/* */

மாநகராட்சியானது திருவண்ணாமலை நகராட்சி..! மக்கள் மகிழ்ச்சி..!

திருவண்ணாமலை நகராட்சி மாநகராட்சியாக மாறுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளை நேற்று மாலை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மாநகராட்சியானது திருவண்ணாமலை நகராட்சி..! மக்கள் மகிழ்ச்சி..!
X

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் (கோப்பு படம்)

திமுக அரசு அமைந்து, அமைச்சர் எ.வ.வேலு பொறுப்பேற்ற நாள் முதல், திருவண்ணாமலை நகர மக்களிடையே திருவண்ணாமலை நகராட்சி மாநகராட்சி ஆக அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது.

ஆனால், திருவண்ணாமலை மாநகராட்சி ஆக்கப்படுமா? என்கிற விவாதம் மட்டும் பட்டிமன்றம் போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் எழுகின்ற சாதக , பாதகங்கள் எப்படி இருக்கும்? என்று தெரியாமல், அரசியல்வாதிகளும் மக்களும் அவர்களுக்குள்ளாக சில சந்தேகங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நேற்று மாலை (15.03.2024) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த அறிவிப்பு வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையை சுற்றியுள்ள 18 ஊராட்சிகளிடம், திருவண்ணாமலை மாநகராட்சியில் தங்களையும் இணைத்துக்கொள்ளும் வகையில் தீர்மானம் இயற்றி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புமாறு அவற்றுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டு,அதன் அடிப்படையில், 18 ஊராட்சிகளும், தங்களின் ஊராட்சிக் குழு கூட்டத்தை கூட்டி, தங்கள் ஊராட்சிகளை மாநகராட்சியில் சேர்ப்பதற்கு ஒப்புதல் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த தீர்மானம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டன. அவர் மூலமாக நகராட்சி நிர்வாகக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எதற்கு 18 ஊராட்சிகளையும் சேர்க்க வேண்டும்?

திருவண்ணாமலையை அப்படியே மாநகராட்சியாக மாற்றி விடலாமே, எதற்கு 18 ஊராட்சிகளையும் சேர்க்க வேண்டும்? என்கின்ற கேள்வி பல ஊராட்சிகளில் எழுந்தது. இந்தக் கேள்விகள் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் , மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றால், முதலில் மாநகராட்சியின் குறைந்தபட்ச மக்கள்தொகை மூன்று லட்சமாக இருக்க வேண்டும். 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, திருவண்ணாமலையின் மக்கள் தொகை ஒரு லட்சத்து 46 ஆயிரம். இந்த 12 வருடங்களுக்கு 20% அதிகரித்தாலும், ஒரு லட்சத்து 75 ஆயிரம் வரைதான் மக்கள்தொகை உள்ளது.

மாநகராட்சியாக மாற்றுவதற்கு, 3 லட்சம் மக்கள் தொகை வேண்டும் என்கின்ற அடிப்படையில், சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 ஊராட்சிகளினுடைய இணைப்பின் மூலமாக, 3 லட்சம் என்ற மக்கள் தொகை கணக்கை எட்ட முடியும்.

அதேபோல, மாநகராட்சியின் வரி மற்றும் இதர வசூல், குறைந்தபட்சம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.30 கோடி என்பதாக இருக்க வேண்டும். திருவண்ணாமலை நகராட்சியின் வருவாய் தற்பொழுது ரூ.26 கோடி என்பதாக உள்ளது. இந்த 18 ஊராட்சிகளை சேர்ப்பதன் மூலம், 30 கோடிக்கும் அதிகமாக வரி வசூல் மாறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாநகராட்சியில் சேர்க்கப்பட ஒப்புதல் கேட்கப்பட்ட ஊராட்சிகள்:

வேங்கிக்கால், சின்ன காங்கேயனூர், சே. கீழ்நாச்சிப்பட்டு, நொச்சி மலை, ஏந்தல், கீழ்கச்சிசராப்பட்டு, மேலத்திக்கான், தென்மாத்தூர், நல்லவன்பாளையம், கணந்தம் பூண்டி, ஆணாய் பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை, தேவானந்தல், ஆடையூர், சாவல் பூண்டி. மலப்பம்பாடி, உள்ளிட்ட 18 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இது தவிர அண்ணாமலையார் மலை மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளும் இணையும் இதன் மூலம் 104.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக திருவண்ணாமலை மாநகராட்சி விளங்கும்.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் திருவண்ணாமலை அநேகமாக 110 விதியின் கீழ், திருவண்ணாமலை, மாநகராட்சியாக அறிவிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் திடீரென்று நேற்று முதலமைச்சர் திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார்.


வரிகள் உயர்த்தப்படுமா?

ஒரு நகராட்சியானது, மாநகராட்சியாக மாறிவிட்டால், அதன் வருவாய்க்காக பொதுமக்களின் வீட்டு வரி, குடிநீர் வரி என பல வரிகள் உயர்த்தப்படும் என்கிற கருத்து பொதுமக்களிடத்திலேயே உள்ளது. மக்கள் பிரதிநிதிகளும் இதே கருத்தை கொண்டுள்ளார்கள். ஆனால், மாநகராட்சியாக மாறுவதனால் மட்டுமே வரி உயர்வு செய்யப்படும் என்பது கிடையாது. வழக்கமாக, மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு, தற்பொழுது நகராட்சிகளில் வசூல் செய்யப்படும் வரிகளே, எந்த மாறுதலுமின்றி வசூலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இது தேவையில்லாத அச்சம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேசமயம், மாநகராட்சியாக தரம் உயர்வதால், பொதுமக்களிடையே வருவாய் வருவதற்கும் பல வாய்ப்புகள் உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலையை பொருத்தவரை, குறைந்தபட்சம் 48 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம் அல்லது இன்னும் 5 வார்டு உறுப்பினர்கள் கூடுதலாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளன. அதேபோல, தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், மண்டல உறுப்பினர்களாகவோ அல்லது வார்டு உறுப்பினர்களாகவோ கருதப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அவர்களுடைய பதவிக்காலம் முடியும் வரை இது தொடரலாம் என்றும் சொல்லப்படுகிறது.

எது எப்படியோ, மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்து, முதல் நிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சியாக மாறி, மாநகராட்சியாக அறிவிக்கப்பட இருக்கும் திருவண்ணாமலை, ஒரு மெட்ரோ பாலிட்டன் நகரமாக மாறப்போகிறது என்பது திருவண்ணாமலைக்கு ஒரு பெரிய அந்தஸ்தைக் கொடுத்துள்ளது.

இதன் காரணமாக, கோவிலைத் தாண்டி திருவண்ணாமலையின் வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

125 வருட பழமையான திருவண்ணாமலை நகராட்சி, முதல் பெண் மேயர்

1.4.1896 -இல் மூன்றாம் நிலை நகராட்சியாக திருவண்ணாமலை அறிவிக்கப்பட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நகர்மன்ற தலைவராக 1924 -இல் பொறுப்பேற்றவர் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார். அவருக்கடுத்து, மக்கள் பிரதிநிதிகளாக ராமு முதலியார், வெங்கடாசலம் செட்டியார், ப.உ.ச., டி.எஸ்.சாமிநாத முதலியார், பழனி பிள்ளை, பட்டுசாமி, விஜயராஜ், தர்மலிங்கம், முருகையன், பவன்குமார், ஸ்ரீதரன் (2 முறை), பாலச்சந்தர் ஆகியோர் திருவண்ணாமலை நகராட்சி தலைவர்களாக பதவி வகித்தனர்.

இவர்களைத் தொடர்ந்து, தற்போது திருவண்ணாமலை நகராட்சியின் முதல் பெண் தலைவராகவும் நகராட்சியின் 14 வது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராகவும் நிர்மலா வேல்மாறன் பணிபுரிகிறார். திருவண்ணாமலை, மாநகராட்சியாக மாறும்போது, மாநகராட்சியின் முதல் மேயராகவும், முதல் பெண் மேயராகவும் நிர்மலா வேல்மாறன் செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

Updated On: 16 March 2024 5:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?