கள் குழப்பங்கள் ஜூன் 4-ம் தேதி தெளிந்துவிடும். பாஜக எனும் மக்கள் விரோத ஆட்சியிடம் இருந்து, நாட்டுக்கு விடுதலை கிடைத்துவிடும். ஜூன் 3 - மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு. ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடுதலையின் துவக்க நாள். நம்மை எல்லாம் ஆளாக்கிய மறைந்த முதல்வர் கருணாநிதி, தன் வாழ்நாள் எல்லாம், எந்த ஜனநாயகத்தைக் காக்கப் பாடுபட்டாரோ, எந்த மதச்சார்பின்மையை உறுதியுடன் நிலைநாட்டினாரோ, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று தனது இறுதி மூச்சுவரை முழங்கினாரோ, அவற்றைப் பாதுகாக்கும் இண்டியா கூட்டணியின் வெற்றியை, அவரது நூற்றாண்டு பிறந்தநாள் பரிசாக வழங்குவோம்.

அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று பிரதமர் ஒரு உருட்டு உருட்டினார் பாருங்கள்,

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனைக் கைது செய்தார்களே, பிரதமர் மோடிக்குத் தெரியாதுதானே? டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைக் கைது செய்தார்களே, அதுவும் தெரியாதுதானே? காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி, உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை பல்டி அடித்ததே, அதுவும் அவருக்குத் தெரியாதுதானே? பாவம் உங்களுக்கு, நாட்டில் IT, ED, CBI இதெல்லாம், என்ன செய்கிறதென்று தெரியாது. நாங்கள் நம்பிவிட்டோம். இதெல்லாம் உங்களுக்குத் தெரியாது என்று சொன்னால், நாளைக்கு உங்களுக்கும் குஜராத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னால் நாட்டு மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்கள். அப்படியெல்லாம் நாட்டு மக்களைத் தப்புக் கணக்கு போடாதீர்கள் என்று மிகுந்த பணிவோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தெளிவே இல்லாமல்,

நடப்பது இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல். இண்டியா கூட்டணிதான் ஆள வேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், அதிமுகவைப் பொறுத்தவரை, யார் ஆள வேண்டும் என்று சொல்லாமல், யார் ஆளக் கூடாது என்று சொல்லாமல், யார்தான் உண்மையான எதிரி என்றே தெரியாமல், எதற்காகத் தேர்தலில் நிற்கிறோம் என்ற தெளிவே இல்லாமல், கள்ளக்கூட்டணிக்கு ஆதாயம் தேடித்தரக் களத்துக்கு வந்திருக்கிறார் பழனிசாமி!

ஒரு பக்கம் கூட்டணி முறிந்துவிட்டது என்று சொல்வார், மற்றொரு பக்கம் பாஜகவை எதிர்க்க முடியாது. அது கூட்டணி தர்மம் என்று சொல்வார். ஆளுங்கட்சியாக இருந்தால் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு, எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக எதிர்க்கிறார்கள் என்று சொல்வார். எதிர்க்கட்சியாக மக்களால் ஓரங்கட்டப்பட்ட பிறகு, எதிர்க்கட்சி ஏன் எதிர்க்க வேண்டும்? என்று அரசியல் தத்துவ மேதைகளே மயங்கி விழுவது போன்று புதுப் புது தத்துவங்களாகப் புலம்புவார்.

இப்படிப்பட்ட பழனிசாமி தமிழகத்துக்கு மட்டும் துரோகம் செய்தவர் இல்லை. தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேரையும் முதுகில் குத்தியவர். அவரின் ஃபிளாஷ்பேக் என்ன? கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போமா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, பழனிசாமி முதலில் சசிகலா அணியில் இருந்தார். சசிகலா முதல்வர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்தபோது, பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்று ஒரு காமெடி செய்தார். இந்த நிலைமையில் சசிகலா சிறைக்குப்போக, கூவத்தூர் கவனிப்புகளால் முதல்வரானார் பழனிசாமி.

உடனே, டிடிவி தினகரனுக்கு வாக்கு கேட்டுச் சென்றார். ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஆனது. 'கட் பண்ணா' பன்னீர்செல்வம்கூட கூட்டணி சேர்ந்து, அதே தினகரனுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அடுத்து, பொதுக்குழுவில் பன்னீர்செல்வத்துக்கு வாட்டர் பாட்டில் மரியாதை செய்தார். இப்படி ஒரு மெகா சீரியல் எடுக்கும் கதைபோன்று குழப்பங்கள் நிறைந்த துரோகக் கதைதான், பழனிசாமியின் கதை.

இப்போது, பிரிந்து போனவர்கள் பாஜகவுடன் நேரடி கூட்டணியாகவும், பழனிசாமி கள்ளக் கூட்டணியாகவும் வந்திருக்கிறார்கள். இப்போது, இதில் யாருக்கு யார் நண்பன்? யாருக்கு யார் எதிரி? யாருக்கு யார் துரோகி? இதற்கு பதில் என்ன தெரியுமா? இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் ஏன், ஒட்டுமொத்த இந்திய மக்களுக்குமே எதிரி மட்டுமல்ல, விரோதமான கூட்டணி. தமிழகத்தை வஞ்சித்த பாஜக அதற்குத் துணைபோகும் பாமக தமிழகத்தைப் பாழ்படுத்திய அதிமுக என்ற இந்த துரோகக் கூட்டணியை ஒருசேர வீழ்த்துங்கள்.தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு துணைநிற்கப் போகும் இண்டியா கூட்டணியின் மத்திய அரசை ஆட்சியில் அமர்த்துங்கள்' என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Updated On: 4 April 2024 2:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!