/* */

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 536 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 536 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் நாசர், செஞ்சி மஸ்தான் வழங்கினர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 536 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் நாசர், செஞ்சி மஸ்தான் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் 536 பயனாளிகளுக்கு ரூ.46,28,641 மதிப்;பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான்.திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.

அப்பொழுது சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் பேசும்போது

சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதற்காக பெண்களுக்கு உதவும் சங்கங்கள் சார்பாக வங்கி கடன் வழங்குகின்ற திட்டமும், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். உலமாக்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் இதுவரையில் 10,000-க்கும் மேற்பட்ட நபர்கள் கடந்த ஆண்டு கணக்குப்படி பதிவு செய்துள்ளார்கள். இந்த ஆண்டு சேர்ந்து கொண்டுருப்பவர்களின எண்ணிக்கை 5,000-த்திற்கும் மேற்பட்டோர் ஆக உள்ளது. கடந்த ஆண்டு யார் பதிவு செய்துள்ளார்களோ அவர்களுக்கு முதல் கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கீடு செய்து 10,518 நபர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்கள். அதுபோல் கிறிஸ்தவ மக்கள் புனித பயணமாக ஜெருசலம் செல்வதற்கு இணை மானியமாக ஆண்களுக்கு ரூ. 32,000-ம், பெண்களுக்கு ரூ. 60,000 இணை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக புனித பயணம் மேற்கொள்ள பதிவு செய்து கொள்ளலாம்.அந்த வகையில், இதுவரை 181 நபர்கள் துறை சார்ந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்றைய தினம் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் உலமாக்கள் நலவாரியம் மூலமாக 196 ஏழை-எளிய கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் மகளிர் தொழில் தொடங்க ரூ.28,77,000 மதிப்பீட்டில் நிதியுதவி, 320 உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.16,48,131 மதிப்பீட்டிலான இலவச மிதிவண்டிகள், 10 நபர்களுக்கு தலா ரூ.4,871 வீதம் ரூ.48,710 மதிப்பீட்டிலான சலவைப் பெட்டிகள், 10 நபர்களுக்கு தலா ரூ.5,480 வீதம் ரூ.54,800 மதிப்பீட்டிலான விலையில்லா தையல் இயந்திரங்கள் என மொத்தம் 536 நபர்களுக்கு ரூ.46,28,641 மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்றார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக "நம்ம ஊரு சூப்பரு" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் தரம் பிரித்தல் குறித்த கண்காட்சி அரங்கினை பால்வளத்துறை அமைச்சர் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் திறந்து வைத்து, பார்வையிட்டு, செல்ஃபி ஸ்டேண்டில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Updated On: 24 Aug 2022 5:00 AM GMT

Related News