/* */

சிவராத்திரியை முன்னிட்டு திருச்சி சிவன் கோவில்களில் விடிய விடிய பூஜை

சிவராத்திரியை முன்னிட்டு திருச்சியில் சிவன் கோவில்களில் விடிய விடிய பல்வேறு அபிஷேகத்துடன் பூஜைகள் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

சிவராத்திரியை முன்னிட்டு திருச்சி சிவன் கோவில்களில் விடிய விடிய பூஜை
X

சிறப்பு அலங்காரத்தில் சிவலிங்கம்.

ஆண்டுதோறும் மாசி மாதம் தேய்பிறை திரயோதசி மற்றும் சதுர்த்தசி சந்திக்கும் நாள் இரவு மகாசிவராத்திரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் 4 கால சிறப்பு பூஜைகளும், சிறிய கோவில்களில் 6 கால சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

அதன்படி, திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி 4 கால பூஜைகள் நடைபெற்றது. அப்போது பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் பஞ்சோபசார தீபங்கள் காட்டி பூஜைகள் நடைபெற்றது.

கோவில் கொடிமர மண்டபம் மற்றும் கண்ணுக்குட்டி மண்டபத்தில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் நான்கு காலங்களிலும் சிவபூஜை நடத்தினர். இதில் விரும்புவோருக்கு சிவதீட்சை அளிக்கப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள நவராத்திரி கலை விழா மண்டபத்தில் இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து மகா சிவராத்திரியான நேற்று இரவு 4 கால பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக ஒவ்வொரு கால பூஜைக்கும் பல்வேறு அபிஷேகங்கள் முடிந்து சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிவராத்திரியை விளக்கும் வகையில் இன்று காலை வேடன் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கோவிலில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதேபோல, உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் 4 கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அத்துடன் முதற்கால பூஜை முடிந்ததும் ருத்ரயாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல நாகநாதசுவாமி கோவில், பூலோகநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் விடிய, விடிய அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றது.

அதே போல பெரியகடை வீதியில் உள்ள கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவிலில் 6 கால பூஜைகள் நடைபெற்றது. சுப்பிரமணியபுரம் புதுக்கோட்டை சாலையில் உள்ள நவசக்தி மாணிக்க விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதர் சன்னதியில் சுவாமிக்கு 4 காலமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 March 2022 4:33 AM GMT

Related News