/* */

புதுக்கோட்டையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

புதுக்கோட்டையில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் (22.12.2023) நடைபெற்றது.

பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது;மழையளவு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 807.10 மி.மீ. ஆகும். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி வரையில் 817.57 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. பருவம் வாரியாக இயல்பான மற்றும் பெறப்பட்டுள்ள மழையளவானது கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது. குளிர்கால பருவத்தில் (ஜனவரி, பிப்ரவரி) இயல்பான மழையாளவான 41.5 மி-மீ பதிலாக 59.11 மி.மீட்டருடன் 42.44 சதவீதம் கூடுதலாகவும், அதிகபட்சமாக பிப்ரவரி மாதத்தில் 58.49 மி.மீட்டர் கிடைக்கப்பெற்றுள்ளது.

கோடை கால பருவத்தில் (மார்ச், ஏப்ரல், மே) இயல்பான மழையளவான 90.5மி.மீட்டருக்கு பதிலாக 167.13 மி.மீட்டருடன், 84.7 சதவீதம் கூடுதலாகவும், அதிகபட்சமாக ஏப்ரல் (30.07 மி-மீ) மே (125.13 மி.மீ) மாதங்களில் கிடைக்கப்பெற்றுள்ளது. தென்மேற்கு பருவ மழை (ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர்) காலத்தில் இயல்பான மழையளவான 303.5 மி-மீட்டருக்கு பதிலாக 295.4 மி.மீட்டருடன் 2.7 சதவீதம் குறைவாக மழை பெறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை (அக்டோபர், நவம்பர், டிசம்பர்) காலத்தில் இயல்பான மழையளவான 371.60 மி.மீட்டருக்கு பதிலாக இதுவரையில் 295.92 மி.மீட்டர் 19.8 சதவீதம் மழை குறைவாக பெறப்பட்டுள்ளது.

பயிர்ச் சாகுபடி விவரம், 2023-2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் முடிய நெல் 90558 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 1890 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 1552 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 4491 எக்டர் பரப்பளவிலும், கரும்பு 1554 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 19 எக்டர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 13109 எக்டர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இடுபொருட்கள் இருப்பு, மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 114.401 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 26.605 மெ.டன் பயறு விதைகளும், 21.207 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 4.100 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0.817 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்திடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகள் மழையளவு நீர் இருப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடப்பு மார்கழி பட்டத்தில் குறைந்த அளவு நீர் தேவைப்படும் கேழ்வரகு, நிலக்கடலை, எள், உளுந்து ஆகிய பயிர்களை தேர்வு செய்து சாகுபடி மேற்கொள்ள திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உர இருப்பு விவரம், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு டிசம்பர் 2023 மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத் திட்ட இலக்கின்படி 3220 மெ.டன்களுக்கு, இதுவரை 1688 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குத் தேவையான டி.ஏ.பி. உரம் 450 மெ.டன்களுக்கு 369 மெ.டன் வரப்பெற்றுள்ளது. பொட்டாஷ் உரம் 0 மெ.டன்களுக்கு 523 மெ.டன்களும், காம்ப்ளக்ஸ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கான 1850 மெ.டன்களுக்கு இதுவரை 1598 மெ.டன் பெறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 5881 மெ.டன்னும், டிஏபி 700 மெ.டன்னும், பொட்டாஷ் 2123 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 5963 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மட்டும் 1015 மெ.டன் யூரியா, 127 மெ.டன் டிஏபி, 469 மெ.டன் பொட்டாஷ், 842 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

டிஏபிக்கு பதிலாக எம்ஏபி மாற்று உரம், மோனோ அமோனியம் பாஸ்பேட் என்ற 11 சதம் தழைச்சத்து 52 சதம் மணிச்சத்துடன் தற்பொழுது விற்பனை செய்யப்படும் எம்ஏபி உரத்தினை டிஏபி-க்கு பதிலாக வாங்கி பயன்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு தழைச்சத்து உரம் தேவையான அளவு கிடைப்பதோடு மணிச்சத்து அதிகளவில் கிடைப்பதனால் பயிர் வளர்ச்சி சீராகவும், பூச்சிநோய் தாக்குதல் குறைவாகவும், அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் எம்ஏபி உரத்தினை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் அமைக்கப்பட்டது. 47 தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை 28 தரிசு நிலத்தொகுப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு 30 தொகுப்பில் பழ மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டு, 1374 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டு, 74 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட 74 தரிசு நில தொகுப்புகளில், 65 தொகுப்புகள் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு 37 தொகுப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2023 - 24 ஆம் ஆண்டு 98 பஞ்சா2த்துக்களில் இதுவரை 14 தரிசு நிலத் தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது. எனவே, விவசாயிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானியத் திட்டங்களை பெறுவதற்கு வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நடப்பு ஆண்டு இத்திட்டத்தில் 98 கிராம பஞ்சாயத்துக்களில் மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டு ரபி பருவத்தில் நெல் – III(நவரை), மக்காச் சோளம் – III, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்கள் சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில் விவசா யிகள் அனைவரும் ரபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள மேற்குறிப்பிட்ட அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள வருவாய் கிராமம் குறுவட்டம், ஆகியவை அறிந்து காப்பீடு (Insurance) செய்து இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து வருவாய் இழப்பினை ஈடு செய்துகொள்ள பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயிர் காப்பீடு பதிவு (Enrolment) செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏக்கருக்கு விவசாயிகள் பிரீமியம் தொகையாக நெல் – III ரூ.513, மக்காச்சோளம் – III ரூ.436.42, நிலக்கடலை – ரூ.423, கரும்பு – ரூ.2600 செலுத்தி காப்பீடு பதிவு செய்ய கடைசி நாளான நெல் – III (நவரை) – 29.02.2024 நிலக்கடலை, மக்காச்சோளம் – III – 31.01.2024, கரும்பு – 30.03.2024க்குள் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பயிர் காப்பீடு பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பயிர் காப்பீடு பதிவின் போது அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள், (1) அடங்கல் (நெல்-II). 2023-24 – 1433 பசலி ஆண்டு சாகுபடி, (2) சிட்டா நகல், (3) வங்கி கணக்கு புத்தக நகல், (4) ஆதார் அட்டை நகல், (5) முன்மொழிவு படிவம், (6) பதிவு படிவம் முதலியன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளின் கௌரவ நிதித் திட்டத்தின்கீழ் (PMKISAN) 1,41,290 விவசா யிகள் பதிவு செய்து பயன் பெற்றுவருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் 01.02.2019 க்கு முன்பு நேரடி பட்டா உள்ள விவசாயி களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000/- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.6000/- மூன்று தவணைகளாக ஏப்ரல் - செப்டம்பர், ஆக்ஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து DBT Mode -ற்கு மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 4702 பயனாளிகள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். மேலும்; விவசாயிகள் விரைந்து e-KYC-யினை பதிவேற்றம் செய்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2992 பயனாளிகள் e-KYC பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். PM-KISAN திட்டத்தில் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் வரும் 30.12.2023க்குள் e-KYC பதிவேற்றம் செய்திட கேட்டுக் கொள்ளப் படுகிறது. மேற்கூறிய நிபந்தனைகளை விரைந்து முடிக்கும் பொருட்டு 01.12.2023 முதல் 15.01.2024 வரை PMKISAN செறிவூட்டல் முணைப்பு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இந்த இயக்கத்தில் கிராமங்கள் தோறும் கிராம பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை தெரிந்துகொள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும். தகுதி உள்ள விவசாயிகள் தங்கள் கிராம பொறுப்பு அலுவலர்களை அணுகி தவணைத் தொகை ஏன் வரவு வைக்கப்படவில்லை என்பதை தெரிந்துகொண்டு அதனை நிவர்த்தி செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் துளி நீரில் அதிக பயிர் - நுண்ணீர்ப் பாசனத் (RKVY) திட்டத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம் மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகள் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

2023-2024 ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2545 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 2797 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் அமைக்க பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் மொத்தம் 22404 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நடப்பு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது வளர்ச்சிப்பருவம் மற்றும் பூபருவத்தில் உள்ளது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக பயிர்கள் பாதிப்படைந்து பயிர் மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். எனவே, வயலில் இருக்கும் அதிகப்படியான நீரினை வடித்து விட்டு, கீழ்கண்ட விவரப்படி விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை வழங்கிட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உதவி வேளாண்மை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இளம் பயிர்களுக்கு 1 கிலோ ஜிங்க் சல்பேட், 2 கிலோ யூரியா உடன் 200 லிட்டரில் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழியாக தெளிக்க வேண்டும். பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்து 17 கிலோ பொட்டாஷ் கலந்து இட வேண்டும். தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு, 1.4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊரவைத்து மறுநாள் வடிக்கட்டி, கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தினை, 190 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும், இவ்வாறு செய்வதினால் மகசூல் இழப்பில் இருந்து பயிரை காப்பாற்றாலாம்.

பயிர் பாதுகாப்பு, பூச்சி / நோய் மேலாண்மையின்போது விவசாயிகள் தேவைக்கு அதிகமாகத் யூரியா போன்ற தழைச்சத்து உரங்கள் இடுவதைத் தவிர்த்து, பிரித்துப்பிரித்து, அதாவது ஒரு தெளிப்பிற்கு ஏக்கர் ஒன்றுக்கு 26 கிலோவிற்கு மிகாமல் யூரியா இட வேண்டும். இயற்கையாகவே நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையினை அதிகரித்திட வரப்பில் உளுந்து, தட்டைப்பயறு போன்ற பயறுவகைப் பயிர்களைச் சாகுபடி செய்திடவும், ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்திடவும் வேண்டும்.

புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட ஏக்கருக்கு புப்ரோபெசின் 25 SC என்ற மருந்து 300 மி.லி. அளவும், இலைச்சுருட்டுபுழு மற்றும் தண்டுத்துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்திட குளோரான்டிரானிலிபுரோல் 24 SC 40 மி.லி அல்லது புளுபென்டையமைடு 39.45 EC 40 மி.லி அளவும், குலைநோயைக் தாக்குதலைக் கட்டுப்படுத்திட டிரைசைக்ளோசோல் 75 டபிள்யு.பி. என்ற மருந்து 200 கிராம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு தேவையான 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

உழவன் செயலி, வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானியத்திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் உழவன் செயலியினை பயன்படுத்தி மானியத் திட்டங்களில் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை பெறுவதற்கு முன் பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு Google Play store- இல் UZHAVAN என உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திடவும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளவும். மேலும், உழவன் செயலி மூலம் கூடுதலாக விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இருப்பு விவரம், மானியத் திட்டங்கள், உதவி வேளாண்மை அலுவலர் வருகை குறித்த தகவல், வானிலைச் செய்திகள், பயிர்க் காப்பீட்டு விவரங்கள் உள்ளிட்ட 24 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. பயிர் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை உழவன் செயலி மூலம் படம் பிடித்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் தங்களுடைய அலைபேசிக்கு உரிய பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்படும். எனவே, விவசாயிகள் உழவன் செயலினை பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) திரு.மரியரவி ஜெயக்குமார், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) திருமதி.ஆர்.ரம்யாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.ரவிச்சந்திரன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Dec 2023 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!