/* */

சாய தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நிரந்தரமாக மூடக் கோரி ஆட்சியரிடம் மனு

சாய தொழிற்சாலையால் நிலத்தடிநீர் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால், சாய தொழிற்சாலையை நிரந்தமாக மூடக்கோரி பள்ளிபாளையம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சாய தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு: நிரந்தரமாக மூடக் கோரி ஆட்சியரிடம் மனு
X

பைல் படம்

சாய தொழிற்சாலையால் நிலத்தடிநீர் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால், சாய தொழிற்சாலையை நிரந்தமாக மூடக்கோரி பள்ளிபாளையம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து பள்ளிபாளையம், அக்ரஹாரம் பஞ்சாயத்து, ஆஞ்சநேயர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அக்ரஹாரம் பஞ்சாயத்து, வண்ணாம்பாறை ஆஞ்சநேயர் நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதியில், தனியார் சாயக்கழிவு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றி வருகின்றனர். அதனால், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.

சாயக்கழிவு நீர் குடிநீரிலும் கலந்துள்ளதால், குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்தும்போது, குழந்தைகள் உடல் நல பாதிப்பு, முடி கொட்டுதல், உடல் அரிப்பு, கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர். மேலும், இந்த நீரை குடிநீராக பயன்படுத்தினால், புற்றுநோய் உருவாகுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த சாயக்கழிவு ஆலையால் சுற்றுச் சூழல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் புகார் செய்தோம். அவர்கள் வந்து, குடிநீரை மாதிரி எடுத்துச் சென்றனர். சாயத்தொழிற்சாலையிலும் ஆய்வு செய்தனர். இனி சாய தொழிற்சாலை இயங்காது என தெரிவித்தனர். ஆனால், சாயத் தொழிற்சாலை தொடர்ந்து இயங்கி வருகிறது.

இது தொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பலமுறை புகார் செய்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தனியார் சாய தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 21 Aug 2023 3:45 PM GMT

Related News