/* */

திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி

திருவண்ணாமலையிலிருந்து நேற்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள்  இல்லாததால் பக்தர்கள் அவதி
X

பேருந்திற்காக காத்திருந்த பக்தர்களின் கூட்டம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அன்று இரவு பராசக்தி அம்மனின் பூப்பல்லக்கு விழா விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள்.

குறிப்பாக சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீப பௌர்ணமி ஆகிய தினங்களில் திருவண்ணாமலையில் 15 லட்சத்திலிருந்து 40 லட்சத்துக்கு மேற்பட்ட உள்ளூர், வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய வெளிமாநில பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள்.

அந்த வகையில் நேற்று முன்தினம் அதிகாலை 4:17 மணி முதல் 24 ஆம் தேதி நேற்று அதிகாலை 5:47 மணி வரை சித்ரா பௌர்ணமி கிரிவலம் நடைபெற நிலையில், சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலத்திற்கு திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஊர்களில் இருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று அதிகாலை சித்ரா பௌர்ணமி நிறைவுற்றதால் படிப்படியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

வழக்கம்போல் இயங்கும் பேருந்துகள் மட்டுமே இயங்கின.

இதனால் நேற்றும் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி செல்வதற்கு பேருந்துகள் இல்லாததால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

வழக்கம்போல் வரும் பேருந்தில் பொதுமக்கள் முட்டி மோதி ஏறுகிற நிலை ஏற்பட்டது.

அதேபோல் ரயில் நிலையத்திலும் பக்தர்கள் முட்டி மோதி ரயிலில் ஏறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வயதானவர்கள் குழந்தையுடன் வந்த தாய்மார்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் திருவிழாக்கள் முடிந்த பிறகும் ஒரு நாளைக்கு கூடுதல் ரயில் , பேருந்து இயக்கினால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் , பக்தர்கள் கோரிக்கையாக வைக்கின்றனர்.

Updated On: 25 April 2024 1:32 AM GMT

Related News