/* */

கணிதத்திற்கு வந்த சோதனை! கல்வியாளர்கள் வேதனை...!

நாமக்கல்லில் உள்ள 9 அரசு கல்லூரிகளில் கணித பாடப்பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

கணிதத்திற்கு வந்த சோதனை! கல்வியாளர்கள் வேதனை...!
X

கடந்த மார்ச் மாதம், தமிழ்நாடு சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு இல்லாத, குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப் பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு, தேவையின் அடிப்படையிலான பாடப்பிரிவுகள் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

உயர் கல்வித்துறை அமைச்சரின் இந்த அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் உள்ள 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர்களிடம் வரவேற்பு பெறாத பாட பிரிவுகள் மற்றும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப் பிரிவுகள் குறித்த விவரங்களை உயர்கல்வித்துறைக்கு கல்லூரி நிர்வாகங்கள் அனுப்பியது.

அதில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனூர், திட்டமலை, கூடலூர், கோவில் பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் கணிதம் பாடப்பிரிவுகளும், மொடக்குறிச்சி அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவும், நாகலாபுரத்தில் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடப்பிரிவும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மாற்று பாடப்பிரிவுகள்:

  • சேந்தமங்கலம் கல்லூரியில் கணிதம் பாட பிரிவு நீக்கப்பட்டு இதற்கு பதிலாக கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடப் பிரிவும்,
  • நாகலாபுரம் கல்லூரியில் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடப்பிரிவு நீக்கப்பட்டு, இதற்குப் பதிலாக தமிழ் பாட பிரிவும்,
  • லால்குடி மற்றும் வேப்பந்தட்டை கல்லூரிகளில் கணிதம் பாடப்பிரிவு நீக்கப்பட்டு இதற்கு பதிலாக பயோ டெக்னாலஜி பாட பிரிவும்.
  • கடலாடி மற்றும் மாதனூர் கல்லூரிகளில் கணிதம் பாடப்பிரிவு நீக்கப்பட்டு இதற்கு பதிலாக வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவும்,
  • சத்தியமங்கலம் மற்றும் கூடலூர் கல்லூரிகளில் கணிதம் பாடப்பிரிவு நீக்கப்பட்டு இதற்கு பதிலாக தாவரவியல் பாடப்பிரிவும்,
  • பரமக்குடி அரசு மகளிர் கல்லூரியில் கணிதம் பாடப்பிரிவு நீக்கப்பட்டு இதற்கு பதிலாக பொருளியல் தமிழ் வழி பாடப்பிரிவும்,
  • மொடக்குறிச்சி கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவு நீக்கப்பட்டு இதற்கு பதிலாக விலங்கியல் பாடப்பிரிவும்,
  • திட்டமலை கல்லூரியில் கணிதம் ஆங்கில வழி பாடப்பிரிவு நீக்கப்பட்டு, இதற்கு பதிலாக கணிதம் தமிழ் வழி பாடப்பிரிவும்
  • கோவில்பட்டி கல்லூரியில் கணிதம் தமிழ் வழிபாட பிரிவு நீக்கப்படும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனர் கடந்த ஜூன் 15ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கணிதத்தின் முக்கியத்துவம் :

மொத்தம் 12 அரசு கல்லூரிகளில் நீக்கப்பட்ட பாட பிரிவுகளில் 9 கல்லூரிகளில் கணிதம் பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது இயற்பியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவுகள் தல ஒரு கல்லூரிகளிலும் நீக்கப்பட்டுள்ளது. இதில் கணித பாடப்பிரிவு தான் அதிக அளவு கல்லூரிகளில் நீக்கப்பட்டுள்ளன.

இயற்பியலும் வேதியியலும் இந்தியாவிற்கு நோபல் பரிசுகள் பெற்றுத்தந்த பாடப்பிரிவுகள் ஆகும். ஆனால் கணிதம் நமக்கு ராமானுஜம் என்ற மாமேதையை உருவாக்கி தந்தது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பாடப்பிரிவுகளை எடுத்து படிக்க முந்தைய காலங்களில் மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. பிளஸ் 2 படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே கணிதம் பாடப்பிரிவு வழங்கப்பட்டது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு முக்கிய புள்ளிகளிடம் சிபாரிசுகளை பெற்று கூட இந்த பாடப்பிரிவுகளை எடுத்து படித்து வந்தனர்.

கணிதம் இயற்பியல் பாடங்கள் கல்வியின் ஒரு முக்கியமான உயிர் நாடிகளாக திகழ்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு இந்த பாடப்பிரிவுகள் அடித்தளமாக உள்ளன. எனவே இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கணிதம் மற்றும் இயற்பியல் பாட துறைகள் தற்போது மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் கல்லூரிகளில் இந்த பாடப் பிரிவுகள் நீக்கும் நிலமை தற்போது ஏற்பட்டுள்ளன.

கணிதம் வாழ்க்கையின் ஒரு அங்கம் :

கணிதம் நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் சிறப்பு நம் பயிலும் கல்வியில் மட்டும் அல்லாமல் தொழில் செய்வதற்கும், வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி தொழிலிலும் மிகவும் மேன்மையாக விளங்குகிறது. ஒரு மனிதனுக்கு கணித அறிவு இல்லை என்றால் அவன் அன்றாட வாழ்க்கையில் திட்டமிடப்பட்டபடி நடக்க இயலாது.

ஒரு தனி சாமானியனுடைய கணித அறிவு என்பது மிகவும் முக்கியமானது. கணித அறிவியல் வாழ்க்கை நடத்துவதற்கு மட்டுமல்லாமல் நல்ல ஒரு சிந்தனையை செயல்படுத்துவதற்கும், வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கும் இது மிகவும் முக்கியமானதாக திகழ்கிறது. ஒரு மாணவன் கணிதம் சரியாக பயிலவில்லை என்றால் அவன் சிந்திக்கும் திறன் குறைவாக இருக்கும். கணித அறிவு இல்லாமல் ஒரு மனிதனால் எந்த ஒரு செயலையும் தொழிலையும் திட்டமிட்டபடி நடத்த இயலாது.

அனைத்து துறைகளுக்கும் அடிப்படை கணிதம் :

ஒரு மாணவன் கணிதத்துறை பயிலாமல் மற்ற இயற்பியல், வேதியியல், புள்ளியல் என மற்ற எந்த துறை படித்தாலும் அதில் கணிதம் என்பது ஒரு அடிப்படையான பாடம். கணிதம் இல்லாமல் எந்த பாடப்பிரிவும் இல்லை. எனவே ஒரு மாணவன் கணிதம் படிப்பது மிக முக்கியம். பொறியியல் துறையில் கணிதம் தான் முக்கிய பாடமாக உள்ளது.

கணிதம் படித்த ஒரு மாணவன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், அனிமேஷன் வடிவமைப்பு, கட்டிடக்கலை, விளையாட்டுத் துறை, மக்கள் தொகை புள்ளியியல், வானியல், இசை, ஓவியம், பேஷன் டிசைனிங் ,வேளாண்மை போன்ற துறைகளில் சிறப்பாக வல்லமை படைத்து பணி புரிவார்கள்.

இது மட்டுமில்லாமல் அரசு போட்டி தேர்வுகளுக்கு கணிதத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஒரு கல்லூரியில் இருந்து கணிதம் துறை நீக்கப்பட்டால் மற்ற துறைகளில் கணிதம் பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்கு எப்படி, யார் கணிதம் கற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழும்புகிறது.

சென்னை, கோவை, மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரிகளில் பி.எஸ்சி. கணிதம் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதாக செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் கணிதம் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.

இயற்பியலின் இன்றியமையாமை:

மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் பாட பிரிவு நீக்கப்பட்டு இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இயற்பியல் துறையின் சாதனைகள் மூலம் நம் இந்திய நாட்டின் பொருளாதாரத்திற்கும் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்கும் மிகுந்த பங்களித்திருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இயற்பியல் பாட பிரிவை இக்கல்லூரியிலிருந்து நீக்கி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

உதாரணத்திற்கு நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் பி எஸ் சி இயற்பியல் படித்தவர் தான். அவர் விஞ்ஞானத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் மிகப்பெரிய பங்காற்றி உள்ளார். மேலும் நாம் வருடம் தோறும் கொண்டாடப்படும் தேசிய அறிவியல் தினம் ஒரு இயற்பியல் விஞ்ஞானியின் சாதனையை நினைவு கூரவே தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடுகிறோம்.

அப்படிப்பட்ட பெருமைக்குரிய சாதனை நிகழ்த்தப்பட்ட நாள் தான் பிப்ரவரி 28 , சர் சி வி ராமன் ராமன் விளைவை கண்டுபிடித்தார். இது இன்று வரை உலகின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரும் பங்களித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் நிறுவனர் டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களும் இயற்பியல் படித்தவர் தான். இந்திய விண்வெளி ஆய்வு மையம் பல சாதனைகளை படைத்துள்ளது இதற்கு இயற்பியலின் பெரும் பங்கு உள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் போன்றவற்றிற்கு இயற்பியல் மிகுந்த பங்கு வகிக்கிறது. மேலும் பல இந்திய இயற்பியல் விஞ்ஞானிகள் பல சாதனைகளை நாட்டிற்காக அர்ப்பணித்து உள்ளனர். உதாரணத்திற்கு ஹோமி பாபா இந்திய அணு அறிவியலின் தந்தை என்று பெருமைப்படுகிறோம் அவரும் இயற்பியல் படித்தவர் தான்.

அணு அறிவியலின் தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்திற்கு மிகுந்த பங்களிப்பை செலுத்துகிறது. மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற பல விஞ்ஞானிகள் இயற்பியலின் வழி வந்தவர்களே உதாரணத்திற்கு டாக்டர் சத்தியந்திரநாத் போஸ், சுப்ரமணியம் சந்திரசேகர், ஜெகதீஸ் சந்திரபோஸ் மற்றும் மேகநாத் ஷா போன்றவர்கள் நாட்டின் விஞ்ஞான வளர்ச்சிக்காக தங்களின் இயற்பியல் கண்டுபிடிப்பு மூலம் பெரும் பங்கை வகித்துள்ளனர்.

சர்வதேச அளவில் இயற்பியலின் சிறப்பு :

நம் இந்திய நாட்டை தவிர்த்து உலகம் முழுவதும் பல இயற்பியலாளர்கள் உலகின் தலைசிறந்த இயற்பியல் கண்டுபிடிப்புகளை அர்ப்பணித்துள்ளனர். உதாரணத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நியூட்டன், மேரி கியூரி, பெரி க்யூரி, ரிச்சர்ட் பைன்மேன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற பல இயற்பியல் விஞ்ஞானிகள் உலகின் வளர்ச்சிக்காக தங்களின் இயற்பியல் கண்டுபிடிப்புகள் மூலம் பெரும் பங்கு வகித்தனர்.

மேலும் நாம் தற்போது பெருமையாக பேசப்படும் உலகின் முதல் பணக்காரர் எலான் மஸ்க் அவர்களும் இயற்பியல் படித்தவர் தான்.இப்படிப்பட்ட உலகின் போற்றுதலுக்கும் பெருமைக்கும் உரிய இயற்பியல் துறையை கல்லூரியில் இருந்து நீக்கி இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதனால் மாணவர்கள் மட்டும் பாதிப்படைய மாட்டார்கள் நாட்டின் வளர்ச்சியும், நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியும் பாதிப்படையும். இதை நீக்கினால் ஏறத்தாழ 15 வருடம் கழித்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி முடங்கும் அபாயம் ஏற்படும்.

மாணவர்களுக்கு வழிகாட்டுதல் அவசியம் :

எனவே உயர் கல்வித் துறை இதில் முழு கவனம் செலுத்தி அரசு கல்லூரிகளில் இருக்கும் பாட பிரிவுகள் குறித்து +2 முடிக்கும் மாணவர்களிடம் எடுத்துக் கூறி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

ஒரு கல்லூரியில் ஒரு புதிய பாடப்பிரிவு கொண்டு வருதல் மகிழ்ச்சி, ஆனால் ஒரு பாடப்பிரிவினை நீக்கி அதற்கு பதிலாக மற்றொரு பாடப்பிரிவினை கொண்டு வருவது எந்த வகையில் நியாயமாக இருக்கும். சில ஆண்டுகள் ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவை மாணவர்கள் தேர்வு செய்வார்கள். அடுத்த அடுத்த சில ஆண்டுகளில் வேறு பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்வார்கள்,

எனவே அனைத்து பாட பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கையை உயர்கல்வித்துறை உறுதிப்படுத்த வேண்டும், அதேபோல் மாணவர்கள் எந்த துறை படித்தாலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

முதல்வருக்கு வேண்டுகோள் :

எனவே தமிழ்நாடு அரசு இதில் முழு கவனம் செலுத்தி மாணவர்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி நீக்கப்பட்ட கல்லூரிகளில் மீண்டும் அந்தந்த துறைகளை கொண்டு வர வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெரும்பான்மை பொதுமக்களின் கருத்தாக உள்ளது. இதை செயல்படுத்த தமிழக முதல்வரும், உயர்கல்வி அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 4 July 2023 7:28 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  2. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  5. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு