/* */

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
X

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லிப்ட் பழுது தொடர்பாகவும் மற்றும் கழிவுநீர் வடிகால் பிரச்சனை தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். மேலும், தாய்மார்கள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்டேன்.

உடன்குடி பேரூராட்சியில் பணியாற்றி வந்த தூய்மைப்பணியாளர் சுடலைமாடன் என்பவரை முன்னாள் பேரூராட்சி தலைவர் அவர்கள் திட்டியதால் அவர் விஷம் அருந்தியுள்ளார். உடனடியாக திருச்செந்தூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினேன். தூய்மைப்பணியாளர் சுடலைமாடனின் மனைவி மற்றும் மகளை சந்தித்து பேசி ஆறுதல் தெரிவித்தேன்.

இதுதொடர்பாக உடன்குடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி மீது வழக்குப்பதிவு செய்து தேடப்பட்டு வருகிறார். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவில்பட்டி - கயத்தாறு பகுதியில் எலுமிச்சை தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளியின் இரண்டு குழந்தைகள் லோடு ஆட்டோ மோதிய விபத்தில் சிக்கியதால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் ஒரு குழந்தை நன்றாக உள்ளது. மற்றொரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களையும் பார்வையிட்டேன். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையான உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்தேன் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Updated On: 21 March 2023 5:31 PM GMT

Related News