/* */

மலை கிராமங்களில் 100% தடுப்பூசி போட நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மலைக் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தர்மபுரி மாவட்டத்தில் 872 இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 7 வரை நடைபெற்ற இந்த முகாமில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற துறை பணியாளர்கள் என மொத்தம் 3900 பேர் இந்த முகாம் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்கள், குக்கிராமங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற 872 சிறப்பு முகாம்களில் மொத்தம் 43,526 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த இலக்கையும் தாண்டி மொத்தம் 49,136 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் உள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அந்தந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் அனைவரும் இந்த முகாமை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்படி நேற்று தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 210 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

இதனிடையே தர்மபுரி அடுத்த பழைய தர்மபுரி சமுதாயக் கூடம் மற்றும் காரிமங்கலம் காந்தி பார்க் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முகாம்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி விளக்கம் அளித்தார். அந்தந்த பகுதிகளில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் யார் என்பதை கணக்கிட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது முன்னாள் எம்.எல்.ஏக்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.என்.பி. இன்பசேகரன், முன்னாள் எம்.பி., எம்.ஜி.சேகர், பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம், கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மலர்விழி வள்ளல், தாசில்தார்கள் ராஜராஜன், சின்னா, தி.மு.க. நிர்வாகிகள் பி.சி.ஆர்.மனோகரன், அன்பழகன், தங்கமணி, நாட்டான்மாது, மாதையன்,ஊராட்சி மன்ற தலைவர் சிவலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

பழைய தர்மபுரி மற்றும் காரிமங்கலத்தில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தர்மபுரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய 7 லட்சத்து 59 ஆயிரத்து 658 பேர் கொரோ னா தடுப்பூசி போட தகுதி படைத்தவர்கள். இவர்களில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 540 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 1 லட்சத்து 42 ஆயிரத்து 748 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 12- ந்தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 49 ஆயிரத்து 136 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது நடந்துள்ள இரண்டாம் கட்ட முகாமில் 22 ஆயிரத்து 16 பேருக்கு தடுப்பூசி போடும் இலக்கு எட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு 1 கோடியே 4 லட்சம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளது. இன்றுடன் (நேற்று) 1 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்கள் இருப்பதால் இலக்கை தாண்டி கூடுதல் தடுப்பூசி போடப்படும்.தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப் பட்ட நிலையில் 83 மாணவர்களுக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயப்பட வேண்டிய தேவையில்லை. கடந்த 1 ஆண்டிற்கு மேலாக பள்ளிகள் செயல்படாததால் மன அழுத்தம், கல்விச் சுமை ஆகியவற்றில் இருந்த மாணவர்கள் தற்போது பள்ளிக்கு வர தொடங்கி உள்ளார்கள். எனவே மாணவர்கள், பெற்றோரை அச்சபடுத்த கூடாது.

கல்லூரிகளில் சேரும் 17 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.

தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மலை கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும் இளவயது திருமண தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மலை கிராமங்களில் முழுமையாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. இன்று (நேற்று) 15 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை தாண்டி 15 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் தீர்ந்து இருப்பதால் நாளை (இன்று) தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது.

மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்பியவுடன் மீண்டும் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசிகள் போதிய அளவில் இருந்திருந்தால் தற்போது நடந்த முகாமில் 50 லட்சம் பேருக்கு கூட தடுப்பூசி போட்டு இருக்க முடியும். தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் போட கட்டமைப்பு வசதி இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். எனவே இந்த மாவட்டத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 80 ஆயிரம் மருத்துவத்துறை சார்ந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பணி வரன்முறை செய்வதில் கொரோனா காலத்தில் மருத்துவ பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Updated On: 22 Sep 2021 7:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்