/* */

தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு

தமிழகத்தில் நிலவும் கடும் வெப்பத்தால், உடல் அயர்ச்சி ஏற்பட்டு கடந்த 1 மாதத்தில், 8,781 பேர் பாதிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு
X

பைல் படம்

தமிழகத்தில் நிலவும் கடும் வெப்பத்தால், உடல் அயர்ச்சி ஏற்பட்டு கடந்த 1 மாதத்தில், 8,781 பேர் பாதிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை எதிர்கொள்ள முடியாமல், பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். மேலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள, கம்மங்கூழ், இளநீர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரி, கூல்டிரிங்ஸ் உள்ளிட்ட குளிர்பானங்களை மக்கள் அருந்தி வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாதமாக சுட்டெரித்த வெயில், கடந்த 3 நாட்களாக மேலும் அதிகரித்து பகல் நேர வெப்நிலை 106 டிகிரிக்கும் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பலரும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெப்ப அயர்ச்சியால் மயக்கம், தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை அதிகாரி குமரன் கூறியதாவது:

கடந்த சில நாட்களாக, காலை, 11 முதல், மாலை 4 மணி வரை, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக, வீட்டைக் விட்டு வெளியே செல்பவர்கள் மயக்கம் அடைவதும், உடல் சோர்ந்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக எங்களுக்கு மொபைல் போனில் அழைப்பு வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் நோயாளிகளை, எங்கள் ஊழியர்கள் உடனடியாக மீட்டு, ஓ.ஆர்.எஸ். கரைசல் மற்றும் குளுக்கோஸ் போன்றவற்றை வழங்கி முதலுதவி சிகிச்சை அளித்து, ஆஸ்பத்திரியில் சேர்க்கின்றனர்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் காரணமாக, தற்போது வழக்கத்தைவிட 3 மடங்கு ஓ.ஆர்.எஸ்., மற்றும் குளுக்கோஸ் பவுடர்கள் ஆம்புலன்ஸ்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், வெப்ப அலைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, காலை, 11 முதல், மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்பவர்கள், தண்ணீர் பாட்டில்களை அவசியம் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள், வெளியில் செல்லும்போது அதிக வெப்பத்தின் காரணமாக உடல் சோர்வு மற்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்து எளிதில் பாதிக்கப்படலாம். கர்ப்பிணிகள், முதியோர்கள், இந்த நேரத்தில் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீர்ச்சத்து மிகுந்த வெள்ளரி, இளநீர், பழங்கள் போன்றவற்றை உண்ண வேண்டும். கடந்த, மார்ச் மாதத்தில் மட்டும், தமிழகத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக மயக்கம் நிலையில் இருந்த 4,598 பேர், சுயநினைவு இழந்த 4,183 பேரை, 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவை மூலம் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.

Updated On: 19 April 2024 2:00 AM GMT

Related News