/* */

இந்தியாவில் ஆரோக்கியமற்ற சூழலில் தள்ளாடும் லாரித்தொழில்: தனி வாரியம் அமைக்க கோரிக்கை

தரமற்ற சாலைகள், அதிகாரிகள் அலைக்கழிப்பு போன்ற காரணங்களால் லாரித்தொழில் நிலையற்று தள்ளாடி வரும் சூழல் நிலவுகிறது.

HIGHLIGHTS

இந்தியாவில் ஆரோக்கியமற்ற சூழலில் தள்ளாடும்  லாரித்தொழில்: தனி வாரியம் அமைக்க கோரிக்கை
X

லாரிகள்.

நாமக்கல்:

இந்தியாவில் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் லாரித்தொழில் தள்ளாடி வருகிறது. இத்தொழில் வளர்ச்சிக்கு, தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் 1 டன் முதல் 50 டன் வரை சரக்கு ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் உள்ளன. சரக்கு ஆட்டோ முதல் கனரக லாரிகள், ட்ரெய்லர்கள், டேங்கர்கள், சிமெண்ட் பல்கர்கள் போன்ற பல வகையான வாகனங்கள் ஓடி வருகின்றன. இவற்றில் சுமார் 28 லட்சம் லாரிகளும், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர சரக்கு வாகனங்குளும் உள்ளன. 20 ஆண்டுக்கு மேல் பழமையான வாகனங்கள் முதல் புதிய வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு லாஜிஸ்டிக் கம்பெனிகள் மற்றும் புக்கிங் ஏஜெண்டுகள் இருந்தபோதிலும், 1 முதல் 10 லாரிகள் வரை வைத்துள்ள சிறிய அளவிலான லாரி உரிமையாளர்கள் இந்தியாவில் 70 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள், பல இடங்களில் கடன் பெற்று வாகனங்களை வாங்கி ஓட்டி வருவதால், தொழிலில் வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.

வண்டியை சிறந்த முறையில் பராமரிப்பது, டிரைவர்களுக்கு அடிப்படை தேவைகளை அமைத்துக் கொடுப்பது போன்றவைகளில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் இந்தியாவில் லாரித்தொழில் ஆரோக்கியமற்ற நிலையில் இயங்கிக் கொண்டுள்ளது. சராசரியாக ஒரு லாரி ஒரு ஆண்டில் 75,000 முதல் 1,30,000 கி.மீ தூரம் வரை பயணிக்கின்றன. லாரிகளுக்கு தேவையான மிக முக்கிய எரிபொருளான டீசலில் கூட, விலை மலிவுக்கு ஆசைப்பட்டு பல உரிமையாளர்கள் கலப்பட டீசலை பயன்படுத்துகின்றனர். இதுபோன்று ஆயில், ஸ்பேர் பார்ட்ஸ் போன்றவற்றிலும் போலிகள் ஏராளமாக உள்ளன. இதனால் வாகனம் விரைவில் பழுதாவதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. மொத்த போக்குவரத்தில் 2 சதவீதம் உள்ள லாரிகளால், 40 சதவீதம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

தரமற்ற சாலைகள்:

சரக்குகளை மிகவும் குறைந்த செலவில் கொண்டு சென்று அதிக லாபம் பார்க்க வேண்டும் என்பதே உரிமையாளர்களின் குறிக்கோளாக உள்ளது. நாடு முழுவதும் பல இடங்களில் மோசமான ரோடுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளதால் வாகனங்களின் தேய்மானம் அதிகரிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள், ஆசிய நெடுஞ்சாலைகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சாலைகள் நாடு முழுவதும் சுமார் 90,000 கி.மீ தூரம் உள்ளது. ஆனால் நாடு முழுவதும் லாரிகள் செல்லக்கூடிய, உண்மையான சாலைகள் இது மட்டுமல்ல. மற்ற சாலைகளின் நிலை திருப்திகரமாக இல்லை. பல மாநில சாலைகள் மோசமாக உள்ளன. இந்த சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்வதற்கு டிரைவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலைகளின் ஒழுங்கற்ற தன்மையை கணக்கில் கொண்டால், நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே தெரிகிறது. மோசமான சாலைகள், மோசமான வானிலை, போக்குவரத்தின் போது ஏற்படும் தாமதங்கள் போன்ற காரணங்களால், சில நேரங்களில் துரதிர்ஷ்டவசமான விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது.

நீண்ட தூர போக்குவரத்தின் போது டிரைவர்கள் ஓய்வெடுக்க பல டிரைவர்களும், உரிமையாளர்களும் விரும்புவதில்லை. மத்திய, மாநில அரசுகளும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாலையோர தாபாக்கள் மட்டுமே லாரி டிரைவர்கள் ஓய்வெடுக்கும் ஒரே இடமாகும். அவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட சரியான வசதி நெடுஞ்சாலைகளில் இல்லை. டிஜிட்டல் புரட்சி நாட்டின் பெரும்பான்மையான மக்களை ஸ்மார்ட் போன் மூலம் இணைத்துள்ளது. இருப்பினும் பெரும்பாலான லாரி டிரைவர்கள் இன்னும் அதற்குத் தயாராகவில்லை. லாரி உரிமையாளர்கள் வருவாயில் மட்டுமே கவனம் செலுத்துவதால், டிரைவர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள்.

டிரைவர்களின் தகுதி:

கடும் நெரிசல், நெடுஞ்சாலையில் ஏற்படும் அதிகாரிகளின், தொல்லைகள் போன்றவற்றை அனுபவித்துக்கொண்டே, நீண்ட நேரம் லாரிகளை ஓட்டும் டிரைவர்களுக்கு மற்ற தொழிலில் உள்ள பணியாளர்களுக்கு இணையான வருவாய் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வாகன வாடகைக்கு ஏற்ற கமிஷனும் (படி), செல்லும் தூரத்திற்கு ஏற்ப சம்பளமும் மட்டுமே வழங்கப்படுகின்றன. டிரைவர்கள் பல பகல் மற்றும் இரவுகளை தங்கள் குடும்பங்களை விட்டு விலகி வெளியூர்களில், ரோட்டிலேயே கழிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் படித்து, தகுதி பெற்றவர்கள் டிரைவர் பணிக்கு வருவதில்லை. எனவே நாடு முழுவதும் டிரைவர்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுவும் போக்குவரத்து தொழிலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் போதும் என்று டிரைவர்களை லாரிகளில் பணிக்கு அமர்த்துகின்றனர். மற்றும் தகுதிகள் குறித்து யாரும் பார்ப்பதில்லை.

கூடுதல் வாகனங்கள்:

நாட்டில் உற்பத்தி பொருட்களின் அளவை விட, சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால், லாரிகளுக்கு லோடு கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால்லாரி டிரைவர்கள் தங்கள் வாகனங்களுக்கு தேவையான சரக்குகளை தேடி அடிக்கடி பல கி.மீ தூரம் காலியாக செல்ல வேண்டியுள்ளது. துரத்திச் சென்று லோடு ஏற்றிச் சென்றாலும், அதை இறக்கும் இடத்தில் பல நாட்கள் காத்திருந்து இறக்க வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற நேரங்களில் வருமானத்திற்கு அதிகமாக அவர்களுக்கு செலவாகிறது. எனவே பலர் இத்தொழிலில் டீசல் திருட்டு, போலீஸ், ஆர்டிஓ மாமூல் போன்றவற்றில் தவறு செய்கின்றனர். அதனால் உரிமையாளர்களுக்கு மேலும் இழப்பு ஏற்படுகிறது.

அதிகாரிகளின் அலைக்கழிப்பு:

மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்தின் போது, லாரி டிரைவர்கள் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால், மாநில சோதனைச் சாவடிகளில் உள்ள அதிகாரிகள் அனைத்து சரக்கு வாகனங்களையும் நிறுத்தி முழுமையான சோதனைகளை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற சமயங்களில் டிரைவர்களை அதிகாரிகள் அலைக்கழிப்பது வழக்கம். சரக்கு போக்குவரத்து தொடர்பாக வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு சட்டங்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க டிரைவர்களால் முடிவதில்லை. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் மாமூல் கேட்டு தொல்லை செய்கின்றனர். இதனாலும் லாரி டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் மோட்டார் வாகனங்கள் குறித்த அனைத்து தகவல்களும், எம்பாரிவாகன் என்ற மத்திய அரசின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்த அதிகாரியும், டிரைவரைக் கேட்காமல் வாகன பதிவு எண்ணை டைப் செய்தாலே அந்த வாகனத்தின் தற்போதைய நிலையை அறியலாம். இருப்பினும் மாமூல் வாங்குவதற்காகவே டிரைவர்களை பெரும் தொல்லைக்கு ஆளாக்குகின்றனர். இதை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை.

நெடுஞ்சாலை கொள்ளையர்கள்:

அதிக மதிப்புள்ள சரக்குகள் நாள்தோறும் லாரிகள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளும் பாதுகாப்பானதாக இல்லை. சில இடங்கள் மிகவும் ஆபத்தான பகுதியாக உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலை கொள்ளையர்கள், ரோட்டில் செல்லும் சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி, மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடிக்கின்றனர். உள்ளூரில் வசிக்கும் சில மாபியா கும்பல் இதற்கு துணை போகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தவிர லாரி உரிமையாளர்களுக்கும் டிவைர்களுக்கும் மிகவும் ஆபத்தானது. இந்த சூழலில் பல இடங்களில் வாகனங்களை திருடிச்செல்வதும், டிரைவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதைப்போன்ற சம்பவங்களும் இத்தொழிலின் வளர்ச்சிக்கு மிகுந்த இடர்பாடாக உள்ளது.

சரக்கு விமானங்கள், ரயில்கள், கப்பல்கள் போன்றவை பொருள் போக்குவரத்திற்கு பயன்பட்டாலும், வாடிக்கையாளர்களின் இடத்திற்கே தேடிச்சென்று பொருட்களை ஏற்றியும் இறக்கியும் சேவை செய்ய லாரி போக்குவரத்தால் மட்டுமே முடியும். எனவே இந்தியாவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பொருள் போக்குவரத்து சாலைகளின் வழியாக மட்டுமே நடைபெறுகிறது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இத்தொழில் வளர்ச்சி பெறவும், தகுதியான டிரைவர்கள் கிடைத்திடவும், லாரித்தொழிலுக்கு தனி வாரியம் அமைத்து தேவையான உதவிகளை செய்து லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் நலிவடையாமல் காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 Oct 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு