/* */

தர்மபுரி அருகே கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து 2 பக்தர்கள் பலி: பாதுகாப்பு பணியில் தொடர் அலட்சியம்..!

பாதுகாப்பு பணியில் தொடர் அலட்சியம் காரணமாக தர்மபுரி அருகே கோவில் திரு விழாவில் தேர் கவிழ்ந்து பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து 2 பக்தர்கள் பலி: பாதுகாப்பு பணியில் தொடர் அலட்சியம்..!
X

தர்மபுரியில் கோவில் திருவிழாவில், திருவீதியுலா வந்த நிலையில் அச்சாணி முறிந்து தேர் சரியும் காட்சி.

தமிழகத்தில் தொடர்ந்து கோவில் திருவிழாக்களில் விபத்துகள், உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருவது பக்தர்களை வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது. குறிப்பாக, தேரில் மின்சாரம் பாய்வது, தேர் கவிழ்வது என பக்தர்கள் உயிரிழப்பு தொடர்கதையாகி விட்டதோ என நெஞ்சை பிளக்கும் கேள்வியும் எழுகிறது.

கோவில் திருவிழா என்றால் காவல்துறையில் முன் அனுமதி பெறப்படுவது வழக்கம். சம்பந்தப்பட்ட பகுதி காவல் அதிகாரிகள் பாதுகாப்பு விவகாரத்தில் முன்கூட்டியே கவனம் செலுத்தி இருந்தால் தஞ்சை அருகே சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து அண்மையில் நிகழ்ந்த பக்தர்கள் மரணத்தை தடுத்து இருக்கலாம்.

இதேபோல, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் புதிய விதிமுறைகளை வகுத்து தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் சிறு கோவில் திருவிழாக்களையும், தேரின் அமைப்பு, வலுவையும், பாதுகாப்பையும் உடனிருந்து கண்காணிப்பது அவசியம் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்!

தர்மபுரியில் இன்று நிகழ்ந்த மற்றொரு தேர் விபத்து துயரச் சம்பவ விவரம்:

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நாளான இன்று தேர் திருவீதியுலா நடத்தப்பட்டது.

அப்போது, வயல்வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும் போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் சாய்ந்தது. தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருந்ததால் தோ் விழுந்ததில் 5 பேர் சிக்கிக் கொண்டனர் இதில் மனோகரன், சரவணன் ஆகிய இருவா் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

மேலும் மூவருக்கு காயம் ஏற்பட்டு தர்மபுாி அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த மக்கள் தேரை அப்புறப்படுத்தி, காயம்பட்டவா்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவல்துறையினரும், விழா குழுவினரும் அனுப்பி வைத்தனர்.

இதுபோன்ற திருவிழாக்களில் இனி உயிரிழப்பு ஏற்படாதவாறு, இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்று துறை அதிகார்கள் இணைந்து கடுமையாக விதிகளை அமல்படுத்தி, கண்காணிப்பை பலப்படுத்துவதே இதற்கு நிரந்தர தீர்வை தரும்.

தமிழகத்தில் சீர்மிக்க ஆட்சியை திறம்பட மக்களுக்கு அளிக்க முனைப்புடன் நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசும், முதலமைச்சரும் உரிய நடவடிக்கையை முனைப்புடன் எடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்கள் எதிர்பார்ப்பு...!

Updated On: 17 Jun 2022 4:44 AM GMT

Related News