/* */

'உழவர்களின் பங்களிப்பே நமது முன்னுரிமை' என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம்

உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் சிறந்த செயல்திறனுக்காக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் க்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் கலெக்டர் வழங்கினர்.

HIGHLIGHTS

உழவர்களின் பங்களிப்பே நமது முன்னுரிமை என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம்
X

உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் சிறந்த செயல்திறனுக்காக வங்கி மேலாளர் மணிராஜூக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை  கலெக்டர் வழங்கினார்

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள தனியார் அரங்கத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் குறித்து 'உழவர்களின் பங்களிப்பே நமது முன்னுரிமை' என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவிதேஜா, வேளாண் விளைபொருளின் மதிப்புக்கூட்டு தொழிற்நுட்பத்தின் முனைவர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழக முதல்-அமைச்சர் இந்திய நாட்டிலேயே முதன் முறையாக விவசாயிகளுக்கு என்று தனி நிதி ஒதுக்கி தமிழ்நாடு விவசாய துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் எண்ணற்ற பல நல்ல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். பிரதமரின் உணவு பதப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் மற்றும் வங்கியின் மூலம் கடனுதவி தரப்படுகிறது. இது மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் தமிழக அரசு இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை விட தற்போது மணிலா பயிரிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தாண்டு விவசாயிகள் 80 ஆயிரம் ஹெக்டர் மணிலா பயிர் வைத்துள்ளார்கள்.

மாவட்டத்தில் 2.3 லட்சம் விவசாயிகள் மணிலா பயிரை நம்பி வாழ்ந்து வருகிறார்கள். விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின்படி மத்திய அரசு அறிவித்து மாநில அரசு செயல்முறைபடுத்தி வருகிறது.

தமிழ்நாட்டிலேயே அதிகமாக இது வரைக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் 61 தனிநபருக்கு வங்கி கடனுதவி வழங்கி இருக்கிறோம். வங்கியாளர்கள் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் நிலுவையில் உள்ள 60 விண்ணப்பங்களை விரைவாக ஆராய்ந்து அவர்களுக்கு வங்கி கடனுதவி வழங்க வேண்டும் என்று கூறினார் .

மேலும் அவர் கூறுகையில், கீழ்பென்னாத்தூரில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 7 உணவு பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் அதிகம் நடைபெறும் மாவட்டம். ஆதலால் இ-மார்க்கெட் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்றார்.

முன்னதாக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் நடைபெற்ற பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை கலெக்டரும், இயக்குனரும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் சிறந்த செயல்திறனுக்காக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மணிராஜூக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயமும், பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் ஹரக்குமார் மற்றும் மாவட்ட வள அலுவலர் ஷாம்சுந்தர் ஆகியோருக்கு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் மற்றும் கலெக்டர் பாராட்டு சான்றிதழை வழங்கினர்.

நிகழ்ச்சியில் வேளாண்மை வணிகத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 28 April 2022 4:45 AM GMT

Related News