/* */

இந்தியா, பிரிட்டன் இடையேயான 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய மருந்து உற்பத்தி துறையை புகழ்ந்தார். உலகத்தின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

HIGHLIGHTS

இந்தியா, பிரிட்டன் இடையேயான 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
X

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இந்தச் சூழலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். முதல் நாளில் அவர் குஜராத்தில் சுற்றுப் பயணம் செய்தார், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

2-வது நாளான நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் போரிஸ் ஜான்சனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்த மகிழ்ச்சியான வரவேற்புக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு போரிஸ் ஜான்சன் நன்றி தெரிவித்தார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்து பேசினார். அப்போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தீபாவளிக்கு முன்பாக இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்திப்பின்போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் முக்கியமாக இந்திய அணுசக்தி துறை, பிரிட்டன் எரிசக்தி துறை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ஹரியாணாவின் ஜாஜார் பகுதியில் செயல்படும் அணுசக்தி பங்களிப்புக்கான சர்வதேச மையத்துக்கு தேவையான உதவிகளை பிரிட்டன் வழங்கும்.

மத்திய வெளியுறவுத் துறை, பிரிட்டன் காமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகம் இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி இரு நாடுகளும் இணைந்து சர்வதேச புதுமை கண்டுபிடிப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளன. அப்போது பாதுகாப்பு, பொருளாதாரம், அணுசக்தி, பருவநிலை மாறுபாடு, சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது: எனது மிகச் சிறந்த நண்பர் நரேந்திர மோடி. இந்தியாவில் தங்கியிருந்த 2 நாட்களும் மிக அருமையாக இருந்தது. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்டரீதியான பாதுகாப்பு உள்ளது. சில மனித உரிமை மீறல் பிரச்சினைகள் குறித்து நட்புரீதியாக ஆலோசித்தோம். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத குழுக்கள் பிரிட்டனில் செயல்பட அனுமதிக்க மாட்டோம்.

வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி, விஜய் மல்லையாவை நாங்கள் வரவேற்கவில்லை. அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப பிரிட்டன் அரசு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துவிட்டது. எனினும் சில சட்டரீதியான சிக்கல்கள் எழுந்துள்ளன. இருவரையும் இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இரு நாடுகளின் பாதுகாப்பு உறவு மேலும் வலுப்படுத்தப்படும். நிலம், கடல், விண்வெளி, சைபர் பாதுகாப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் போர் விமானங்களின் உற்பத்திக்கு தேவையான உதவிகளை வழங்குவோம். இதேபோல இந்திய பெருங்கடலில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேவையான தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவோம்.

இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வரும் தீபாவளிக்கு முன்பாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கிறேன். உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மதிக்கிறோம். உக்ரைனின் புக்சா நகரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்ததை வரவேற்கிறோம். உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சமரசத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இதில் ரகசியம் எதுவும் இல்லை. ரஷ்யா, உக்ரைன் தலைவர்களுடன் அவர் பலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறார். உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. இவ்வாறு போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இந்தியா, பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் இரு நாடுகளும் தீவிரமாக உள்ளன. இந்த பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இதேபோல பிரிட்டன் உடனான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறேன். பாதுகாப்புத் துறையில் இந்தியாவும், பிரிட்டனும் இணைந்து செயல்படும். பாதுகாப்பு துறை சார்ந்த இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் தொழில்நுட்ப உதவிகளை வழங்க பிரிட்டன் முன்வந்திருப்பதை வரவேற்கிறேன். உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வரவேண்டும். அமைதி திரும்ப வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. உக்ரைனும் ரஷ்யாவும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும். என மோடி தெரிவித்தார்.

Updated On: 23 April 2022 1:34 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  8. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  9. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...