/* */

அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி

தேர்தல் களத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்புடன் வேட்பாளர்கள் கைகுலுக்கி கொள்வது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
X

தோளை தட்டி கைகுலுக்கி கொண்ட சு வெங்கடேசன்- சரவணன், கட்டிப்பிடித்துக்கொண்ட தமிழச்சி தங்கபாண்டியன்- தமிழிசை சவுந்தரராஜன்.

மதுரையில் நடந்த சம்பவம் ஒன்று, தமிழக மக்களுக்கு மீண்டும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக ஒரு அரசியலில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அல்லது எதிர் சித்தாந்தத்தில் பயணித்தாலும் சரி, மரியாதை நிமித்தமான சந்திப்புகள் நடைபெறுவது என்பது தமிழகத்தில் நடக்கக்கூடிய வழக்கமான ஒன்றுதான்..

ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக தலைவர்கள், எதிர்க்கட்சிகளுடன் பேசுவதையே தவிர்த்தார்கள்.. நேருக்கு நேர் சந்திக்க வேண்டி வந்துவிடுமே என்று பெரும்பாலான நிகழ்வுகளை தவிர்த்து விடுவார்கள்.

தற்போது கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகளுமே இல்லாத இன்றைய அரசியல் சூழலில், அரசியல் நாகரீகம் என்பது காணாமல் போய்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் கடந்த கால அதிமுக காலத்திலும் ஆங்காங்கே தென்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இந்த சலசலப்புகள் ஓரளவு குறைய துவங்கி உள்ளன. இதற்கு உதாரணமாக, பாஜக ஆதரவாளரான ரங்கராஜ் பாண்டே வீட்டிற்கு, முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்ததை இங்கு சுட்டிக்காட்டலாம். பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் அப்பா, ரகுநாதாசார்யா காலமான நிலையில், முதல்வர் ஸ்டாலின், பாண்டேவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். ரங்கராஜ் பாண்டேவின் கையை இறுக்கமாக பற்றி ஆறுதலையும் சொல்லியிருந்தார்.. இதுகுறித்து, முதல்வரும், ட்வீட் போட்டு பதிவிட்டும் இருந்தார்.அதேபோல, சில நாட்களுக்கு முன்புகூட, சென்னையில் ஓபிஎஸ் வீட்டுக்கு சென்று, தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.

அந்தவகையில், சொந்த கட்சியையும் தாண்டி, தமிழக அரசியல் தலைவர்கள், இன்ப, துன்பங்களில் பங்கேற்று, அரசியல் நாகரீகங்களை அவ்வப்போது இழையோடவிட்டு வருவது, மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் சமீபகாலமாகவே மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறது.

தற்போது எம்பி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகத்திலும் தேர்தல் பிரச்சாரங்கள் களை கட்டி உள்ளன. இந்த முறை திமுக - அதிமுக - பாஜக என 3 கட்சிகளுமே களம் காண்கின்றன. அதிலும் பெரும்பாலான தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் சூழலும் களத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதி மக்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளும்போது, அந்தந்த வேட்பாளர்கள் ஒரே தொகுதிக்குள் நேருக்கு நேர் யதேச்சையாக சந்தித்து கொள்வது இயல்பாக நடக்ககூடிய விஷயமே.

அந்தவகையில், 2 நாட்களுக்கு முன்பு, சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடத்தில், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனும், பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனும் நேருக்கு சந்தித்து கொண்டார்கள். ஒருவரையொருவர் பார்த்ததுமே, அங்கேயே கட்டியணைத்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தமிழிசை பக்கத்திலேயே மூத்த தலைவர் கரு நாகராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தார்கள்.. அவர்களுக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்து சொன்னார்.

தமிழிசை + தமிழச்சி இருவரின் அப்பாக்களும் எம்எல்ஏ குடியிருப்பில் அருகருகே குடியிருந்தவர்களாம். அதனால், அப்போது முதலே இருவருக்கும் இடையே நட்பு இருந்து வந்துள்ள நிலையில், இப்போது நேருக்கு நேர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டார்கள். அப்படித்தான் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரும், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டார்கள்.ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் நவாஸ்கனியும் ஓபிஎஸ்சும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்கள்.

இதோ இப்போது மதுரையில் இதே நிகழ்வு நடந்துள்ளது. மதுரை தொகுதிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தபோது அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டார்கள். சரவணனின் தோளை தொட்டு, அவரிடம் நலன் விசாரித்தார் வெங்கடேசன். அதேபோல, சரவணனும், வெங்கடேசனுக்கு வாழ்த்துக்களை சொன்னார். இருவருமே ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி கொண்டார்கள். இதனால், சுற்றியிருந்த 2 கட்சி நிர்வாகிகளும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்.

அரசியலில் எதிர் எதிர் பாதையில் பயணித்தாலும், கட்சி தலைவர்களிடம், அன்பும் நட்பும் நீடித்தே வருவது, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது. ஆக மொத்தம், அரசியல் நாகரீகம் இன்னும் தமிழ்நாட்டில் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடவில்லை என்பதும், அது மீண்டும் துளிர்த்து தழைக்க தொடங்கிவிட்டது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி கொண்டிருக்கிறது என்பதை பாராட்டியே தீரவேண்டும்.

Updated On: 28 March 2024 3:27 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  3. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  5. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  6. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருத்தணி
    திருத்தணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...