/* */

21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்

21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்
X

லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்குமான தொகுதிகள் பங்கீடு சுமூகமாக நடைபெற்று முடிவடைந்தது. இதனையடுத்து திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் உறுதியாகி உள்ளன. இந்த 21 தொகுதிகளில் 11 சிட்டிங் எம்.பிக்கள் மீண்டும் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பளிக்கக் கூடும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் திமுக கூட்டணியில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வடசென்னை, மத்திய சென்னை,தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், வேலூர் , அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஆரணி, தேனி, சேலம், தருமபுரி,கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு , பெரம்பலூர், தஞ்சை , தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் களமிறங்குகிறது திமுக.

இந்த 21 தொகுதிகளில் 11 சிட்டிங் எம்.பிக்களே மீண்டும் திமுகவின் வேட்பாளர்களாக களமிறக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. திமுகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள சிட்டிங் எம்.பிக்கள் விவரம்:

தூத்துக்குடி- கனிமொழி: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மகள்; தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி. 2007-ல் ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றம் சென்றார். 2013-ல் மீண்டும் ராஜ்யசபா எம்பியானார். ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வென்றார். தற்போது திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக பதவி வகிக்கிறார். 2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்று தம்மை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய தெலுங்கானா- புதுவை ஆளுநரான பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜனை தோற்கடித்தார். வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி: திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் டாக்டர் படிப்பு படித்த கலாநிதி, திமுக மருத்துவ அணியில் பணியாற்றினார். 2019 லோக்சபா தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு 5,90,986 (61.85%) வாக்குகள் பெற்று வென்றார்.

தென் சென்னை- தமிழச்சி தங்க பாண்டியன்: விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள். தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி. 2019 லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு 5,64,872 (50.17%) வாக்குகளைப் பெற்று வென்றவர்.

மத்திய சென்னை - தயாநிதி மாறன்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும் முதுபெரும் திராவிடர் இயக்க தலைவருமான முரசொலி மாறனின் இளைய மகன் தயாநிதி மாறன். 2004, 2009, 2019 லோக்சபா தேர்தல்களில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்பியாக வென்றவர். 2019 லோக்சபா தேர்தலில் மத்திய சென்னையில் 4,48,911 (57.15%) வாக்குகள் பெற்று வென்றார். முந்தைய 2014 தேர்தலில் 2,87,455 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவி இருந்தார் தயாநிதி மாறன்.

ஶ்ரீபெரும்புதூர்- டி ஆர்பாலு: திமுகவின் தற்போதைய மூத்த தலைவர்களில் ஒருவர் டிஆர் பாலு. திமுகவின் லோக்சபா குழு தலைவர். திமுக பொருளாளர். 1986-ல் ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்துக்கு சென்றவர். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். தென் சென்னை லோக்சபா தொகுதியில் 1996 முதல் 2004-ம் ஆண்டு வரை 4 முறை தொடர்ந்து வென்று எம்பியானவர் டிஆர் பாலு. 2009, 2019 லோக்சபா தேர்தல்களில் ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2019-ல் ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் 7,93,281 வாக்குகள் பெற்று அசத்தல் வெற்றியைப் பெற்றவர் டிஆர் பாலு.

அரக்கோணம் ஜெகத்ரட்சகன்: எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவின் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். 1984-ல் அதிமுக எம்பியாக நாடாளுமன்றம் சென்றவர். 1985-89-ல் அதிமுக லோக்சபா குழு தலைவராக இருந்தவர். 1999, 2009, 2019 லோக்சபா தேர்தல்களில் அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார்.

வேலூர்- கதிர் ஆனந்த்: திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன். முதல் முறையாக 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்பியானார். அத்தேர்தலில் 4,85,340 வாக்குகள் பெற்று வென்றவர் கதிர் ஆனந்த்.

தருமபுரி டாக்டர் செந்தில்குமார்: தமிழகத்தின் மறைந்த முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான டி. என். வடிவேலுவின் பேரன் டாக்டர் செந்தில்குமார். 2019 லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வென்றார். 2019-ல் தருமபுரி தொகுதியில் 5,74,988 வாக்குகள் வென்று வெற்றி பெற்றார் டாக்டர் செந்தில்குமார்.

கள்ளக்குறிச்சி- கவுதம சிகாமணி: திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி. 2019 லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு 7,21,713 வாக்குகள் வென்று அமோக வெற்றி பெற்றவர் கவுதம சிகாமணி. நீலகிரி- ஆ.ராசா: திமுகவின் துணைப் பொதுச்செயலாளர். திராவிடர் இயக்க கொள்கைகளை உரக்க பேசும் பிரசார பீரங்கி. முன்னாள் மத்திய அமைச்சர். 1996-ல் பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் 1998-ல் பெரம்பலூர் தொகுதியில் தோல்வியை தழுவிய ஆ.ராசா, 1999, 2004, 2009 தேர்தல்களில் தொடர்ந்து அதே தொகுதியில் வென்றார், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். 2009, 2019-ல் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2014-ல் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா தோல்வியைத் தழுவினார். 2019 லோக்சபா தேர்தலில் 3,16,802 வாக்குகள் பெற்று வென்றார்.

தஞ்சாவூர் பழனிமாணிக்கம்: திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். லோக்சபா தேர்தல்களில் 6 முறை வென்று எம்பியானவர். மத்திய நிதித்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2019 தேர்தலில் தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் 5,88,978 வாக்குகள் பெற்று வென்றவர் பழனிமாணிக்கம்.

Updated On: 18 March 2024 9:57 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  2. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  3. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  4. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  5. திருப்பரங்குன்றம்
    கோயில்களில், இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா!
  6. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  7. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  8. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்