/* */

ஹெல்மெட் அபராதம்: ஆத்திரத்தில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குப்பை கொட்டிய ஊழியர்

அபராதம் விதித்ததற்காக, போலீஸ் ஸ்டேஷன் முன்பு குப்பை கொட்டியது உறுதியானால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

HIGHLIGHTS

ஹெல்மெட் அபராதம்: ஆத்திரத்தில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குப்பை கொட்டிய ஊழியர்
X

நாமக்கல் போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பு, நகராட்சி பணியாளர்களால் கொட்டப்பட்டிருந்த குப்பை.

.நாமக்கல்லில் ஹெல்மெட் அணியாத நகராட்சி அலுவலருக்கு அபராதம் விதிக்கப்பட்ட ஆத்திரத்தில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு குப்பை கொட்டிய நகராட்சி ஊழியர்களின் செயல் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய து.

நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், போக்குவரத்து போலீசார் தினசரி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறி டூ வீலரில்ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், செல் போன் பேசிக்கொண்டு செல்பவர்கள், ஒரே வாகனத்தில் 2 பேருக்கும் அதிகமாக பயணம் செய்பவர்கள், லைசென்ஸ் இல்லாமல் செல்பவர்கள், போக்குவரத்து சிக்னலை மீறி செல்பவர்கள் போன்றவர்களை தடுத்து நிறுத்தி, ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர். சில நேரங்களில் விதி மீறி செல்பவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது வழக்கம்.

இந்த நிலையில், நாமக்கல் போலீஸ் ஸ்டேசன் அருகில், திருச்சி சாலை சந்திப்பில், போக்குவரத்து போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாமக்கல் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் கந்தசாமி, டூ வீலரில் ஹெல்மெட் அணியாமல் அவ்வழியாக சென்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், ஹெல்மெட் அணியாமல் சென்ற குற்றத்திற்காக, வழக்குப் பதிவு செய்து, ரூ. 1,000 ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. நான் நகராட்சி பணியாளர். என் மீது எப்படி வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கலாம் எனக்கேட்டு, கந்தசாமி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆன்லைனில் அபராதம் விதித்துள்ளதால் அதை கைவிடமுடியாது என்று போலீசார் கூறிவிட்டனர். அதையடுத்து, அபராதத்தை கட்டிவிட்டு, அங்கிருந்து கந்தசாமி சென்று விட்டார். இந்நிலையில், ஆத்திரம் அடைந்த கந்தசாமி, மாலை 3 மணிக்கு, நகராட்சி வாகனத்தில் குப்பையைக் கொண்டு வந்து, நாமக்கல் போக்குவரத்து போலீஸ் ஸ்டேசன் முன்பு, கொட்டிவிட்டு சென்றுவிட்டார்.

அதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள், துர்நாற்றத்தை தாங்க முடியாமல், மூக்கைப் பிடித்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து போலீசார் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த நகராட்சி பணியாளர்கள், அங்கிருந்த குப்பையை அகற்றி சுத்தம் செய்தனர்.

ஹெல்மெட் அணியாமல் சென்றதால், போலீசார் அபராதம் விதிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளாத, நகராட்சி அலுவலர், போலீஸ் ஸ்டேசன் முன்பு, குப்பையை கொட்டி வஞ்சம் தீர்த்துக் கொண்ட சம்பவம், நாமக்கலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, நாமக்கல் நகராட்சி கமிஷனர் சுதாவிடம் கேட்டபோது, சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். போக்குவரத்து போலீஸ் ஸ்டேசன் முன் குப்பை கொட்டியதாக துப்புரவு மேற்பார்வையாளர் கந்தசாமி மீது புகார் எழுந்துள்ளது. அது தொடர்பாக, விளக்கம் கேட்டு அவருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. அவர் தனக்கு அபராதம் விதித்ததற்காக, போலீஸ் ஸ்டேஷன் முன்பு குப்பை கொட்டியது உறுதியானால், அவர் மீது கண்டிப்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 29 Nov 2022 5:11 AM GMT

Related News