/* */

புதுக்கோட்டை வளமான நிலத்தடி நீரைக் கொண்டிருந்தது :எழுத்தாளர் நக்கீரன்

அத்தனை வளம்மிக்க புதுக்கோட்டைதான் இப்போது தைலமரக்காடுகளால் மிகுந்த சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது என்றார்

HIGHLIGHTS

புதுக்கோட்டை வளமான நிலத்தடி நீரைக் கொண்டிருந்தது :எழுத்தாளர் நக்கீரன்
X

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் பேசுகிறார், எழுத்தாளர் நக்கீரன்

காவிரியாறு மூன்று வழிகளில் பாய்ந்து வளமான நிலத்தடி நீரைக் கொண்டிருந்தது புதுக்கோட்டை மாவட்டம் என்றார் எழுத்தாளர் நக்கீரன்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை நடைபெற்ற பிற்பகல் அமர்வில் சுற்றுச்சூழலும் புதுக்கோட்டையும் என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது

ராஜராஜ வளநாட்டுப் பன்றியூர் என்ற பெயர் புதுக்கோட்டைக்கு இருந்திருக்கிறது. பன்றிகள் இருந்த காடு என்றால், அந்த ஊர் எந்தளவுக்கு வளமுடன் இருந்திருக்க வேண்டும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.அதன்பிறகு கோன் நாடு, கான் நாடு என்றெல்லாமும் புதுக்கோட்டைப் பகுதிகள் அழைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் வளம் கொழித்த முல்லை நிலமாக இருந்த புதுக்கோட்டை, பாலையாக மாறக் காரணம் என்ன என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும்.

தமிழ் நிலப்பகுதியில் கண்டறியப்பட்ட கற்றளிக் கோவில்களில் அதிகமானவை தஞ்சை மாவட்டத்திலுள்ளன. அத்தனைக் கற்களையும் தந்த பகுதி புதுக்கோட்டைப் பகுதி. இங்குள்ள குன்றுகள் எல்லாம் அப்போது அழிக்கப்பட்டன. அநேகமாக முதல் குவாரி புதுக்கோட்டைப் பகுதியில்தான் இருந்திருக்கக் கூடும். குன்று என்பது நுண்காலநிலையைக் கொண்ட பகுதி என்று சூழலியலாளர்கள் அழைக்கிறோம். அத்தனை வளம் நிறைந்த பகுதிகள் குவாரிகளால் அழிந்தன.

ஒரு காலத்தில் மண் உப்பு அதிகமாக இருந்த பகுதி புதுக்கோட்டைப் பகுதி. கடல் உப்பை விட விலை குறைவாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், கடல் உப்பைவிடவும் மென்மையாகவும் இருந்த மண் உப்பு, சமஸ்தானமாக இருந்த காலத்தில் 175 இடங்களில் எடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

அதன்பிறகு, சமஸ்தான அரசு அதிக வரியை விதித்த காரணத்தால், இங்கிருந்து 88 ஆயிரம் பேர் சூழலியல் அகதிகளாக வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களில் 70 ஆயிரம் பேர் இலங்கைக்குச் சென்றனர். இவர்களை சூழலியல் அகதிகள் என்றழைக்கிறோம். 85 ஆயிரம் என்பது சாதாரண எண்ணிக்கையல்ல, சமஸ்தானத்தின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர்.

அறந்தாங்கிப் பகுதியில் இப்போதும் நரசிங்கக் காவிரி என்ற பெயரில் ஆறு இருக்கிறது. காவிரி என்ற பெயர் எங்கிருந்து வந்திருக்கக் கூடும் என ஆய்வு செய்யலாம். குடகில் உற்பத்தியாகும் காவிரியாறு, ஒரு காலத்தில் சென்னையிலுள்ள கொசஸ்தலை ஆற்றின் வழிதான் கடலில் கலந்திருக்கிறது. அதன்பிறகு பாலாற்றின் வழியே, கடலில் கலந்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளாற்றில் வழியே மணமேல்குடியிலும், அதன்பிறகு அம்புலியாற்றின் வழி்யே சேதுபாவாசத்திரத்திலும், அதன்பிறகு அக்னியாற்றின் வழியே அதிராம்பட்டினத்திலும் காவிரி கடலில் கலந்திருக்கிறது. இவையெல்லாம் பூமிக்கடியில் நகரும் தட்டுகளால் ஏற்பட்ட மாற்றம்.

அப்படியானால், புதுக்கோட்டை எத்தனை வளமையான நிலத்தடி நீரைக் கொண்ட பகுதியாக இருந்திருக்கும் என்பதைப் பார்க்கலாம். .எனவே, புதுக்கோட்டையை வறட்சியான மாவட்டம் எனக் கூற வேண்டாம், புதுக்கோட்டை நிறைய தியாகங்களைச் செய்த மாவட்டம் என்பதுதான் சரியானது. அத்தனை வளம்மிக்க புதுக்கோட்டைதான் இப்போது தைலமரக்காடுகளால் மிகுந்த சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது என்றார் நக்கீரன்.

முன்னதாக என்னை வழிநடத்திய புத்தகங்கள் என்ற தலைப்பில் முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா, கதைகளின் கதை என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகியோரும் பேசினர். நிகழ்ச்சிக்கு, மூத்த மருத்துவர் ச.. ராம்தாஸ் தலைமை வகித்தார்.

Updated On: 3 Aug 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்