/* */

துறையூர் அருகே இடிதாக்கி துணை மின் நிலையத்தில் தீ, டிரான்ஸ்பார்மர் சேதம்

துறையூர் அருகே துணை மின் நிலையத்தில் இடி தாக்கியதில் டிரான்ஸ்பார்மர் தீ பிடித்து எரிந்தது. இதனால் 25 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.

HIGHLIGHTS

துறையூர் அருகே  இடிதாக்கி துணை மின் நிலையத்தில்  தீ, டிரான்ஸ்பார்மர் சேதம்
X

துறையூர் அருகே இடி, மின்னல் தாக்கியதில் துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் தீ பிடித்து எரிந்தது.

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே கொப்பம்பட்டி பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. 110 மெகாவாட் மின்திறன் கொண்டதாகும். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் கொப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்போது பயங்கர இடி, மின்னலுடன் மழை கொட்டியது.

இதில் கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்த ஒரு டிரான்ஸ்பார்மரில் இடி விழுந்தது. இடி விழுந்த அடுத்த நொடியே டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது. இதன் காரணமாக டிரான்ஸ்பார்மர் முழுவதும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்ததால் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தனர்.

மேலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் துணை மின் நிலையத்தில் உள்ள மற்ற ட்ரான்ஸ்ஃபார்மர்களுக்கும் தீ பரவும் என்ற அச்சம் இருந்தது.

அதோடு டிரான்ஸ்பார்மரில் பயன்படுத்தப்படும் ஆயில் வெடித்து சிதறும் என்பதால் கொப்பம்பட்டி துணை மின் நிலையம் அருகே தோட்டத்தில் குடியிருந்த மக்கள் ஆடு, மாடுகளை அவிழ்த்துக்கொண்டு ஊருக்குள் தஞ்சமடைந்தனர். இரவு நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியேசெவ்வானமாக காட்சியளித்தது.

தகவலறிந்த துறையூர், உப்பிலியாபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தும், ரசாயன பவுடரை தூவியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர்.

இந்த தீ விபத்து காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வைரிசெட்டிபாளையம், நாகநல்லூர், டி.பாதர்பேட்டை, மங்களாபுதூர், சோபனபுரம், ஓரப்பள்ளி, ரெங்கநாதபுரம், பச்சமலை உப்பிலியாபுரம், பி.மேட்டூர் உள்பட 25 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். துணை மின்நிலையத்தில் தீ விபத்து காரணமாக பலத்த சேதம் அடைந்திருப்பதால் மின்வினியோகம் எப்போது தொடங்கும் என்று உறுதியாகக் கூற முடியாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 4 Jun 2021 6:14 PM GMT

Related News