/* */

நாடாளுமன்றத் தேர்தல் 2024: யாருக்கு வசமாகும் 'ஸ்டார் தொகுதி' ஈரோடு?

Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாதக என நான்கு முனை போட்டி நிலவும் நிலையில், வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாகப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

நாடாளுமன்றத் தேர்தல் 2024: யாருக்கு வசமாகும் ஸ்டார் தொகுதி ஈரோடு?
X

Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வரைபடம்.

Erode news, Erode news today- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாதக என நான்கு முனை போட்டி நிலவும் நிலையில், வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாகப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி :-

தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தொகுதிகளின் வரிசையில் 17வது இடத்தில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உள்ளது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் ஈரோடு, கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம் (தனி), காங்கேயம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ளன. குமாரபாளையம் தொகுதி நாமக்கல் மாவட்டத்திலும், தாராபுரம், காங்கேயம் தொகுதி திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளன.

மேலும் தொகுதியில் ஈரோடு மாநகராட்சி, பள்ளிபாளையம், குமாரபாளையம், தாராபுரம், காங்கேயம், வெள்ளக்கோவில் என 5 நகராட்சிகள், 24 பேரூராட்சிகள், 149 கிராம ஊராட்சி பகுதிகள் உள்ளன. இதில், ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வசமும், குமாரபாளையம் அதிமுக வசமும், மொடக்குறிச்சி பாஜக வசமும், மற்ற 3 தொகுதிகளும் திமுக வசமும் உள்ளன.

வெற்றி விவரம்:-

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலான 2009ல் வெற்றி பெற்று ஈரோடு தொகுதியின் முதல் எம்பி என்ற பெருமையை அ.கணேசமூர்த்தி பெற்றார். அப்போது அவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் அதிமுக சார்பில் செல்வகுமார சின்னையன் வெற்றி பெற்றார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அ.கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். மொத்தம் 3 முறை தேர்தல் கண்டுள்ள ஈரோடு தொகுதி தற்போது 4வது முறையாக தேர்தலை சந்திக்கிறது.

கடந்த தேர்தலில் வெற்றி:-

2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.கணேசமூர்த்தி (ம.தி.மு.க.) 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அ.கணேசமூர்த்தி (ம.தி.மு.க.) - 5,63,591 வாக்குகளும், மணிமாறன் (அ.தி.மு.க.) 3,52,973 வாக்குகளும், சரவணக்குமார் (ம.நீ.ம.) - 47,719 வாக்குகளும், மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழர்) - 39,010 வாக்குகளும், செந்தில்குமார் (அ.ம.மு.க.) - 25,858 வாக்குகளும் பெற்றனர்.

வாக்காளர்கள் எண்ணிக்கை:-

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் 15 லட்சத்து 28 ஆயிரத்து 242 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 7 லட்சத்து 40 ஆயிரத்து 298 பேர், பெண்கள் 7 லட்சத்து 77 ஆயிரத்து 63 பேர், 3ம் பாலினத்தவர்கள் 181 பேர் உள்ளனர்.

சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை:-

ஈரோடு கிழக்கு - 2,30,470

ஈரோடு மேற்கு - 2,95,773

மொடக்குறிச்சி - 2,27,966

குமாரபாளையம் - 2,55,717

தாராபுரம் -2,58,819

காங்கயம் - 2,59,681

3 அமைச்சர்கள் உள்ள ஸ்டார் தொகுதி:-

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் செல்வாக்கு மிக்க தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்எல்ஏவாக உள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 3வது முறை சு.முத்துசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏற்கனவே அமைச்சராக இருந்த அவர் மீண்டும் அமைச்சராக உள்ளார். தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது அமைச்சராக உள்ளார். காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மு.பெ.சாமிநாதன் வெற்றி பெற்றார். ஏற்கனவே அமைச்சராக இருந்த அவர் மீண்டும் அமைச்சராக உள்ளார்.

இவ்வாறு ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தற்போது 3 அமைச்சர்கள், 1 முன்னாள் அமைச்சர், ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் ஆகியோரைக் கொண்ட நட்சத்திர தொகுதியாக ஈரோடு தொகுதி இருக்கிறது.

நீண்ட கால கோரிக்கை:-

சாயக்கழிவுகள் பிரச்சினை, காவிரி மாசு பிரச்சினை, கீழ்பவானி வாய்க்கால் பாசன பிரச்சினை, செங்காந்தள் மலர் விலை பிரச்சினை, முருங்கை விளைச்சலுக்கான விலை கிடைக்காத பிரச்சினை உள்ளிட்டவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. ஈரோடு -பழனி ரயில் பாதை திட்டம், ரயில்வே நுழைவு பாதைகளால் ஏற்படும் போக்குவரத்து பிரச்சினை உள்ளிட்டவையும் தீர்க்க முடியாத பிரச்சினைகளாக உள்ளன.

மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, கரும்பு, நெல் என்று விவசாய விளைப்பொருட்களுக்கு உரிய விலை இல்லாதது ஆகியவை தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளாக விவசாயிகளால் எதிர்பார்க்கப்படுகிறது. தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன.


31 வேட்பாளர்கள் போட்டி:-

இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தமாகா, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் வேட்பாளர்களுடன் சுயேச்சைகள் உள்ளிட்ட 31 பேர் களத்தில் உள்ளனர்.

திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்:-

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கட்சியின் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். தேர்தல் களத்துக்கு புதியவர். இவர், நீண்ட காலம் கட்சிப் பணியாற்றி வருபவர் என்பதால் தொகுதி முழுவதும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நெருக்கமானவர்.

அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார்:-

அதிமுக சார்பில் போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார் தேர்தல் களத்துக்கு புதியவர் எனினும், இவரது தாயார் ஏற்கனவே எம்பியாக இருந்தவர். ஆற்றல் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும், மலிவு விலை உணவகம், மருத்துவ சிகிச்சை, அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், கோவில்கள் கட்டித் தருதல் என பல்வேறு சேவைகளை கடந்த 3 ஆண்டுகளாக ஆற்றல் அசோக்குமார் செய்து வருகிறார். இதன் மூலம் தொகுதியில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த முகமாக உள்ளார்.

பாஜக கூட்டணி தமாகா வேட்பாளர் பி.விஜயகுமார்:-

பா.ஜனதா கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பி.விஜயகுமார் போட்டியிடுகிறார். 1996ம் ஆண்டு முதல் முதல் தமிழ் மாநில காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தற்போதைய ஈரோடு மத்திய மாவட்ட தலைவராக உள்ளார். பா.ஜனதா ஆதரவுடன் தேர்தல் களத்தை சந்திக்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன்:-

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த மருத்துவரான மு.கார்மேகன், ஈரோடு மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் களத்துக்கு புதியவர்.

நான்கு முனைப் போட்டி:-

ஈரோடு தொகுதியைப் பொறுத்தவரையில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் வெற்றி யார் கையில் என்பது, தொகுதி மக்களின் கை விரலில் தான் உள்ளது.

Updated On: 15 April 2024 4:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!