/* */

தஞ்சையில் மழை காட்டிய வேகம்: நாற்று மூழ்கியதால் விவசாயிகள் சோகம்

தொடர் மழையால், தஞ்சை மாவட்டத்தில் நாற்று நட்டு 15 நாட்களே ஆன சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி உள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

தஞ்சையில் மழை காட்டிய வேகம்:  நாற்று மூழ்கியதால் விவசாயிகள் சோகம்
X

பாபநாசம் பகுதியில், மழை நீரில் மூழ்கியுள்ள நாற்றுகள்.

இந்தாண்டு டெல்டா மாவட்டங்களில் சம்பா-தாளடிக்கு 13.5 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 50 சதவீத நடவுப்பணிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த காலங்களில் சம்பா, தாளடிக்கு போதுமான தண்ணீர் இல்லாததால், மின்மோட்டாரை கொண்டு நடவு பணியை செய்தனர்.

ஆனால் தற்போது, ஆறுகளில் தண்ணீர் வருவதால், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான விவசாயிகள், வாய்க்கால் தண்ணீரை கொண்டும், மின்மோட்டார் தண்ணீரை கொண்டு சம்பா தாளடி நடவுப்பணியை தொடங்கியுள்ளனர். சம்பா-தாளடி நடவுப்பணிக்காக கடந்த மாதம் வயலை உழுது, சமம்படுத்தி, விதை தெளித்தனர். பின்னர் 30 நாட்களுக்கு பிறகு, நாற்றுக்களை பறித்து, வயலில் நடவு செய்யும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மெலட்டூர் பகுதியில், மழை நீரில் மூழ்கிய நாற்றுகள்.

இந்நிலையில் மாவட்டத்தில், தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் நாற்று நடவு செய்யப்பட்டு 15 நாட்களே ஆன சம்பா தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அன்னப்பன்பேட்டை, நரியனுார், கோணியக்குறிச்சி, மெலட்டூர், திட்டை ஆகிய பகுதிகளில் நாற்று நட்டு 15 நாட்களே ஆன விளைநிலங்கள் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வயலில் மழைநீர் தேங்கியிருப்பதால், நடவு செய்யாமல் விவசாயப்பணியை நிறுத்தி வைத்துள்ளனர். இந்தாண்டு, துார் வாரும் பணியின் போது பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலை மட்டும் துார்வாரி விட்டு, வடிகால் வாய்க்காலை துார் வாராமல் விட்டு விட்டனர். இதனால் பெய்து வரும் பலத்த மழையினால் வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் வடியாமல் வயலிலேயே தேங்கி நிற்கின்றது.

இதனால் நாற்றாங்காலிலுள்ள நாற்றுக்களை பறித்தாலும், அந்த நாற்றுக்களை, வயல்களில் நடவு செய்ய முடியாமல், கடந்த 4 நாட்களாக போட்டு வைத்துள்ளனர். மழை நீரில் முழ்கி நாற்றுக்கள் இருப்பதால், இளம் நாற்றுக்கள் அனைத்தும் அழுகி வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் தாலுக்காவில் உள்ள சுமார் 1000 ஏக்கருக்கு மேல், நடவு செய்ய முடியாமல், நாற்றுக்கள் அழுகி வருகின்றது. இதனால் நாற்றங்காலில் இந்து பறிப்பது, வயலில் வந்து போடுவது வரை ஏக்கருக்கு சுமார் ரூ. 10 ஆயிரம் வரை செலவாகியுள்ளது அனைத்தும் வீணாகி வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வடிகால் வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும், தவறும் படசத்தில் சம்பா, தாளடி சாகுபடி கேள்வி குறியாகும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 17 Oct 2021 3:26 AM GMT

Related News