/* */

குமாரபாளையத்தில் மின் மாற்றியை இடமாற்றம் செய்ய மக்கள் நீதி மய்யத்தினர் மனு

குமாரபாளையத்தில் மின் மாற்றியை இடமாற்றம் செய்ய மக்கள் நீதி மய்யம் சார்பில் மின்வாரியத்தில் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மின் மாற்றியை இடமாற்றம் செய்ய மக்கள் நீதி மய்யத்தினர் மனு
X

குமாரபாளையத்தில் மின் மாற்றியை இடமாற்றம் செய்ய மக்கள் நீதி மய்யம் சார்பில் குமாரபாளையம் மின்வாரிய உதவி இயக்குனர் வல்லப்பதாஸ் வசம் மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மின் மாற்றியை இடமாற்றம் செய்ய மக்கள் நீதி மய்யம் சார்பில், மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் மின்வாரியத்தில் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், சேலம் சாலை மதீனா ஸ்டோர் அருகே உள்ள மின் மாற்றி சாலையின் நடுவில் அமைந்துள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதே போல் ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் உள்ள மின்மாற்றியும் இடையூறாக உள்ளது. இந்த இரு மின் மாற்றியையும் மாற்றி அமைக்க வேண்டும். கத்தேரி பிரிவு முதல் நகராட்சி வரை மின் கம்பங்களை சாலையோரம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு குமாரபாளையம் மின்வாரிய உதவி இயக்குனர் வல்லப்பதாஸ், பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டது. மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா, மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் நடுரோட்டில் உள்ள மின் மாற்றியை, சாலையோரம் அமைக்க பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம் சேலம் சாலை பவர் ஹவுஸ் எதிரில் சாலை நடுவில் மின்மாற்றி உள்ளது. இது வாகன போக்குவரத்திற்கு பெரும் இடையூராக உள்ளது. இதனை சாலை ஓரமாக மாற்றி அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

குமாரபாளையம் விசைத்தறி தொழில் மிகுந்த நகரம். பெரும்பாலான விசைத்தறி தொழிலாளர்கள் விசைத்தறி பாவு பீமை டி.வி.எஸ். வாகனத்தில் வைத்து தான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று வருகிறார்கள். இந்த பீம் சுமார் 7 அடி முதல் 8 அடி வரை இருக்கும். குமாரபாளையம் சேலம் சாலையில் நடுவில் டிவைடர் வைக்கப்பட்டதால் மிகவும் குறுகி, சாலையே 10 அடிதான் உள்ளது. இதில் பாவு பீம் ஏற்றிக்கொண்டு தொழிலாளி டி.வி.எஸ்.ல் கொண்டு செல்லும் போது, பஸ், லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் வந்தால், டி.வி.எஸ். வாகனம் ஒதுங்க கூட முடியாது.

மேலும் மின்மாற்றி, மின் கம்பங்கள் சாலையின் நடுவில் உள்ளதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பலருக்கு கால விரயம், கன ரக வாகனங்கள் பின்பு அனைத்து வாகனங்களும் மெதுவாக வரும் நிலை வருவதால் அதிக பொருட்செலவும் ஏற்பட்டு வருகிறது. பவானி திருவிழா, கூடுதுறை விஷேக காலங்களில் பவானியில் இருந்து ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் யாவும், குமாரபாளையம் பக்கமாகத்தான் திருப்பி விடுகிறார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, சாலையின் நடுவில் இருக்கும் மின்மாற்றி, மின் கம்பங்களை சாலையோரமாக மாற்றியமைக்க வேண்டும்.

இடைப்பாடி, தேவூர், கத்தேரி பகுதியில் இருந்து அதிக கரும்பு லோடு லாரிகள் குமாரபாளையம் சேலம் சாலை வழியாக செல்வது வழக்கம். அப்போது டிவைடரில் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள், சாலையோரம் உள்ள மின் கம்பங்கள் இடையே 10 முதல் 12 அடி வரைதான் இருக்கும். இந்த இடைவெளியில் கரும்பு லோடு லாரிகள் செல்வது மிகவும் சிரமம். மேலும் ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல் பேல்கள் ஏற்றி வரும் லாரிகள், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் கொண்டு செல்லும் லாரிகள் என அதிக அளவில் சென்று வர, இந்த சாலை போதுமானதாக இலலாமல் உள்ளது.

கத்தேரி பிரிவு முதல் சேலம் சாலை சவுண்டம்மன் கோயில் வரை இரு புறமும் வடிகால் அமைத்து, பேவர் கற்களால் தரை தளம் அமைக்கப்பட்டுள்ளது. பேவர் கற்களால் நடைபாதை அமைக்கப்பட்டதால், சாலையோரம் இருந்த மின் கம்பங்கள், மின் மாற்றிகள் தற்போது சாலை நடுவில் இருக்கும் வகையில் உள்ளது. மின் கம்பங்களை சாலையோரம் அமைத்து விட்டு வடிகால் மற்றும் நடைபாதை பணிகள் செய்திருக்க வேண்டும்.

வாகனத்தின் அகலம், அருகே செல்லும் வாகனத்தின் அகலம், பார்த்து அதையடுத்து மின் கம்பம் தள்ளி போட்டு இருக்க வேண்டும். பழையபடி அதே இடத்தில் மின் கம்பம் இருந்தால், எதுக்காக சாலை அகலப்படுத்த வேண்டும். அப்படி அகலபடுத்தி என்ன பயன்? மின் கம்பங்கள், மின் மாற்றிகள் ஓரமாக போட்டால்தான், வாகன போக்குவத்து எளிதாக அமையும். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் லோடு ஏற்றிக்கொண்டு பெரிய வாகனங்கள் வந்தாலும், ஆறுவடை சமயம் ஆதலால் , அறுவடை இயந்திர வாகனங்கள் வந்தாலும் சாலை முழுதும் அடைத்துக்கொண்டு செல்கிறது.

டூவீலர் கூட போக முடியாது. இதில் சாலையோர கடைகள் வேறு நிறைய உள்ளது. வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் விதத்தில் அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும். இப்படி பாதிப்பு ஏற்படும் வகையில் செய்ய அரசு நிர்வாகம் எதற்கு? பொதுமக்கள் அச்சம் போக்க, விபத்துக்கள் இனி நடக்காமல் இருக்க, மின்மாற்றி, மின் கம்பங்கள்; சாலை ஓரமாக அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், உயர் அதிகாரிகளின் ஆலோசனை, அனுமதி பெற்றுதான் இதனை செய்ய முடியும். அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என தெரிவித்தனர்.

Updated On: 9 Feb 2023 1:04 PM GMT

Related News