உங்களுக்கு இரண்டுமே பெண் குழந்தையா? அப்போ உங்களுக்கான செய்தி தான் இது
சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் வைப்பு தொகை செலுத்தப்படும்.
HIGHLIGHTS

பைல் படம்.
குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல், பெண் சிசு வதையை ஒழித்தல், ஏழை குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல், பெண் குழந்தையின் மதிப்பை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை உள்ளடக்கி தமிழக அரசு சார்பில் சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயனடைய தேவையான தகுதிகள்:
திட்டம் 1:
குடும்பத்தில் ஒரேயொரு பெண் குழந்தை எனில், ரூ.50 ஆயிரத்திற்கான காலவரை வைப்புத்தொகை குழந்தையின் பெயரில் வழங்கப்படும்.
திட்டம் 2:
குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிலை வைப்புத்தொகை வழங்கப்படும். (தமிழக அரசு அண்மையில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட தொகை). மேலும், இத்திட்டத்தில் சேரும் குழந்தைக்கு ஆண்டு தோறும் கிடைக்கும் வட்டியை, வைப்புத்தொகை வழங்கப்பட்ட ஆறாம் ஆண்டில் இருந்து இருபதாம் ஆண்டு வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
1. ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
2. ஆண் குழந்தை இருத்தல் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது.
3. பெற்றோர்களில் ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
4. ஒரு பெண் குழந்தை எனில் (திட்டம்-1) ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாகவும், இரண்டு பெண் குழந்தைகள் எனில் (திட்டம்-2) ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு குறைவாகவும் இருத்தல் வேண்டும்.
5. பயனடையும் குழந்தை 3 வயது நிறைவடைவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவைப்படும் சான்றிதழ்கள்:
1. குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள்.
2. வருமானச்சான்று.
3. இருப்பிடச்சான்று.
4. கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்று.
5. சாதிச்சான்று.
6. பெற்றோரின் வயதுச்சான்று.
7. ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று.
8. குடும்ப அட்டையின் நகல்.
9. குடும்ப புகைப்படம்.
வழங்கப்படுவதற்கான கால அளவு:
நிலை வைப்புத் தொகையின் 20-ம் ஆண்டின் முடிவில் மீதமுள்ள வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை வழங்கப்படும்.
அணுக வேண்டிய அலுவலர்கள்:
1. மாவட்ட சமூகநல அலுவலர்
2. மாவட்ட திட்ட அலுவலர்கள் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்).
3. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், விரிவாக்க அலுவலர்கள் (சமூக நலம்), ஊர்நல அலுவலர்கள்.
4. இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட சமூக நல அலுவலகம், பி.டீ.ஓ. அலுவலகங்களில் கிடைக்கும்.
நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை இதே அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.
ஆதாரம் : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு அரசு.