/* */

காய் கனிகளுடன் கண்கவர் காட்சியளித்த அண்ணாமலையார் கோவில் நந்தி

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சியளித்தார்.

HIGHLIGHTS

காய் கனிகளுடன் கண்கவர் காட்சியளித்த அண்ணாமலையார் கோவில் நந்தி
X

காய், கனி, இனிப்பு உள்ளிட்டவைகளுடன் கண்கவர் காட்சியளித்த அண்ணாமலையார் கோவில் நந்தி பகவான்

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி அளித்தார்.

இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. திருக்கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், காய்கறி மற்றும் பழ வகைகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி திட்டு வாசற்படியில் சூரியனுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு அண்ணாமலையாரையும் சூரிய பகவானையும் ஒருசேர தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவிலின் கருவறை முதல் 1000 கால் மண்டபம் வரை உள்ள 5 நந்தி பகவானுக்கு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் காட்சி கொடுத்தனர். இதேபோல் இன்று ஒரு நாள் மட்டுமே முப்பது முக்கோடி தேவர்களுக்கும் அண்ணாமலையார் காட்சி தருவார் என்பது ஐதீகம்.

இதற்கு ஒரு வரலாற்று கதையும் கூறுகிறார்கள்; கைலாயத்தில் ஒருநாள்..! சிவபெருமான் நந்தீசுவரரை அழைத்து அவரிடம் ஒரு கட்டளை பிறப்பித்தார்.

‘‘பூலோகம் சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம் மாதம் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து, ஒரு நாள் மட்டும் உணவு சாப்பிடச் சொல்லுங்கள்’’ என்று கட்டளையிட்டார்.

நந்தீசுவரரும் ‘ஆமாம்’ என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு பூலோகம் சென்றார். வரும் வழியிலேயே சிவபெருமானின் கட்டளையில் ஒரு பாதி நந்தீசுவரருக்கு மறந்து விடுகிறது. அவர் மக்களிடம் சென்று, ‘‘மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளியுங்கள், மாதம் முழுவதும் உணவு உண்ணுங்கள். இது சிவபெருமானின் கட்டளை’’ என்று மாற்றிக் கூறிவிட்டார். இதனால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பசியால் வாடுவதற்கு நந்தீசுவரர்தான் காரணம் என்று சிவபெருமான் சினங்கொண்டார். உடனே ‘‘நீ காளையாக மாறி பூலோகத்துக்கு செல்வாயாக, மக்களுக்காக நீ கடுமையாக உழைப்பாயாக..’’ என்று நந்தீசுவரருக்கு சாபம் கொடுத்தார்.

‘‘நான் செய்த தவறுக்காக இந்த தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். மக்களுக்காக உழைத்து ஓடாய் தேய்வேன். ஆனால் எனது உழைப்பை மக்கள் எண்ணிப்பார்த்து ஒரு நாள் விழாவாக கொண்டாட வேண்டும். அதற்கு அருள் புரியுங்கள்’’ என்று சிவபெருமானிடம், நந்தீசுவரர் வேண்டினார்.

அதற்கு சிவபெருமான், ஆண்டுதோறும் தை மாதம் மக்கள் ‘மாட்டுப் பொங்கல்’ கொண்டாடி உனது உழைப்பை போற்றுவார்கள் என்று கூறினார். அன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது உனக்கு நான் காட்சி தருவேன் என கூறினாராம், பின்னர் நந்தீசுவரர் பூலோகத்துக்கு காளை வடிவத்தில் வந்து, விவசாயத்துக்கும், உழவர்களுக்கும் களைப்பில்லாமல் உழைத்து வருகிறார். அத்தகைய சிறப்பு வாய்ந்த நந்திக்காக மாட்டுப் பொங்கல் அன்று அதிகாலையில் காட்சி தருகிறார் என்றும் கூறுகிறார்கள்.

Updated On: 16 Jan 2024 2:14 AM GMT

Related News